Published:Updated:

ஆசிரியர் கண்டித்தாரா... தண்டித்தாரா?

வேலூர் வில்லங்கம்

ஆசிரியர் கண்டித்தாரா... தண்டித்தாரா?

வேலூர் வில்லங்கம்

Published:Updated:
##~##
ஆசிரியர் கண்டித்தாரா... தண்டித்தாரா?

'மாணவர்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும், அவர்களின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு சொல்லித் தர வேண்​டும், அவர்கள் நமது குழந்தைகள் போல’ என்று பள்ளி ஆசிரியர்களுக்கு வழி காட்ட​ வேண்டியது, தலைமை ஆசிரியரின் பணி. ஆனால், தலைமை ஆசிரியர் ஒருவரே, கண்மூடித்தனமாக மாணவனைத் தாக்கி இருப்பதுதான் வேலூரை பரபரப்பாக்கி இருக்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

குடியாத்தம் பகுதியில் உள்ள செயின்ட் ஜான் மெட்ரிக்குலேசன் பள்ளியில்தான் இந்த சம்ப​வம் நடந்துள்ளது. குடியாத்தம் அரசு மருத்து​வ​மனையில் சிகிச்சை பெற்றுவரும் 12-ம் வகுப்பு மாணவனான பிரதாப் சிங்கைப் பார்த்தோம். இன்னமும் பேச முடியாத நிலையில் இருந்தார். அதனால் நடந்த சம்பவங்களை நம்மிடம் விவரித்தார் பிரதாப் சிங்கின் தந்தை கருணா சிங்.

ஆசிரியர் கண்டித்தாரா... தண்டித்தாரா?

''நான் சென்னையில் பிரைவேட் கம்பெனி​யில் டிரைவராக வேலை பார்க்கிறேன். என் மனைவியும் செயின்ட் ஜான் ஸ்கூல்லதான் டீச்சரா இருக்காங்க. என் மகனை, போன வருடம்​தான் இந்த ஸ்கூலில் 11-ம் வகுப்பு சேர்த்தோம். மனைவியும் அங்கே வேலை செய்வதால், நல்ல கண்காணிப்பு இருக்கும்,

ஆசிரியர் கண்டித்தாரா... தண்டித்தாரா?

அவன் 12-ம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுப்பான் என்று நினைத்தேன். போன 13-ம் தேதி ஸ்கூலுக்குப் போயிருக்கான். மாலை 4 மணிக்கு ஸ்கூல் விடும் நேரத்தில், பள்ளி முதல்வர் ஜெயராணி வகுப்பறைக்கு வந்திருக்காங்க. அங்கிருந்த பசங்க கிட்ட, 'நம்ம ஸ்கூல் பத்தி உங்க கருத்துகளை எழுதிக் கொடுங்க. உங்களுக்கு ஐந்து நிமிடங்கள் அவகாசம்’ என்று சொல்லி இருக்கிறார். திடீர் என்று பள்ளி முதல்வர் வந்து கேட்டதால், மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்திருக்கிறார்கள். மற்ற பையன்கள் எதையோ கிறுக்கிக் கொடுத்திருக்காங்க.

ஆசிரியர் கண்டித்தாரா... தண்டித்தாரா?

என் பையன், 'என்ன எழுதறதுன்னு தெரிய​லை மேடம். யோசிச்சு நாளைக்கு வரும்போது எழுதிக் கொண்டுவர்றேன்’னு சொல்லி இருக்கான். கோபம் அடைந்த ஜெயராணி ,பக்கத்தில இருந்த ரீப்பர் கட்டையை எடுத்து தலை, கை, கால்னு கண்டபடி ஆக்ரோஷத்​துடன் அடித்து இருக்கார். சிறிது நேரத்திலேயே அவரது அடியைத் தாக்குப்பிடிக்க முடியாமல், என் மகன் அங்​கேயே மயக்கம் போட்டு விழுந்திருக்கான். அவனை எழுப்பிய ஜெயராணி, 'இதைப் பத்தி யாருகிட்டயும் சொல்லக் கூடாது’னு என் மகனையும் மற்ற மாணவர்களையும் மிரட்டி அனுப்பி இருக்கிறார்.

அவன் வீட்டுக்கு வரும் போதே பயந்தபடி, தள்ளாடியபடி வந்தான். நெத்தியில் காயம் இருந்தது, காய்ச்சலும் அடிச்சது. உடனே அவனை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, குடியாத்​தம் டவுன் போலீஸில் தலைமை ஆசிரியர் மீது புகார் கொடுத்தோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்​கையும் எடுக்கவில்லை. அவர்களுக்குச் சாதகமாகத்தான் முதல் தகவல் அறிக்கையை  எழுதி இருக்காங்க. இந்தப் புகாரை வாபஸ் வாங்கவில்லை என்றால் என் மகனின் எதிர்காலம் பாழாகி​விடும்

ஆசிரியர் கண்டித்தாரா... தண்டித்தாரா?

என்று நிறையப் பேர் எனக்கு எச்சரிக்கை செய்​கிறார்கள். ஆனால், நான் வாபஸ் வாங்குவதாக இல்லை. என் மகனை இந்த நிலைக்கு ஆளாக்​கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது​தான் வேறு எந்த மாணவனுக்கும் இப்படி ஒரு நிலை வராது'' என்றார் வருத்தத்துடன்.

மாணவனின் தாய் சிசீலியா, ''நான் அந்த ஸ்கூல்லதாங்க எல்.கே.ஜி. டீச்சரா வொர்க் பண்ணுறேன். ஒரு வருஷத்துக்கு முன்னாடிதான் ஜெயராணி பள்ளி முதல்வரா பொறுப்புக்கு வந்தாங்க. இந்த ஒரு வருஷத்​துல மட்டும் 21 டீச்சர்கள் உட்பட 34 பேர் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்​காங்க. இதற்கு எல்லாம் ஜெயராணிதான் காரணம். விடுமுறை கேட்டுப் போனால், அதற்குரிய பதில் கூட சொல்ல மாட்டாங்க. எங்க பையனின் டி.சி-யைக் கொடுங்கள் என்று கேட்டதுக்கும் பதில் தராமல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறார்கள். ஸ்கூல்ல இருந்து சில பேர் வந்து, 'ஒரு லட்ச ரூபாய் தர்றோம், புகாரை வாபஸ் வாங்குங்க’னு சொல்றாங்க. எங்களுக்குப் பணம் தேவை இல்லைங்க. நியாயம்தான் முக்கியம்'' என்றார் கண்ணீருடன்.

பள்ளி முதல்வரான ஜெயராணியிடம் பேசினோம். ''எனக்கு 50 வயசு ஆகிறது. பள்ளியில் எல்​லோ​ரிடமும் ரொம்பவும் அன்புடனும் அக்கறை​யுடனும்தான் இருப்பேன். புகார் கொடுத்த அந்த மாணவன் லேப்பில் தீக்குச்சி​யைப் பற்ற வைத்து, டீச்சர் மீது எறிந்து இருக்​கிறான். அதை விசாரிக்கத்தான் போ​னேன். அதையும் பொறுமையாகத்தான் விசா​ரித்​தேன். என் விரல்கூட அவன் மேல் படவில்லை.  வேண்டும் என்றே பள்ளியின் பெயரையும் எனது பெயரையும் கெடுக்க நினைக்கிறார்கள். இந்தப் பள்ளியில் இருந்து வெளியே சென்றவர்கள், அத்தனை பேரும், அவர்கள் சொந்த விருப்பத்தின் பேரில்தான் சென்றார்கள். பொய்​யான குற்றச்சாட்டுகளைச் சொல்லும் மாணவனின் குடும்பத்தின் மீது மான நஷ்ட வழக்கு தொடரலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்!’ என்றார்!

குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் விசாரித்தோம். ''பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரித்து வருகிறோம். பள்ளியிலும் சம்​பந்தப்​பட்ட மாணவர்​களிடமும் விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்து இருப்பது தெரிந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றனர்.

புனிதமான ஆசிரியர் - மாணவர் உறவில் ஏன் இத்தனை சிக்கலோ?

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்