Published:Updated:

மாலையில் தீப்பிடித்து இருந்தால்..?

நாகை டாஸ்மாக் அதிர்ச்சி

மாலையில் தீப்பிடித்து இருந்தால்..?

நாகை டாஸ்மாக் அதிர்ச்சி

Published:Updated:
##~##
மாலையில் தீப்பிடித்து இருந்தால்..?

போதிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வில்லை என்றால், விபத்து எப்படி வேண்டுமானாலும் நிகழும் என்பதற்கு ஓர் உதாரணம், நாகையில் எரிந்த டாஸ்மாக்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நாகப்பட்டினம் ரயில் நிலையத்துக்கு எதிரே இருக்கிறது சாந்தி லாட்ஜ். இதன் கீழே டாஸ்மாக் கடையை ஒட்டி, பிளைவுட்களால் தடுக்கப்பட்ட பார். அதற்கு அருகே உள்ள படிக்கட்டு வழியாகத்தான் மேலே உள்ள லாட்ஜுக்குச் செல்ல வேண்டும். அங்கே தங்கி இருந்த இருவர், இந்த டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி அநியாயமாகப் பலியாகி உள்ளனர்.

''கடந்த 22-ம் தேதி  காலைல அஞ்சு மணி இருக்கும். படீர்னு சத்தம் கேட்டுச்சு. ஏதோ டிரான்ஸ்ஃபார்மர்தான் வெடிச்சுடிச்சுனு நினைச்சோம். குபுகுபுன்னு புகை. சாந்தி லாட்ஜ்ல இருக்கிற டாஸ்மாக் பார்ல தீப்பிடிச்சு, மளமளன்னு டாஸ்மாக் கடைக்குள்ளேயும் பரவிடுச்சு. அங்கே இருந்த பாட்டில் எல்லாம் வெடிச்சு சிதற ஆரம்பிச்சுது. வெடிச் சத்தம் மற்றும் புகையைப் பார்த்துப் பயந்து, லாட்ஜில் தங்கி இருந்த பலரும் பின்பக்கக் கண்ணாடியை உடைச்சுத் தப்பிச்சுட்டாங்க. படி வழியா இறங்கி ஓடி வந்த அஸ்ஸாமைச் சேர்ந்த தபீக்குல் அலி என்பவர் மீது தீ பற்றிக்கொண்டது. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அடுத்த நாள் இறந்து விட்டார்.

மாலையில் தீப்பிடித்து இருந்தால்..?

தீயணைப்பு வண்டிகள் வந்து, தீயை முழுசா அணைச்சாங்க. பிறகு, மேலே லாட்ஜுக்குள் போய்ப் பார்த்தபோதுதான், புகையில் சிக்கி மூச்சுத் திணறி கேரளாவைச் சேர்ந்த பக்ருதீன் என்பவரும் இறந்து கிடந்தது தெரிந்தது'' என்கிறார், சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர்.

''லாட்ஜில் தங்கி இருந்த எல்லோரும் படிகளின் வழியாகத் தப்பிக்க நினைத்து இருந்தால் விளைவு இன்னும் பயங்கரமாக இருந்திருக்கும். இடுக்கான இடத்தில் லாட்ஜின் யு.பி.எஸ்., ஜெனரேட்டர் போன்றவற்றை வைத்திருந்தார்கள். அந்த மின்சாதனங்கள்தான் தீப்பிடிக்கக் காரணம். அதை ஒட்டித்தான் மாடிக்குச் செல்வதற்கான படியும் இருக்கிறது. பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பற்றி கொஞ்சம்கூட கவலையே இல்லாமல் டாஸ்மாக், பார், லாட்ஜ் ஆகிய மூன்றும் இயங்கி வந்திருக்கின்றன. இந்த விபத்து அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால் அதிக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. மாலையில் பரபரப்பாக பார் இயங்கி வரும் நேரம் ஏற்பட்டு இருந்தால் பயங்கர விளைவுகள் ஏற்பட்டிருக்கும்'' என்று தீயணைப்புப் படைவீரர் ஒருவர் வருத்தத்துடன் சொன்னார்.  

போலீஸ் தரப்பில் பேசியபோது, ''இது முழுக்க முழுக்க விபத்துதான். டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட மின்கசிவால் தீப்பற்றி இருக்கிறது. லாட்ஜ் மானேஜர் நவநீதன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறோம்'' என்று மட்டும் சொன்னார்கள்.

உயிர்கள் பறந்த பிறகு 'பாதுகாப்பு போஸ்ட் மார்ட்டம்' நடத்துவது என்பதுதான் இங்கே பொது விதியாகிவிட்டது! ஹூம்... எல்லாம் நம் தலைவிதி!

- கரு.முத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism