Published:Updated:

கிடைத்தது விடுதலை... தொடர்கிறது போராட்டம்!

செங்கல்பட்டு சிறப்பு முகாம் நிலவரம்

கிடைத்தது விடுதலை... தொடர்கிறது போராட்டம்!

செங்கல்பட்டு சிறப்பு முகாம் நிலவரம்

Published:Updated:
##~##
கிடைத்தது விடுதலை... தொடர்கிறது போராட்டம்!

'எங்களை சிறப்பு முகாமில் இருந்து விடுவிக்க வேண்டும்’ என்று கடந்த 15-ம் தேதி செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டம் படிப்படியாக வலு பெற்று உள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 30 இலங்கைத் தமிழர்களும் மூன்று நைஜீரியக் கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர். முகாமில் இருக்கும் இலங்கை அகதிகள், தங்களை விடுவிக்கக்கோரி கடந்த 15-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருப்பது குறித்து கடந்த இதழில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.  

உண்ணாவிரதம் இருப்பவர்களின் நிலை நாளுக்குநாள் மோசமாகிக்கொண்டே செல்வதால், அவர்களில் பலர் செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். வைகோ, தா.பாண்டியன், சீமான், வேல்முருகன் என்று பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்களும் மருத்துவமனைக்குச் சென்று ஈழத்தமிழர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லி வந்தனர்.

கிடைத்தது விடுதலை... தொடர்கிறது போராட்டம்!

இந்த நிலையில், செங்கல்பட்டு முகாமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதற்காக மல்லை சத்யா, தியாகு, பேராசிரியர் தீரன் உள்ளிட்டவர்களோடு பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர் களும் செங்கல்பட்டுக்கு வந்து குவிந்தனர். போராட்டத்துக்கு  முன்பு அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனை வளாகத்துக்கு வந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக அதிக எண்ணிக்கையில் போலீஸார் குவிக்கப்பட்டிருக்க... ஏக பரபரப்பு.

அந்த நேரத்தில் முகாமில் இருந்து மருத்துவப் பரிசோதனைக்காக விக்ரம சிங்கம் உட்பட மூவர் வந்தனர். அவர்கள் மல்லை சத்யாவை கண்டதும் கட்டித் தழுவி கண் கலங்கினர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு வெளியே வந்த போராட்டக் குழுவினர், அங்கிருந்த மரத்தடியில் நின்று உரை நிகழ்த்தினர்.

கிடைத்தது விடுதலை... தொடர்கிறது போராட்டம்!

''உண்ணாவிரதம் இருந்து போராடி வருகிறவர்களை, இதுவரை மாவட்ட ஆட்சியர் வந்து பார்க்கவில்லை. மாவட்ட நிர்வாகம் ஈழத் தமிழர்களை கிள்ளுக்கீரையாக நினைக்கிறதோ?'' என்று இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் கொதித்தார்.

அடுத்துப் பேசிய பேராசிரியர் தீரன், ''விடுதலை வேண்டி 12 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு உள்ளனர். மூவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு இருக்கிறது. இன்னொருவருக்கு இதயத்தில் கோளாறு. ஒருவருக்கு நாடித்துடிப்பு குறைந்து வருகிறது. இந்தக் கடுமையான நிலையிலும், சாகும் வரை உண்ணாவிரதம் இருப்போம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். அகதிகளாக வந்தவர்கள், முறையாக பதிவு செய்து உள்ளனர். அவர்கள் மீது பொய்யான வழக்குகள் புனைந்து சிறப்பு முகாம் என்ற பெயரில் அடைத்து வைத்துள்ளனர். இந்த சிறப்பு முகாம்களை மூட வேண்டும். முகாமில் உள்ளவர்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வேண்டும். அதுவரை நமது போராட்டமும் ஓயாது'' என்று கர்ஜித்தார்.

மருத்துவமனையில் இருந்து முழக்கம் இட்டுக்கொண்டே போராட்டக் குழுவினர் வெளியே வர... அவர்களைக் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கிடைத்தது விடுதலை... தொடர்கிறது போராட்டம்!

அதே நேரத்தில் முகாமில் இருந்த விக்னேஷ்வரன், நாகராசா, சதீஷ்குமார், அலெக்ஸ் ஆகிய நால்வரும், முகாமில் உள்ள மரத்தின் மீது ஏறி, 'எங்களை விடுவிக்கவில்லை என்றால் இங்கேயே தூக்கிலிட்டு உயிரை மாய்த்துக் கொள்வோம்’ என்று உரத்த குரலில் கோஷமிட்டனர். அதோடு, 'கைது செய்யப்பட்ட போராட்டக் குழுவினரை உடனே விடுதலை செய்ய வேண்டும்’ என்றும் குரல் கொடுத்தனர். மாலை ஆறு மணியில் இருந்து மழை பெய்யத் தொடங்கியது அப்போதும் அவர்கள் மரத்தை விட்டு இறங்கவில்லை. இரவு 7.30 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் விடுவித்தனர். அங்கிருந்து கிளம்பிய மல்லை சத்யா, முகாம் அருகே சென்றார். மரத்தில் ஏறி இருந்தவர்களைப் பார்த்து, 'உடனே கீழே இறங்குங்கள். நீங்கள் பாதுகாப்பாக இறங்க வேண்டும் என்று தலைவர் வைகோ சொல்லி இருக்கிறார்’ என்றதும் ஒவ்வொருவராக இறங்கினார்கள்.

29-ம் தேதி முகாமில் உள்ள நால்வரை மட்டும் விடுதலை செய்ய உத்தரவு வந்தது. 1-ம் தேதி தனுஷன் மற்றும் கமலா கரனும், 2-ம் தேதி சிவக்குமார் மற்றும் யோகநாதனும் உறவினர்களை வரவழைத்து, திறந்தவெளி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விடுதலை பெற்று வெளியே வந்த சிவக்குமாரிடம் பேசினோம். ''விடுதலை கிடைச்சதுல ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதற்காக முதலில் 10 நாட்கள், அடுத்தது 19 நாட்கள், இப்போது ஒன்பது நாட்கள் என்று மூன்று முறை உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன். கண் துடைப்புக்காக க்யூ பிராஞ்ச் நான்கு பேரை மட்டும் வெளியே அனுப்பி இருக்கிறது. மற்ற அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். விடுதலை பெறாமல் உண்ணாவிரதத்தை முடிப்பதில்லை என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கிறார்கள். எங்கள் விடுதலைக்காகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றி'' என்று தழுதழுத்தார்.

செங்கல்பட்டு தாசில்தார் இளங்கோ, ''முகாமில் இருக்கும் 30 பேரில் ஏழு பேர் மீது வழக்குகள் இல்லை. அவர்களில் நான்கு பேரை விடுதலை செய்ய அரசிடம் இருந்து உத்தரவு வந்துள் ளது. மீதம் உள்ள மூன்று பேருக்கும் விரைவில் விடுதலை கிடைத்துவிடும். சிறுசிறு குற்றங்களில் ஈடுபட்டவர்களும் நன்னடத்தை காரணமாகத் தொடர்ந்து விடுதலை செய்யப்பட வாய்ப்பு உள்ளது'' என்றார்.

விரைவில் கிடைக்கட்டும் விடுதலை!

- பா.ஜெயவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism