Published:Updated:

வழியை மறிக்கிறாரா ஆளும் கட்சி எம்.எல்.ஏ.?

ஏற்காடு எக்குத்தப்பு!

##~##
வழியை மறிக்கிறாரா ஆளும் கட்சி எம்.எல்.ஏ.?

ரூம் போட்டு யோசிப்பார்களோ என்று சொல்லத்தோணும் அளவுக்கு விதவிதமாகச் சிந்திக் கிறார்கள், நம் அரசியல்வாதிகள். தான் கேட்ட இடம் கிடைக்கவில்லை என்றதும், அந்த இடத்துக்குச் செல்லும் பாதையை மறித்து, எம்.ஜி.ஆர். மன்றம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி இருக்கிறாராம் ஆளும் கட்சியைச் சேர்ந்த ஏற்காடு எம்.எல்.ஏ. பெருமாள். தகவல் அறிந்து விரைந்தோம். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிரச்னைக்கு உரிய இடத்தின் உரிமையாளர் இர்ஃபானிடம் பேசினோம். ''ஆத்தூர், பாப்பநாயக்கன் பட்டி கிராமத்தில் எங்க தாத்தா அப்துல் மஜித் வி.ஏ.ஓ-வாகப் பணிபுரிந்த நேரத்தில், இந்தத் தோட்டத்தை வாங்கினார். 8.25 ஏக்கர் பட்டா நில மாகவும், தோட்டத்தை ஒட்டி மூன்று ஏக்கர் நத்தம் புறம்போக்கும் சேர்த்து 11.25 ஏக்கர் உள்ளது. அப்போது, ஏழெட்டு தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் தங்கிக்கொள்ள தோட்டத்தில் ஒரு பகுதியை ஒதுக்கிக் கொடுத்தார். 1981-ல் இந்த இடம் எங்கள் அம்மா ஜவகர்ஜான் பெயருக்குக் கிரையம் செய்யப்பட்டது. இப்போது, இந்த இடத்தில் 56 தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் இருக்கின்றன. அவர்கள் மிகவும் ஏழ்மை யாகவும், பாவப்பட்ட மனிதர்களாகவும் இருப்பதால் அவர்களை விரட்ட எங்களுக்கு மனம் இல்லை.

வழியை மறிக்கிறாரா ஆளும் கட்சி எம்.எல்.ஏ.?

இந்தத் தோட்டத்தை எங்களால் சரிவர பராமரிக்க முடியவில்லை. ஆக்கிரமிப்பும் அதிகமாகி விட்டது என்றாலும் பாரம்பரியச் சொத்து என்பதால் விற்க எங்களுக்கு மனம் இல்லை. நான்கு மாதங்களுக்கு முன், ஏற்காடு எம்.எல்.ஏ. பெருமாளின் மகன் ராஜேஷ், 'இந்த நிலத்தை எங்களுக்குக் கொடுத்துடு. என்ன வேணுமோ வாங்கிக்க’ என்று மிரட்டும் தொனியில் பேசினார். நான் வீட்டில் அனைவருடனும் கலந்து பேசினேன். அரசியல்வாதிக்குக் கொடுத்தால் பணம் வராது என்பதாலும் அந்த 56 ஏழைக் குடும்பங்களையும் துரத்தி விடுவார்கள் என்பதாலும் எம்.எல்.ஏ-வுக்கு விற்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். இனி விற்காமல் வைத்திருந்தால் பிரச்னை வரலாம் என்ப தால், எங்களுக்கு நம்பிக்கையான ஆத்தூரைச் சேர்ந்த ரியல்எஸ்டேட் ஓனர் கணேசனிடம் ஒன்றே கால் கோடிக்குப் பேசி முடித்து ஒப்பந்தம் போட்டோம்.

வழியை மறிக்கிறாரா ஆளும் கட்சி எம்.எல்.ஏ.?

இந்த விஷயத்தை தெரிந்துகொண்டு, 'இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்த எம்.எல்.ஏ-வுக்குக் கொடுக்காமல் வேற ஊர்க்காரனுக்கு கொடுக்குறியா? அவன் எப்படிக் கால் வைக்கிறான்னு

வழியை மறிக்கிறாரா ஆளும் கட்சி எம்.எல்.ஏ.?

பார்க்கிறேன்’ என்று பெத்தநாயக்கன்பாளையம் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ரமேஷ், பாப்பநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் ராஜூ, கவுன்சிலர் மாது போன்ற பலரும் நேரடியாக என்னை மிரட்டினார்கள்.  

எங்கள் தோட்டத்துக்குச் செல்லும் 20 அடி வழிப்பாதையை மறித்து, எம்.ஜி.ஆர். மன்றம் கட்டு வதற்காக  கடந்த வாரம் பூமி பூஜை போட்டார் பெருமாள். அடுத்த நாள், கருங்கல்லை போட்டு தோட்டத்துக்குப் போகும் வழியை அடைத்து விட்டார்கள். நிலைமை திடீரென சிக்கல் ஆனதால், கணேசன் இப்போது நிலத்தை வாங்கப் பயப்படுகிறார். மேலும், எங்கள் தோட்டத்தில் இருக்கும் 56 குடும்பங்களும் ரோட்டுக்குச் செல்ல வழி இல்லாமல் தவிக்கிறார்கள்'' என்றார் புலம்பலுடன்.

நாம் பார்த்த நேரத்தில், பள்ளியில் இருந்து வீடு திரும்பிய குழந்தைகள் கற்களின் மீது ஏறி... தாண்டிச் சென்று கொண்டு இருந்தார்கள். டூ வீலர் இருப்பவர்கள் குடியிருப்பைச் சுற்றிக்கொண்டு சின்னஞ்சிறிய இடைவெளியில் நெளிந்து போவதும்... பெண்களும் வயதானவர்களும் சிரமப்பட்டு சுற்றிப் போவதையும் கண்டோம். நாமும் கற்களைத் தாண்டிச் சென்று தோட்டத்தில் குடியிருக்கும் லட்சுமி என்பவரிடம் பேசினோம். ''எனக்குக் கல்யாணம் ஆனதில் இருந்து பாய் வீட்டுத் தோட்டத்துலதான் குடியிருக்கிறோம். புருஷன் இல்லாம என் ரெண்டு பொண்ணுங்களை கஷ்டப்பட்டு வளர்த்து கட்டிக்கொடுத்தேன். ரெண்டு பேரையும் புருஷனுங்க விட்டுட்டுப் போயிட்டாங்க. அந்தச் சோகத்துல ஒரு பொண்ணு செத்துப்போச்சு. நான் கூலி வேலைக்குப் போய்த்தான், என்னோட நாலு பேத்திகளையும் படிக்க வைக்கிறேன். அவங்க பள்ளிக்கூடம் போக முடியாம எம்.எல்.ஏ. ஆளுங்க குழியைத் தோண்டி கல்லைக் கொட்டிட்டாங்க. பாய் மட்டும் ஓகே சொன்னா உடனே ரோட்டுல உட்கார்ந்து போராடத் தயாரா இருக்கோம். ஆனா, அவர்தான் பொறுமையா இருப்போம்னு சொல்லி இருக்கார்'' என்றார் ஆவேசத்துடன்.

இந்த விவகாரம் குறித்து எம்.எல்.ஏ. பெருமாளிடம் விளக்கம் கேட்டோம். ''அந்த இடத்தில் நத்தம் புறம்போக்கு இருக்கிறது. அந்தத் தோட்டத்துக்குச் செல்ல இரண்டு வழிகள் இருக்கின்றன, அந்த வழி அவர்களுக்கானது இல்லை. அந்த இடத்தில் ஏற்கனவே எம்.ஜி.ஆர். மன்ற நடந்துக்கிட்டுதான் இருந்தது. கட்சி அலுவலகம் கட்டுவதற்காக பூமிபூஜை நடப்பதாக கட்சி நிர்வாகிகள் சொன்னதால்தான், பூஜையில் கலந்து கொண்டேன். ஆத்தூர் ரியல் எஸ்டேட்காரர்கள், இர்ஃபானைத் தூண்டி விட்டு அரசியல் செய்கிறார்கள். நான் ரியல் எஸ்டேட்காரன் கிடையாது. அரசியலும், விவசாயமும்தான் என் தொழில். விவசாயம் செய்ய ஆட்களே கிடைக்காதபோது, எதுக்காக அந்தத் தோட்டத்தை வாங்கப் போறேன்? நானே என்னுடைய மூன்று தோட்டத்தையும் குத்தகைக்குத்தான் விட்டு இருக்கிறேன். அந்த நிலத்தை வாங்குவதற்காக என்னுடைய தரப்பில் இருந்து யாரும் அவரிடம் பேசவில்லை. இதை எந்தக் கோயிலிலும் சத்தியம் செய்கிறேன்'' என்றார்.

'தன்னுடைய இடத்தில் எம்.ஜி.ஆர். மன்றம் கட்டுவதாகச் சொல்லி பாதையை மறித்து வில்லங்கம் செய்கிறார்கள்’ என்று, எம்.எல்.ஏ. பெருமாள் உள்ளிட்ட ஏழு பேர் மீது ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு கொடுத்திருக்கிறார் இர்ஃபான்.

இனியாவது நடவடிக்கை எடுக்குமா போலீஸ்?

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: க.ரமேஷ்