Published:Updated:

''அமைச்சர் சொன்னாரு... 4,200 ரூபாய் கொடுங்க!''

தொடரும் மிமிக்ரி கொள்ளை!

##~##
''அமைச்சர் சொன்னாரு... 4,200 ரூபாய் கொடுங்க!''

தயநிதியின் மனைவி கிருத்திகாவின் பெயரைச் சொல்லி மோசடி செய்தவர் பிடிபட்ட நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் வி.எஸ்.விஜய் பெயரைச் சொல்லி அரங்கேறிய மோசடி ஒன்றும் இப்போது அம்பலம் ஆகி இருக்கிறது! 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வேலூர் பி.எஸ்.எஸ். கோயில் தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார் மீனாட்சி சுந்தரம். நடந்த சம்பவங்களை அவரே விவரிக்கிறார். ''நான் பல வருடங்களாக இங்கே தொழில் பண்றேங்க. இதுவரை யார்கிட்டேயும் ஏமாந்தது கிடையாது. நான் உண்டு, என் தொழில் உண்டுனு இருப்பேன். போனமாசம் 21-ம் தேதி என் செல்போனுக்கு புதிய எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. நான் எடுத்தேன். எதிர்முனையில் பேசியவர், 'சார், நான் ஹெல்த் மினிஸ்டரோட பி.ஏ பேசுறேன். உங்ககிட்ட ஐயா பேசணுமாம். கொடுக்குறேன், பேசுங்க!’ என்றார். சில நொடிகளில், 'என்னப்பா, எப்படி இருக்கே? கடை எல்லாம் எப்படிப் போகுது?’ன்னு மினிஸ்டர் பேசுற மாதிரியே ஒருத்தர் பேசினார். நானும் மினிஸ்டரே விசாரிக்கிறார்னு நினைச்சு, 'ரொம்பவும் நல்லபடியாப் போகுதுங்க, நீங்க எப்படி இருக்கீங்க?’னு மரியாதைக்குக் கேட்டேன். அவர், 'நான் நல்லா இருக்கேன்பா. சென்னை அண்ணா சாலையில் நம்ம கட்சியோட ஓர்ஆண்டு சாதனை பற்றி சொல்றதுக்கு ஒரு பெரிய ஃப்ளெக்ஸ் வைக்கணும். அதுக்குக் கொஞ்சம் நிதியை நீங்க கொடுக்கணும், இதைப்பத்தி என்னோட பி.ஏ.  பேசுவார்!’னு சொன்னார். அடுத்து, 'சார், நான் அமைச்சரோட பி.ஏ. பேசுறேன். ஃப்ளெக்ஸ் உங்க சார்பாகவும், அமைச்சர் சார்பாகவும் வைக்கணும். நான் சொல்லுகிற பேங்க் அக்கவுன்ட்ல 4,200 ரூபாய் பணத்தைப் போடுங்க!’னு சொல்லி வங்கியோட பேரும், கணக்கு எண்ணும் கொடுத்தார்.  

''அமைச்சர் சொன்னாரு... 4,200 ரூபாய் கொடுங்க!''

ஒரு மினிஸ்டர் போன் பண்ணி பேசுனது ரொம்பவும் சந்தோஷமா இருந்துச்சு. அதுவும் சொந்த ஊர்க்காரர். 1999-ல் அவரோட ஹாஸ்பிடலில் என் உறவினர்கள் டிரீட் மென்ட்டுக்காக போனப்ப, அவர் நல்லாக் கவனிச்சார். அதனால அப்போதே எனக்கு வி.எஸ்.விஜய் மீது நல்ல மதிப்பு உண்டு.

''அமைச்சர் சொன்னாரு... 4,200 ரூபாய் கொடுங்க!''

அப்படிப்பட்டவர் வேலூர் தொகுதியில் எம்.எல்.ஏ-வாகி, மினிஸ்டர் ஆனது ரொம்பவும் சந்தோஷம். நல்ல பதவியில் இருக்கும் நேரத்தில் அவரே கேட்டதும், உடனே பணத்தைப் போட்டேன்.

21-ம் தேதியே பணம் போட்டுட்டு, விஷயத்தைச் சொல்லிடு வோம்னு எனக்கு வந்த எண்ணுக்குப் போன் செய்தேன். ஆனால் அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்தது. பிறகு, போன் செய்து சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன். கொஞ்ச நேரம் கழித்து போன் செய்தபோதும் சுவிட்ச் ஆஃப் என்றே வந்தது. அப்பத்தான் ஒருவேளை நம்மை யாராவது ஏமாத்திட்டாங்களோன்னு நினைச்சேன். உடனே நடந்த சம்பவத்தை என நண்பர்களிடம் சொன்னேன். அவங்கதான் என்னை காவல் நிலையத்தில் புகார் செய்யச் சொன்னாங்க.நான் உடனே, வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் செய்தேன்.  விஷயம் தெரிந்து அமைச்சர் வி.எஸ்.விஜய் என்னிடம் பேசினார். 'ஏன் இப்படி ஏமாறுகிறீர்கள்... இனியாவது ஜாக்கிரதையாக இருங்கள்’ என்று எச்ச ரிக்கை செய்தார்'' என்று விலாவாரியாகச் சொன் னார்.

வழக்கைப் பதிவு செய்த வேலூர் போலீஸார், முகமது ரஃபீக் என்பவரை மடக்கிப் பிடித்து விட்டனர். எஸ்.பி அலுவலக வட்டாரத்தில் பேசினோம். ''புகார் வந்ததும், உடனே விரைந்து செயல்பட்டோம். அந்த செல்போன் எண்ணை வைத்து, சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது ரஃபீக் என்பவரைக் கைது செய்து இருக்கிறோம். அவருக்குப் பல குரலில் பேசும் திறமை இருக்கிறது. பழைய இரும்புக்கடை வைத்திருக்கிறார். இரண்டு மனைவிகள் இருக்கும் நிலையில், கடையில் லாபம் வரவில்லை என்றதும் குறுக்கு வழியில் யோசித்து இருக்கிறார். அமைச்சர் விஜய் மீட்டிங்கில் பேசியதைக் கேட்டு... அவர் மாதிரியே பேசிப் பார்த்திருக்கிறார். எப்படியோ வேலூர் எண்கள் சிலவற்றைப் பிடித்திருக்கிறார். முதல் முறையாக மீனாட்சி சுந்தரத்திடம்தான் பேசி இருக்கிறார். அதிலேயே சிக்கிக்கொண்டார். இருந்தாலும் வேறு யாரையும் ஏமாற்றி இருக்கிறாரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம்'' என்று சொன்னார்கள்.

  இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும், ''என் பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கத்தில் இப்படி மோசடி செய்து வருவது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற நபர்களிடம் யாரும் ஏமாந்து விடக்கூடாது!'' என்று அமைச்சர் வி.எஸ்.விஜய் அறிவித்து இருக்கிறார்.

இப்போது, வேலூர் நகரில் உள்ள பல மெடிக்கல் ஷாப்களில் அமைச்சர் விஜய்யின் பெயரைச் சொல்லி ஒரு கும்பல் மெகா வசூல் வேட்டை நடத்திய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறதாம். அவர்கள் யாரோ? இன்னும் என்னென்ன மோசடிகள் நடந்தனவோ?

- கே.ஏ.சசிகுமார்

படங்கள் : ச.வெங்கடேசன்