Published:Updated:

''நான் வரும் வரை தம்பியை வைத்திருங்கள்''

அறிவுக்காகத் துடித்த அன்புமணி!

##~##
''நான் வரும் வரை தம்பியை வைத்திருங்கள்''

யிர் குடித்த சாலைக்கு இதோ மற்றும் ஒரு பலி! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பெரம்பலூருக்கும் திருச்சிக்கும் இடையே உள்ள சென்னை நான்கு வழிச்சாலையில் விபத்து நிகழாத நாளே இல்லை. கடந்த 10-ம் தேதி பா.ம.க. மாநில இளைஞர் அணிச் செயலாளரான அறிவுச்செல்வனின் உயிரையும் பறித்து விட்டது!

பா.ம.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவராக சமீப காலத்தில் வளர்ந்து வந்தவர் அறிவுச்செல்வன். திருச்சியில்தான் நிரந்தக் குடியிருப்பு என்றாலும் பெரும்பாலும் ராமதாஸின் தைலாபுரத்திலோ, அன்புமணியின் சென்னை வீட்டிலோதான் இருப்பார். விபத்துக்கு முந்தைய நாள்கூட அன்புமணியுடன் இருந்தார். டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு ஒன்றுக்காக ஆஜராகும் அன்புமணியுடன் டெல்லிக்குச் செல்வதாக இருந்தார் அறிவுச்செல்வன். கடைசி நேரத்தில் டெல்லி போகும் முடிவைக் கைவிட்டு, பயணத் திட்டத்தை மாற்றினார்.

''நான் வரும் வரை தம்பியை வைத்திருங்கள்''
''நான் வரும் வரை தம்பியை வைத்திருங்கள்''

ஜூலை 11-ம் தேதி, மதுக்கடைகளைப் பூட்டும் போராட்டம் நடத்துவதாக ராமதாஸ் அறிவித்து இருந்தார். திருச்சியில் இவரது தலைமையில் போராட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக சென்னையில் இருந்து திருச்சிக்குக் கிளம்பினார். இரவு 10 மணிக்கு திருச்சியில் உள்ள தனது மனைவி, குழந்தைகளிடம் செல்போனில் பேசினார். அதன்பிறகு, காரிலேயே தூங்கியவருக்கு அதுவே, நிரந்தரத் தூக்கம் ஆனது!

''அதிரடி ஆட்கள் நிரம்பிய பா.ம.க-வில் அமைதியான பிரமுகர் அறிவுச்செல்வன். சிரித்த முகத்தோடு அனைவரிடமும் பழகக்கூடியவர். அனைத்துக் கட்சியினருடனும் நல்ல உறவு வைத்திருந்தார். அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. படிக்கும்போது டாக்டர் ராமதாஸை அழைத்து வந்து இலக்கிய மன்றக் கூட்டத்தில் பேசவைத்து, அவருடன் நெருக்கமாகி அரசியலில் நுழைந்தார். மாவட்ட மாணவர் அணி, மாநில மாணவர் அணி, மாநில இளைஞர் சங்கத் தலைவர் என படிப்படியாக உயர்ந்தார். அன்புமணி, அரசியலுக்கு வந்ததில் இருந்து... அவருக்கு நிழல் ஆனார். அன்புமணியின் தமிழகச் சுற்றுப்பயணங்களை கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அறிவுச்செல்வனுக்குக் கிடைத்தது.  

முன்பு, தனது டாடா சஃபாரி காரில் டாக்டர் அன்புமணியை அழைத்துக்கொண்டு சுற்றுப்பயணம் சென்று வந்த அறிவுச்செல்வன், ஒரு மாதத்துக்கு முன்புதான் நவீன மகேந்திரா எக்ஸ்.எல்.யூ சொகுசுக் காரை வாங்கினார். அந்தக் காரை ஷோரூமில் இருந்து எடுத்து வரும்போதே விபத்தில் சிக்கி... லேசான சேதம் ஏற்பட்டது. அடுத்த ஒரே மாதத்தில் விபத்தில் சிக்கி உயிரை இழந்து விட்டார்'' என்று சோகத்துடன் சொல்கிறார்கள் அறிவுச்செல்வனுக்கு நெருக்கமானவர்கள்.

''நான் வரும் வரை தம்பியை வைத்திருங்கள்''

எக்ஸ்.எல்.யூ. காரை அறிவுச்செல்வன் தேர்வு செய்ததற்கு காரணம்... அதில் இருக்கும் பாதுகாப்பு அம்சங்கள்தான். 'டாக்டர் அன்புமணி நம் கட்சிக்கு மிகப்பெரிய சொத்து. அவரைப் பாதுகாப்பு வசதி இல்லாத சாதாரண கார்களில் அழைத்துச் செல்லக்கூடாது என்று தன் கட்சிக்காரர்களிடம் சொல்வார் அறிவுச்செல்வன்’ என்கிறார் அவரது நெருங்கிய நண்பரான உமாநாத்.

''பின்சீட்டில் கதவுப் பக்கம் தலை சாய்த்துப் படுத்துத் தூங்கி வந்திருக்கிறார் அறிவுச்செல்வன். கொள்ளிடம் டோல்கேட் 'ஒய்’ வடிவ சாலையில் அறிவுச்செல்வனின் கார் திரும்பும்போது, எதிரே அதிவேகத்தில் வந்த ஆம்னி பஸ், இவரது காரின் கதவில் வேகமாக இடித்திருக்கிறது. பஸ் இடித்த வேகத்தில் அந்தப் பகுதியில் இருந்த ஏர்பேக்கில் கம்பி குத்திக் கிழிந்து விட்டது. அதனால், உயிரைக் காக்க வேண்டிய காற்றுப்பை திறக்கவில்லை. அதனால் தலையில் பலத்த அடிபட்டு... அதிக ரத்தம் வெளியேறி உயிர் இழந்தார் அறிவுச்செல்வன். காரை ஓட்டிய டிரைவர் சத்தியசீலன், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்'' என்கின்றனர் போக்குவரத்துப் பிரிவு போலீஸார்.

சொந்த ஊரான அரியலூருக்குக் கொண்டுசெல்லப் பட்ட அறிவுச்செல்வனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த பா.ம.க. தலைவர்கள் ஓடோடி வந்தனர்.  அறிவுச்செல்வனின் உடலைப் பார்த்து கண்கலங் கினார் ராமதாஸ். டெல்லியில் சி.பி.ஐ. நீதிமன்றத்துக்குச் சென்ற அன்புமணி, 'நான் வரும்வரை தம்பியை வைத்திருங்கள்’ என்று தகவல் சொல்லி இருந்தார். அதனால், இறுதிச்சடங்கு தள்ளிவைக்கப்பட்டது. மறுநாள் காலை, மனைவி சௌமியா சகிதம் வந்தார். அவரைக் கண்டதும் அறிவுச்செல்வனின் மனைவி மீனாட்சி அதிகமாகக் கலங்கினார்.

''எதுவா இருந்தாலும் அண்ணனும் அய்யாவும் பார்த்துக்குவாங்கனு சொல்லுவாரே. நீங்க யாராவது ஒருத்தர் வந்தாலே வாசலுக்கு ஓடி வருவாரே... நீங்க எல்லாம் வந்து நிக்கிறீங்க... உங்க தம்பி தூங்குறாரே. அண்ணி... ஒரு வார்த்தை கூப்பிடுங்க'' என்று மீனாட்சி கதறி அழ... ஆறுதல் சொல்ல முடியாமல் அன்புமணி உட்பட  அனைவரது கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அதிவேக இரவுப் பயணங்கள் ஆபத்தானவை என்பதை அறிவுச்செல்வனின் மரணம் அனைத்து அரசியல் பிரமுகர் களுக்கும் உணர்த்தட்டும்!

- அ.சாதிக்பாட்சா, சி.ஆனந்தகுமார்

படங்கள்:

'ப்ரீத்தி’ கார்த்திக், எம்.ராமசாமி