Published:Updated:

கொலையை மறைக்க நினைத்ததா போலீஸ்?

போலீஸ் மரணத்தில் ஆவேச கருணாநிதி

##~##
கொலையை மறைக்க நினைத்ததா போலீஸ்?

கொடநாட்டில் இருந்தபடி தினமும் ஏதாவது ஒரு திட்டத்தை அறிவித்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. அவருக்குச் சளைத்தவரா தி.மு.க. தலைவர் கருணாநிதி? தினமும் ஏதேனும் ஒரு புகாரை ஆளும்கட்சி மீது பதிவுசெய்துகொண்டே இருக்கிறார். சமீபத்தில் கருணாநிதி வெளியிட்ட ஓர் அறிக்கை காவல்துறையைப் பதறவைத்து விட்டது. 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

'நாகை மாவட்டம் கொள்ளிடம் ஏரியாவில் கள்ளச்சாராயம் கடத்திவந்த காரை மறித்த போலீஸ் ஏட்டு மீது, காரை ஏற்றி நசுக்கிவிட்டுத் தப்பிவிட்டார்கள் கடத்தல்காரர்கள். ஒரு கொலை வழக்காகப் பதியவேண்டிய இதை,  விபத்தாக பதிவு செய்து இருக்கிறார்கள்’ என்று கருணாநிதி கொந்தளித்து இருந்தார். இறந்துபோன ஏட்டு பெயர் ரவிச்சந்திரன். உண்மையில் அவருக்கு என்ன நடந்தது?

கொலையை மறைக்க நினைத்ததா போலீஸ்?

மயிலாடுதுறையில் இருந்த ஏட்டு ரவிச்சந்திரனின் மனைவி எழிலரசியை சந்தித்தோம். ''சர்வீஸுக்குப் போன போலீஸ் ஜீப்பை அன்னைக்குத்தான் (5-ம் தேதி) எடுத்துட்டு வந்தார். நாளைக்கு எஃப்.சி-க்கு வண்டியைக் கொண்டு போகணும். அதனால இன்னைக்கு வேலை எதுவும் இல்லைனு வீட்டில் இருந்தார். ஆனா, சாயந்தரம் 6 மணிக்கு, சிறப்பு எஸ்.ஐ. சிங்காரம் போன் செய்து கூப்பிட்டார். ஜீப்பை சர்வீஸ் செஞ்சதால் இன்னிக்கு எடுக்க முடியாதுன்னு இவர் சொன்னதும், 'டூ-வீலர்லயாவது வா’னு கூப்பிட்டார். அவர் சொன்னபடியே டூ-வீலர் எடுத்துட்டுப் போனவர்தான், அப்படியே போயிட்டார்'' என்று கதறினார்.

கொலையை மறைக்க நினைத்ததா போலீஸ்?

நடமாடும் மதுவிலக்கு சோதனைக் குழுவிடம் விசாரித்தோம். ''கொள்ளிடம் அருகே உள்ள மாதானம் டூ புத்தூர் சாலையில் காரில் சாராயம் கடத்தப்படுவதாக எங்களுக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன் அடிப் படையில் இரவு 10 மணிக்கு எஸ்.ஐ. லோகநாதன், சிறப்பு எஸ்.ஐ. சிங்காரம், ஏட்டு சண்முகம் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் நான்கு பேரும் டவேரா காரில் புறப்பட்டோம். ஏட்டு ரவிச்சந்திரன் டூ-வீலரில் பின் தொடர்ந்தார். எதிரே சந்தேகத்துக்கு உரிய அம்பாசிடர் கார் வந்தது. அந்தக் காரை நிறுத்த முயன்றோம். படுவேகத்தில் வந்த கார், எங்களை அலட்சியப்படுத்தி விரைந்தது. அதனால், எங்கள் பின்னால் வந்த ரவிச்சந்திரன் தனது டூ-வீலரால் காரை மடக்க முயல... அவரை இடித்துத் தள்ளியது. கீழே விழுந்தவரின் மீது காரை ஏற்றிவிட்டு, மின்னல் வேகத்தில் பறந்து விட்டனர்.

கொலையை மறைக்க நினைத்ததா போலீஸ்?

படுகாயம் அடைந்த ரவிச்சந்திரனை எங்கள் வாகனத்தில் ஏற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போனோம். அங்கே அவருக்கு வைத்தியம் பார்க்க முடியாது என்று மருத்துவர்கள் சொல்லி விட்டனர். கும்பகோணம், தஞ்சாவூர், சென்னை என்று போயும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை'' என்று சோகத்துடன் சொன்னார்கள்.

இதைத்தான் ஆனைக்காரன்சத்திரம் (கொள்ளிடம்) போலீஸார் வாகன விபத்தாகப் பதிவுசெய்து விட்டனர். 'மீன்சுருட்டியைச் சேர்ந்த சாராய வியாபாரிகள்தான் டூ-வீலர் மீது காரை ஏற்றியவர்கள்’ என்று மது விலக்கு சோதனைக் குழுவினர் தகவல் கொடுத்தும், அதைப் பதிவு செய்யவில்லையாம். சாராய வியா பாரிகளுக்கு ஆதரவாக போலீஸ் இருக்கிறதா என்று ரவிச்சந்திரனின் உறவினர்கள் கொதிக்கவே... விவகாரம் வெளியே வந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி, 'ஒரு தலைமைக் காவலருக்கே இந்த நிலை என்றால், தமிழ்நாட்டில் பொதுமக்களின் நிலை என்ன?’ என்று விளாச... காவல் துறையில் டென்ஷன் பரவியது. 10-ம் தேதி சம்பவ இடத்தைப் பார்வையிட வந்தார் திருச்சி ஐ.ஜி. அலெக்சாண்டர் மோகன். நடமாடும் சோதனைக் குழுவினரிடம் விசாரித்து, கார் பற்றிய விவரங்களைப் பெற்ற நாகை மாவட்ட எஸ்.பி. ராமர், விசாரணையை முடுக்கி விட்டார். அதைஅடுத்து, ஏ.டி.எஸ்.பி. மணிவண்ணன் மீன்சுருட்டி பகுதிக்குச் சென்று சிலரைப் பிடித்து விசாரித்தார். டிரைவர் கலைச்செல்வன் என்பவர்தான் அன்று காரை ஓட்டியவர் என்பதைக் கண்டுபிடித்து, அவரைக் கைது செய்தனர்.

இந்தக் கலைச்செல்வன், சாராயக் கடத்தல் வாகனங்களை ஓட்டுவதில் கில்லாடியாம். 'மாதானம், சீயாளம், கொப்பியம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள சிலருக்கு சாராயம் ஏற்றி வரும்போது போலீஸ் மறித்தது. தப்புவதற்காக காரை விரட்டும்போது டூ-வீலரில் மோதி விட்டது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார் கலைச்செல்வன். இவரை போலீஸ் கண்டறிந்து தேடிய நேரத்தில், அவரைத் தப்பவைக்க நினைத்த சாராயக்கும்பல், செல்வம் என்ற வேறு ஒரு டிரைவர் உள்ளிட்ட மூன்று பேரை கும்பகோணம் கோர்ட்டில் ஆஜர்படுத்தியது. ஆனாலும், கலைச்செல்வனைப் பிடித்து உள்ளே தள்ளி இருக்கிறது ஏ.டி.எஸ்.பி மணிவண்ணன் டீம்.  

திருச்சி ஐ.ஜி. அலெக்சாண்டர் மோகனிடம் பேசினோம். ''கள்ளச்சாராய நடமாட்டம் வெகுவாகக் குறைக்கப்பட்டு உள்ளது. இனி, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் முற்றிலுமாகத் தடுக்கப்படும். ஏட்டு ரவிச்சந்திரன் வழக்கில் முதலில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வாகன விபத்து வழக்கு பதிவு செய்யப் பட்டது. அதேசமயத்தில், தனிப்படை அமைத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது. அதன்மூலம் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். விசாரணையின் அடிப் படையில் இப்போது அது கொலை வழக்காக மாற்றப்பட்டு உள்ளது. ஏட்டு ரவிச்சந்திரன் குடும்பத்துக்கு காவல்துறை பக்க பலமாக இருக்கும்'' என்றார்.

கள்ளச்சாராய மாஃபியாவின் கும்பலில் ஒருவரை மட்டும் கைதுசெய்து விட்டால், பிரச்னை தீர்ந்துவிடுமா என்ன?  அந்தத் தொழிலை ஒட்டுமொத்தமாக அழிக்க வேண்டும்.

- கரு.முத்து, படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்