Published:Updated:

மான்கொம்பு மல்லுக்கட்டு!

திருவள்ளூர் திகுதிகு

##~##
மான்கொம்பு மல்லுக்கட்டு!

மீனுக்கு வலை வீசிய நேரத்தில் முதலை கிடைத்தால் எப்படி இருக்கும்? கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்டக் காவல் துறைக்கு அப்படி ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு குறிப்பிட்ட இடத்தில் மான் கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக எஸ்.பி. ரூபேஷ் குமார் மீனாவுக்கு ரகசியத் தகவல் வந்தது. உடனே, டி.எஸ்.பி. பாலச்சந்திரன் தலைமையில் ஒரு தனிப்படை அமைத்து விசாரித்தார். விசாரணையில், திருவள்ளூர் டூ பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரண்வாயல் என்ற பகுதியில் மான்கொம்புகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது உறுதியானது. அந்த இடத்தில் கடந்த 5-ம் தேதி எஸ்.பி. தலைமையிலான குழு அதிரடி சோதனை நடத்தியது. அங்கு, மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மான் கொம்புகளைப் பார்த்து சோதனைக்குச் சென்ற போலீஸாரே மலைத்து விட்டனர். கைப்பற்றப்பட்ட மான் கொம்புகளின் மதிப்பு கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய் என்கிறார்கள்.

சோதனைக்குப் பின் அந்த நிறுவனத்தை நடத்தி வந்த சுப்பிரமணியம் மற்றும் அதன் மேலாளர் கோதண்டம் ஆகிய இருவரையும் கைதுசெய்தது காவல் துறை. ஆனால், 'நாங்கள் முறையான ஆவணங்கள் வைத்து இருக்கிறோம். வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய சட்டம் ஒழுங்கு போலீஸாருக்கு அதிகாரம் இல்லை’ என்று, மாவட்டக் காவல் துறைக்கு எதிராக சுப்பிரமணியம் தரப்பு டென்ஷன் ஆகி உள்ளது.

மான்கொம்பு மல்லுக்கட்டு!
மான்கொம்பு மல்லுக்கட்டு!

இதுகுறித்துப் பேசிய சுப்பிரமணியத்தின் வழக்கறிஞர் பிரபு, ''சுப்பிரமணியம் ஏதோ மான்கொம்புகளைச் சட்ட விரோதமாகப் பதுக்கிவைத்திருப்பவர் போன்று காவல்துறை கைது செய்து இருக்கிறது. அவர் சமூகத்தில் பொறுப்பான தொழிலதிபர். 1990-ல் இருந்து வனத்துறையின் முறையான அனுமதியோடு தொழில் செய்து வருகிறார். கர்நாடகம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து முறையான அனுமதியுடன் மான்கொம்புகளை கொள்முதல் செய்து, அவற்றில் வேலைப் பாடுகள் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் அவரது பிரதான தொழில். இவை அனைத்துக்கும் மத்திய, மாநில அரசுகளின் முறையான அனுமதி உள்ளது. 20 டன் வரை மான் கொம்புகள் இருப்பு வைத்துக்கொள்ள உரிமை உண்டு. குடோனில் இருந்து போலீஸார் கைபற்றியது 19 டன் மட்டுமே. ஆனால், அதிக இருப்பு வைத்து இருந்ததாக வழக்குப் போட்டு உள்ளனர். அதே போன்று தயாரிப்பு உரிமத்துக்காக கடந்த 2009-ல் என் கட்சிக்காரர் அதற்குரிய கட்டணத்தோடு விண்ணப்பித்து இருந்தார். அரசுத் தரப்பில் இருந்து அதற்கு இதுவரை பதில் இல்லை. அதே சமயம் முந்தைய உரிமத்தையும் அரசு ரத்து செய்ததாக அறிவிக்கவில்லை. அதனால், அந்த உரிமம் தொடர்வதாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இதுகூட தெரியாமல் காவல்துறை அவர் மீது வழக்குப் போட்டு உள்ளது. இதை உண்மையான வழக்கு என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொண்டாலும், இந்தப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க சட்டம் ஒழுங்கு போலீஸுக்கு அதிகாரம் கிடையாது.

மான்கொம்பு மல்லுக்கட்டு!

மான் கொம்புகளை வைத்து இருந்தது சட்ட விரோதம் என்றால், முறையாக வனத்துறைக்குத் தெரிவித்து, அவர்கள் மூலம் நோட்டீஸ், விசாரணை என்று சட்டப்படியே அணுகி இருக்க வேண்டும். இவர்கள் நடவடிக்கை மேற்கொண்டது தவறு. காலையில் சாதாரண பிரிவின் கீழும், மாலையில்

மான்கொம்பு மல்லுக்கட்டு!

ஜாமீனில் வர முடியாதபடி இன்னொரு பிரிவின் கீழும் வழக்கு போட்டிருப்பதைப் பார்த்தால், இதன் பின்னணியில் அரசியல் இருக்க வாய்ப்பு இருக்கிறது. நீதிமன்றத்தில் இந்த சட்ட விஷயங்களைச் சொல்லி வழக்கில் வெற்றி பெறுவோம்'' என்றார்.

இதற்கு போலீஸ் தரப்பு என்ன சொல்கிறது?

திருவள்ளூர் டி.எஸ்.பி. பாலச்சந்திரனைச் சந்தித் தோம்.''எஸ்.பி-க்கு வந்த தக வலை எங்களிடம் விசாரிக்கச் சொன்னார். விசாரணையில், சுப்பிரமணியம் என்பவர் சட்ட விரோதமாக மான் கொம்புகளை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. 20 டன்னுக்கும் மேலாக இருப்பு வைத்திருந்தது சோதனையில் தெரிய வந்ததால், வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய் தோம். சுப்பிரமணியம் 20 வருடங்களுக்கும் மேலாக இந்தத் தொழிலில் இருந்து வந்தாலும், முறையாக அவர் உரிமத்தைப் புதுப்பித்து இருக்க வேண்டும். 2009-ல் மான் கொம்பு ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்து விட்டது. உரிமத்துக்காக விண்ணப்பித்து விட்டால் போதுமானது என்று சொல்வது அவர்களது அறியாமை. யார் இதைக் கண்டுகொள்ளப் போகிறார்கள் என்ற அலட்சியமும் ஒரு காரணம். நியாயத்தை நீதிமன்றத்தில் நிரூபித்து, தாராளமாக அவர்கள் வெளியே வரட்டும். எங்களைப் பொறுத்தவரையில் சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளோம்'' என்றார் நிதானமாக.

இனி, நீதிமன்றம்தான் சொல்லவேண்டும்!

- எஸ்.கிருபாகரன்