Published:Updated:

வழி தவறிய யானைகள்... உயிர் குடிக்கும் வனத் துறை!

ஏற்காடு கொடூரம்

வழி தவறிய யானைகள்... உயிர் குடிக்கும் வனத் துறை!

ஏற்காடு கொடூரம்

Published:Updated:
##~##
வழி தவறிய யானைகள்... உயிர் குடிக்கும் வனத் துறை!

திடீரென புதிய இடத்தில் நுழைந்து​விட்​டால், திசை தெரியாமல் நாம் தடுமாறத்தான் செய்​வோம். ஆறறிவு படைத்த மனிதர்களுக்கே இந்த நிலை என்றால், யானைக் கூட்டம் என்னதான் செய்யும்? 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆந்திர மாநிலம் ஜவ்வாது மலையில் இருந்து வழி தவறிய யானைக் கூட்டம் ஒன்று, வனத் துறையினரின் 'மிருகத்தனமாக’ வழி காட்டுதலால் ஏற்காடு மலைத் தொடரில் சுற்றிச் சுற்றி வருகிறது என்று கேள்விப்பட்டு விரைந்தோம்.

யானைக் கூட்டத்தைப் பார்த்த ஒரு​வரிடம் பேசி​னோம். ''அந்த யானைக் கூட்டத்தில் மொத்தம் ஆறு யானைகள் இருக்கு. ராத்திரி அடிவாரத்துல இருந்து ரோட்டிலேயே நடந்து ஏற்காடு வந்துச்சு. தலைச்​சோலை பக்கமாப் போகுதுன்னு சொன்னாங்க. உடனே அங்கே போய் பாருங்க... வெடிச் சத்தம் கேட்குறதுதான் அடையாளம்'' என்றார்.

வழி தவறிய யானைகள்... உயிர் குடிக்கும் வனத் துறை!

தலைச்சோலைக்குச் செல்ல வெடிச் சத்தமே நமக்கு வழிகாட்டியாக இருந்தது. எஸ்டேட்டில் இருந்த யானைகளை வெடி வைத்து மெயின் ரோட்டுக்கு விரட்டிக்கொண்டு இருந்தார்கள், வனத் துறையினர். ''எல்லோரும் மேட்டுல ஏறிக்கோங்க. யானை வருது, யானை வருது...'' என்று வனத் துறையினர் திடீர் குரல் கொடுக்க, எஸ்டேட்டுக்குள் இருந்து சாலையைத் தொட்ட யானைக் கூட்டத்தைப் பார்த்தோம். வழி தவறிய பள்ளிப் பிள்ளைகளைப் போன்று அலைமோதி வந்தன.

அந்த யானைகள் மீதே மீண்டும் வனத் துறையினர் பட்டாசுகளைக் கொளுத்திப் போடவே, எந்தப்

வழி தவறிய யானைகள்... உயிர் குடிக்கும் வனத் துறை!

பக்கம் விரட்டுகிறார்கள் என்பதே புரியாமல் பரிதாபமாகச் சுற்றிச் சுற்றி ஓடின. ஒரு வெடி யானைக் குட்டியின் முகத்தின் மீதே விழுந்து வெடிக்க, அலறிப் பிளிறியபடி வந்த வழியே திரும்பி ஓடியது.

உடனே கோபமான பொது மக்கள் வனத்துறையி​னரிடம், ''என்ன பிளான் பண்ணி விரட்டுறீங்க? ஏன் வந்த யானைகள் மேல பட்டாசு போடுறீங்க? நீங்க பேசாம இருந்தா, அதுவே மெயின் ரோட்டைக் கடந்து பில்லேறி, காக்கம்பட்டி, கொட்டசேடு வழியா அரூர் காட்டுக்குள் போயிருக்குமே'' என்று ஆவேச​மாகக் கண்டித்தனர். ஆனால், அதனைக் கண்டு​கொள்ளாமல் யானைகளை வெடி வைத்து விரட்டிக்​கொண்டே இருந்தார்கள். இருட்டத் தொடங்கவே, வெடிக்குப் பயந்து குட்டியைக் கூட்டிக்​கொண்டு அபாயகரமான பள்ளத்தை நோக்கி இறங்கி வாழவந்தி பக்கம் போய் ஒளிந்தன யானைகள்.

வனத் துறையினரின் அடாவடியைப் பற்றிப் பேசும், 'சேலமே குரல் கொடு’ அமைப்பின் தலைவர் பியூஸ், ''ஜவ்வாது மலை வழியாக ஆறு மாதங்களுக்கு முன்பு ஏழு யானைகளோடு தமிழக வனப் பகுதிக்கு இந்த யானைக் குடும்பம் வந்தது. இதில் ஒரு யானை நிறை மாதக் கர்ப்பம். அது கருமந்துறை வனப் பகுதியில் ஒரு மாதத்துக்கு முன்பு பிரசவ வேதனையில் துடித்துக்கிடந்த நேரத்தில், வனத் துறையினர் பட்டாசுகளைக் கொளுத்திப் போட்டார்கள். அதனால் அப்போது பிறந்த குட்டியையும் உடன் இழுத்துக்கொண்டு... பிரசவ வலியோடு உயிர் பயத்தில் அங்கும் இங்கும் ஓடியது. இந்த அலைச்சலும் அதிர்ச்சியும் தாங்காமல் குட்டி யானை அப்போதே இறந்துபோனது.

இறந்துபோன குட்டியின் உடலைச் சுற்றி எல்லா யானைகளும் கண்ணீர்விட்டு அழுதபடி நின்றதைப் பார்த்து நாங்கள் எல்லோரும் கலங்கிவிட்டோம். அப்போதும் கொஞ்சம்​கூட கவலையேபடாமல் வனத் துறையினர் பட்டாசு கொளுத்திப் போடுவதில்தான் ஆர்வ​மாக இருந்தார்கள். வெடிக்குப் பயந்து யானைகள் மீண்டும் ஓடின. ஆனால், செத்துப்போன குட்டியின் உடலைவிட்டு, தாய் யானை மட்டும் போகவே இல்லை. அங்கேயே சுற்றிக்கொண்டு இருந்த தாய் யானையும்,  செத்துப்போய்விட்டது.

ஒரு குட்டியையும் தாயையும் கொன்ற பிறகும்கூட வனத் துறையினர் இப்படி ரவுண்டு கட்டி அடித்தால், யானைகள் எங்குதான் போகும்? மலைகளும் காடு​களுமே யானைகளின் இருப்பிடம். அவற்றின் வீட்டுக்கே போய் வெடிவைத்துத் துரத்து​வது எந்த விதத்தில் நியாயம்? நாம் எந்த ஒரு இடையூறும் செய்யாமல் இருந்தால், அது வந்த வழியே திரும்பிப் போய் இருக்கும். வனத் துறையினர் இதுபோன்று தொடர்ந்து வெடி போட்டால், நிச்சயம் அத்தனை யானைகளும் செத்துப்போய்விடும். அடாவடி செய்யும் வனத் துறை மீது வழக்குத் தொடுக்கப்போகிறேன்'' என்றார் குமுறலாக.

வனத் துறையினரோ, ''விளை நிலங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் விரட்டுகிறோம். திடீரென ஊருக்குள் நுழைந்துவிட்டால், உயிர்ச் சேதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அதனால்தான் விரட்டுகிறோம். யானைகள் மீது வெடிகள் போடுவது இல்லை'' என்று சொல்லிவிட்டு, மீண்டும் விரட்டத் தொடங்கினார்கள்.

இது குறித்துப் பேசிய தமிழக வனத் துறை அமைச்சர் பச்சைமால் ''இந்த விவகாரம் என் கவனத்​துக்கும் வந்தது. வெடி​வைப்பதை நிறுத்தச் சொல்லிவிட்டேன். யானைகளுக்கு மயக்க ஊசி போட்டுப் பிடித்து, எங்கே இருந்து வந்ததோ... அங்கேயே கொண்டுபோய் விடுவதற்கு திட்டமிட்டு இருக்கிறோம். விரைவில் யானைகளைப் பத்திரமாக அனுப்பிவைப்போம்'' என்றார்.

ப்ளீஸ்!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: எம். விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism