Published:Updated:

கட்சி மாறுகிறார் பொன்தோஸ்?

கொடநாடு குடைச்சல்!

கட்சி மாறுகிறார் பொன்தோஸ்?

கொடநாடு குடைச்சல்!

Published:Updated:
##~##
கட்சி மாறுகிறார் பொன்தோஸ்?

டந்த தி.மு.க. ஆட்சியில் கொ​ட​நாடு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்துகொண்டு, ஜெயலலிதாவுக்கு பொன்தோஸ் கொடுத்த குடைச்சல்களை தமிழகமே அறியும். அவரை அ.தி.மு.க-வுக்குள் இழுக்கும் முயற்சிகள் கிடுகிடு​வென அரங்கேறிவருவதாகத் தகவல். ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து கிளம்புவதற்குள், பொன்​தோஸைக் கட்சியில் சேர்த்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டி வேலை பார்க்கிறார்களாம், அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொடநாடு பங்களா, பாதை, டீ ஃபேக்டரி போன்றவற்றை மையப்படுத்தி 'விதிமுறை மீறல்’ பூகம்பத்தைக் கிளப்பியவர் பொன்தோஸ். கொடநாடு பங்களாவுக்குள் அரசு அதிகாரிகள் நுழைந்து ஆய்வு நடத்தியதற்கு சூத்ரதாரியும் இவர்தான். எஸ்டேட் தொழிலாளர்கள் பயன்படுத்தும் பாதையை அடைத்துவைத்து அல்லல்படுத்துகிறார்கள் என்று ஜெயலலிதாவுக்கு எதிராக மக்களே போர்க்கொடி தூக்கியதும் இவரால்தான். இத்தனை குடைச்சல் கொடுத்த பொன்தோஸை அ.தி.மு.க-வுக்குள் இழுப்பதற்கு ஏன் முயற்சிகள் மேற்​கொள்ளப்படுகின்றன என்று ஆளும் கட்சிப் பிரமுகர்களிடம் விசாரித்தோம்.

கட்சி மாறுகிறார் பொன்தோஸ்?

''வர்ற எம்.பி. தேர்தல்ல நீலகிரி தொகுதி, எங்க கைக்கு வந்தே ஆகணும்​கிறதுல அம்மா உறுதியா இருக்காங்க. அதுக்காக நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி முழுக்கவே மக்களின் செல்வாக்கை சம்பாதிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கி இருக்கிறோம். இதில் இன்னொரு பகுதிதான், எங்களுக்கு எதிராகத் தேவை இல்லாமல் கலகத்தில் ஈடுபடும் பொன்தோஸ் போன்ற அதிரடி ஆட்களை அரவணைத்துச் செல்வது.

பொன்தோஸ் கொடுக்கிற குடைச்​சல்களுக்குப் பதிலடி கொடுக்க எங்களுக்கு பலம் இருக்கு. ஆனா, 'கொடநாடு எஸ்டேட்டுக்குள்ளே கல் உடைக்கிறாங்க, எஸ்டேட் ஊழியர்களோட ரேஷன் கார்டைப் பிடுங்கிவெச்​சிருக்காங்க, எஸ்டேட் பாதையை அடைச்சுட்டு கிலோ மீட்டர் கணக்குல காட்டுக்குள்ளே மக்களை நடக்க​விடுறாங்க’ன்னு பொன்தோஸ் டீம் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்னையைக் கிளப்பிக்கிட்டே இருக்குது. இதுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்த நேரத்தில்தான், 'எனக்கு தி.மு.க-வுக்குள் மரியாதை இல்லை’னு பொன்தோஸே வெளிப்படையா வேதனைப்படுற தகவல் கிடைச்சது.

கட்சி மாறுகிறார் பொன்தோஸ்?

கடந்த உள்ளாட்சித் தேர்தல்ல மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு ஸீட் வாங்குறதுக்கு படாத​பாடுபட்டார் பொன்தோஸ். பிரசாரத்திலும் அவங்க மாவட்டச் செயலாளர்கூட அவருக்குக் கைகொடுக்கலை. தோத்துப்போய் துவண்டுகிடக்குற பொன்தோஸ் ஆறுதல் தேடுவதாகவும் தகவல் வந்தது. அதனால பேச ஆரம்பிச்சோம். விசுவாசத்துடன் நம்பி வந்தவங்களை அ.தி.மு.க. என்றைக்குமே கைவிட்டது இல்லைங்கிறதை பொன்தோஸ் புரிஞ்சுக்கணும். அவரோட அணியில் இருக்கிற பல பேர் எங்களோட அருமையைத் தெரிஞ்சுக்கிட்டாங்க. எங்க கட்சிக்கு வந்தா அவருக்குத்தான் பிரயோஜனம், எங்களுக்கு எந்த லாபமும் இல்லை'' என்று விளக்கம் கொடுத்தார்கள்.

சுற்றி வரும் வதந்திகளைப் பற்றி பொன்​தோஸிடமே கேட்டோம். ''கடந்த உள்ளாட்சித் தேர்தல்ல எனக்கு ஸீட் கொடுக்கக் கூடாது, அப்படியே கொடுத்தாலும் நான் ஜெயிக்கக் கூடாதுன்னு எங்க கட்சிக்குள்ளேயே ஒரு டீம் ஆட்டம் ஆடியது உண்மைதான். இந்த விவகாரத்தை தளபதி ஸ்டாலின் வரைக்கும் நான் கொண்டுபோயிட்டேன். அதுக்காக நான் கட்சி மாறப்போறேன்னு சொல்றது சரியில்லை. என்னைப்பத்தி யாரோ வதந்தி கிளப்பி இருக்காங்க.  கொடநாடு பங்களாவின் அதிகார வட்டாரம் பண்ணிய விதிமுறை மீறல்களைத் தைரியமா வெளிச்சம் போட்டுக் காட்டுனப்பவே, 'ஒரு கோடி தர்றோம் அமைதியா இருங்க, ரெண்டு கோடி தர்றோம் இங்கே வந்துடுங்க’ன்னு அ.தி.மு.க-காரனுங்க எவ்வளவோ தூண்டில் போட்டாங்க. அப்பவே நான் சிக்கலை. இப்போ மறுபடியும் தூண்டில் வீசிப்பார்க்கிறாங்க. அதுக்கெல்லாம் சிக்குற ஆள் நான் கிடையாது. நான் செத்தாலும் தலைவர், தளபதி காலடியிலதான் கிடப்பேன்'' என்றார் உறுதியுடன்.

இதைவிட அதிகமாகப் பேசியவர்களையும் பார்த்துத்தான் இருக்கிறோம். பொறுத்திருந்து பார்ப்போம்!

- எஸ்.ஷக்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism