Published:Updated:

எப்போது வரும் சம்பத் கமிஷன் அறிக்கை?

அதிருப்தியில் பரமக்குடி

எப்போது வரும் சம்பத் கமிஷன் அறிக்கை?

அதிருப்தியில் பரமக்குடி

Published:Updated:
##~##
எப்போது வரும் சம்பத் கமிஷன் அறிக்கை?

ரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த ஆறு பேரின் ஓலக்குரல் இன்னமும் காற்றில் அலைந்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி நடந்தது அந்தக் கோரச்சம்பவம்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கலவரம் குறித்து, தமிழகத்தில் செயல்படும் மனிதஉரிமை அமைப்புகள் தங்கள் விசாரணை அறிக்கையை மக்கள் மத்தியில் வைத்து விட்டன. ஆனால், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷனின் விசாரணை இன்னமும் இழுத்துக் கொண்டேதான் இருக்கிறது.

பரமக்குடி சம்பவம் நடந்த நேரத்தில் சட்ட​சபையில் எதிர்க்கட்சிகளின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகு, நீதிபதி சம்பத் கமிஷனை அறிவித்த முதல்வர், 'இரண்டு மாதத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்யப்படும்’ என்றார்.

எப்போது வரும் சம்பத் கமிஷன் அறிக்கை?

'நீதிபதி சம்பத் கமிஷன் ஒரு கண்துடைப்பு கமிஷன். அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஓய்வு பெற்ற வெளிமாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகள் மூலம் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்’ என்று தலித் அமைப்புகள் அப்போது கோரிக்கை விடுத்தன. அதனால், பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நீதிபதி சம்பத் சென்றபோது, கறுப்புக்கொடி ஏற்றி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர் கிராம மக்கள்.

அதன்பிறகு, சாட்சிகளிடம் நேரடி விசாரணையை ஆரம்பித்தார் நீதிபதி. பரமக்குடி கலவரத்தை நேரில் பார்த்த அத்தனை செய்தியாளர்களும் புகைப்படக்​காரர்களும் விசாரிக்கப்பட்டனர். காயம்பட்ட காவல் துறையினர், பாதிக்கப்​பட்ட தலித் அல்லாதவர்களும் விசாரிக்கப்பட்டனர்.

எப்போது வரும் சம்பத் கமிஷன் அறிக்கை?

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் சம்பத் கமிஷனின் காலத்தை மேலும் இரண்டு

எப்போது வரும் சம்பத் கமிஷன் அறிக்கை?

மாதம் நீட்டிப்பு செய்து அரசு உத்தரவிட்டது. ஜூன் மாத இறுதிக்குள் விசாரணை முடிந்து, ஜூலை மாதத்தில் அரசிடம் அறிக்கை ஒப்படைக்கப்படுமா என்பதும் இப்போது சந்தேகம் என்பதுதான் உண்மை நிலை. இரண்டு மாதங்கள் கடந்தால் அடுத்த இமானுவேல் பூஜை நெருங்கி விடும்!

இதுசம்பந்தமாக, தியாகி இமானுவேல் பேரவை நிறுவனரும் பரமக்குடி துப்பாக்கி சூட்டுக்கு எதிரான அமைப்புகளின் ஒருங்கிணைப்​பாளருமான தோழர் சந்திரபோஸ் நம்மிடம் பேசினார். ''ஆரம்பத்தில் இருந்தே நீதிபதி சம்பத் கமிஷனை நாங்கள் எதிர்த்து வருகிறோம். அது ஒரு கண்துடைப்பு கமிஷன். அதனால், சாட்சி சொல்ல வரமாட்டோம் என்று மறுத்த பிறகும், ஆஜராகச் சொல்லி தொடர்ந்து கடிதம் அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். தமிழகத்தில் தலித் மக்களுக்கு எதிராக நடந்த சம்பவங்களுக்காக நியமிக்கப்பட்ட அத்தனை கமிஷன்களும் அரசுத் தரப்பைத்தான் நியாயப்படுத்தி இருக்கின்றன. தலித் மக்கள் மீதே குற்றம் சுமத்தின. உதாரணத்துக்கு, கீழ்வெண்மணி படுகொலைகளுக்கு நியமிக்கப்பட்ட கணபதியா பிள்ளை கமிஷன், கொடியங்குளம் கலவரத்துக்கு நியமிக்கப்பட்ட கோமதிநாயகம் கமிஷன், தாமிரபரணி படுகொலையை விசாரித்த மோகன் கமிஷன், போடி கலவரத்துக்காக போடப்பட்ட சதாசிவம் கமிஷன்... என எந்தக் கமிஷன்களுமே தலித் மக்களுக்கு நியாயம் வழங்கவில்லை. எனவே, இந்தக் கமிஷனைப் பற்றியும்  கவலைப்படவில்லை' என்றார்.

சம்பத் கமிஷன் விசாரணை ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் சி.பி.ஐ-யும் இந்தக் கலவர வழக்கைத் தனியாக விசாரித்து வருகிறது.

சி.பி.ஐ. விசாரணை வேண்டி உயர் நீதிமன்றத்தை நாடியவர்களில் தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் முக்கியப் பங்கு உண்டு. அதன், ராமநாதபுரம் மாவட் டச் செயலாளர் கலையரசனிடம் பேசினோம். ''தமிழக முதல்வர் தமிழகத்தில் தீண்டாமையே இல்லை என்கிறார். அவருடைய அமைச்சர்களும் சட்ட​சபையில் பொய் சொல்கிறார்கள். சமீபத்தில்கூட ராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் கிராமத்தில் இமானுவேல் படம் போட்ட திருமண வாழ்த்து ஃபிளக்ஸ் போர்டை ஆதிக்க சாதியினர் அடித்து நொறுக்கினர். நல்லிருக்கை கிராமத்திலும் இது போலவே நடந்துள்ளது. காவல்துறையால் கொல்லப்பட்ட ஆறு பேரின் ஊர்க்காரர்களுமே, 'நீதிபதி சம்பத் கமிஷன் மீது நம்பிக்கை இல்லை’ என்று சொன்ன பிறகும், தமிழக அரசு விடாப்பிடியாக இந்த நீதிவிசாரணையை நீட்டித்துக் கொண்டு இருக்கிறது. இதுநாள் வரை கலவரத்துக்குக் காரணமான காவல்துறையினர் ஒருவரைக் கூட சஸ்பென்ட் செய்யவில்லை. அதனால், நாங்கள் சி.பி.ஐ. விசாரணையைத்தான் மிகவும் நம்பி எதிர்பார்க்கிறோம்' என்றார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில், சம்பத் கமிஷன் விரைவில் அறிக்கை வழங்கும் என்றே நம்புவோம்!

- செ.சல்மான்

படம் : உ.பாண்டி

''நாங்கள் நினைத்திருந்தால்...''

கலவரத்துக்குக் காரணமானவராக சொல்லப்பட்ட ஜான் பாண்டியன், ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைய  தடைவிதித்து இருக்கிறது மாவட்ட நிர்வாகம். ஆனாலும் அவர் உள்ளே வர அனுமதி கேட்டார். 'பரமக்குடி, முதுகுளத்தூர் பகுதிகளுக்குச் செல்லக்கூடாது’ என்ற நிபந்தனையுடன் ராமநாத​புரத்தில் நிகழ்ச்சி நடத்திக்கொள்ள அனுமதி கொடுத்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 17-ம் தேதி ஜான்பாண்டியன் ராமநாதபுரத்துக்கு வந்தார். பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிதி வழங்கிய அவர், ''இமானுவேல் சேகரனின் விழாவுக்கு வரும் கூட்டத்தைக் கண்டு, பொறுத்துக்கொள்ள முடியாத சிலரின் சதியால்தான் ஆறு உயிர்கள் பலியாகின. போலீஸைப் போல நாங்களும் திட்டமிட்டிருந்தால், பரமக்குடி சுடுகாடாக ஆகி இருக்கும். உங்கள் கைகளில் இருந்த துப்பாக்கியை பிடுங்கித் திருப்பி சுட்டிருக்க முடியும். ஆனால், கலவரம் செய்வது எங்கள் நோக்கமல்ல. பசுபதிபாண்டியனைப் போல என்னையும் முடிக்க நினைக்கிறார்கள். நான் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தமும் அணுக்கதிர்களாக மாறி எதிரிகளைத் துளைத்தெடுக்கும். சி.பி.ஐ. விசாரணை மூலம் தவறு இழைத்தவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைக்காவிட்டால், ஒட்டுமொத்த தேவேந்திர குல மக்களைத் திரட்டி போராடுவேன்'' என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்!

- இரா.மோகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism