Published:Updated:

தீக்குளித்தாரா? தீ வைத்து எரிக்கப்பட்டாரா?

கானத்தூர் காவல் நிலைய பகீர்

பிரீமியம் ஸ்டோரி
##~##
தீக்குளித்தாரா? தீ வைத்து எரிக்கப்பட்டாரா?

காவல் நிலையத்தில் நடப்பது எல்லாமே சந்தேகமாகவும் சர்ச்சைக்கு உரியதா கவுமே மாறிவிடுகிறது! 

சமீபத்தில் சென்னை, கானத்தூர் காவல் நிலையத்தில் நடந்த மரணம் சென்னையை உலுக்கி எடுத்தது. இந்த விவகாரம் குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, ''குடும்ப அட்டை வைத்திருக்கும் ஏழை களுக்கே மண்ணெண்ணெய் முறை யாகக் கிடைக்காத நிலையில் காவல் நிலையத்தில் ஏது மண்ணெண்ணெய்? விசாரணைக் கைதியை தீயிட்டுக் கொல்வதற்காகவே வாங்கி வைத் தார்களா? 'பொய் சொன்னாலும், பொருத்தமா சொல்லுங்கடா போக்கத்தப் பசங்களா’ என்ற உடுமலைக் கவிராயரின் பாடல்தான் ஞாபகத்துக்கு வருகிறது'' என்று இந்தப் பிரச்னையின் வேகத்தை அதிகரித்து இருக்கிறார்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரைச் சேர்ந்தவர்தான் மரணம் அடைந்த தையல் தொழிலாளி ஹுமாயுன். என்ன நடந்தது என்று அவரது மனைவி கௌகர் யாஸ்மினிடம் கேட்டோம்.

தீக்குளித்தாரா? தீ வைத்து எரிக்கப்பட்டாரா?

''எங்க வீட்டுக்காரர் தையல் வேலையும், கிடைக்கிற கூலி வேலைகளும் செய்வார். எங்களுக்கு மூணு பசங்க. நானும் வீட்டு வேலைக்குப் போவேன். கானத்தூர்ல இருக்கும் சௌகத் அலி எங்க வீட்டுக்காரருக்குப் போன் பண்ணி, 'கொசுவலை அடிக்கிற வேலை இருக்கு’னு கூப்பிட்டார். உடனே,

தீக்குளித்தாரா? தீ வைத்து எரிக்கப்பட்டாரா?

இவரும் கிளம்பிப் போனார். ராத்திரி வரைக்கும் வீட்டுக்கு வரவே இல்லை. நிறைய வேலை இருந்தா, வீட்டுக்கு வராம இருப்பது சகஜம்தான். மறுநாள் காலையில் ஒரு போலீஸ்காரர் எங்க வீட்டுக்கு வந்து, 'உம் புருசன் தீ வெச்சிக் கொளுத்திக்கிட்டான். ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். போய்ப் பாரு’னு சொன்னார். எனக்கு ஒண்ணுமே புரியலை. அந்த நேரம்தான் சௌகத் அலி ஆட்டோ எடுத்துட்டு எங்க வீட்டுக்கு வந்தார். என்னை ஆட்டோவுல ஏத்திட்டு ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனார். அப்போதான், 'கொசுவலை அடிக்கப் போன வீட்டுல நகை திருட்டு போனதாச் சொல்லிட்டாங்க. அதை விசாரிக்கிறதுக்காக எங்களை போலீஸ்காரங்க கூட்டிட்டுப் போனாங்க. என்னை மட்டும் ராத்திரி போகச் சொல்லிட்டாங்க’ன்னு சொன்னார்.

நாங்க ஆஸ்பத்திரிக்குப் போய்ச் சேர்ந்தபோதே, அவர் இறந்துட்டதாச் சொல்லிட்டாங்க. போலீஸ்காரங்க என்ன செஞ்சாங்கன்னே எனக்குத் தெரியலை. சௌகத் அலியும் முழுத்தகவலும் சொல்ல மாட்டேங்கிறார். அவர் மேலேயும் எனக்கு சந்தேகமாத்தான் இருக்கு. எங்க வீட்டுக்காரர் செல்போனைக்கூட இன்னும் தர மாட்டேங்கிறாங்க...'' என்று கதறினார்.

இந்த விவகாரத்தை முஸ்லிம் அமைப்புகள் கையில் எடுத்துள்ளன. த.மு.மு.க-வின் பரங்கிமலை ஒன்றியத் துணைத்தலைவர் முகமது யூசுப், ''விசாரணைக்குப் போன ஒருத்தர், அங்கேயே தீ வைச்சு தற்கொலை செஞ்சுக்க வேண்டிய அவசியம் எப்படி வரும்? போலீஸார்தான் அவரை அடித்துக் கொன்றுவிட்டு, அதில் இருந்து தப்புவதற்காக அவர் உடலுக்குத் தீ வைத்திருக்க வேண்டும். விசாரணைக்கு அழைத்துச் சென்றவரை காவல் நிலையத்தில் இரவில் தங்கவைக்கும் அதிகாரத்தைப் போலீஸாருக்கு யார் கொடுத்தது?

சம்பவத்தில் தொடர்புடைய ஒரு சப் இன்ஸ் பெக்டரையும் காவலரையும் மட்டும் இப்போது சஸ்பெண்ட் செய்து இருக்கிறார்கள். இன்ஸ்பெக்டரை இடமாற்றம் செய்து இருக்கிறார்கள். இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணமாக அரசு இரண்டு லட்ச ரூபாய் நிதிஉதவி அறிவித்து இருக்கிறது. இத்தனை விஷயங்களும் அதிவிரைவாக நடப்பதைப் பார்த்தாலே, இதில் ஏதோ பெரிய தவறு நடந்து இருப்பது உறுதியாகிறது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றி விசாரணை நடத்தும் வரை நாங்கள் ஓயப்போவது இல்லை'' என்று கொந்தளித்தார்.

தீக்குளித்தாரா? தீ வைத்து எரிக்கப்பட்டாரா?

சம்பவம் நடந்த நேரத்தில் கானத்தூர் இன்ஸ்பெக்டராக இருந்து இப்போது இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கும் ராஜேந்திரனிடம் பேசினோம். ''எங்கள் கவனக்குறைவால்தான் இந்த சம்பவம் நடந்தது என்பதை ஒப்புக்கொள்கிறோம். நகை காணாமல் போன இடத்தில் ஹுமாயுன் இருந்ததால், அவர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தவர்கள் சொன்னார்கள். அதனால் அவரையும் சௌகத் அலியையும் பிடித்து வந்து விசாரித்தோம். ஹுமாயுன் மீதுதான் சந்தேகம் இருப்பதாகச் சொல்லி இருந்ததால், சௌகத் அலியை விசாரணை செய்ததும் அனுப்பி விட்டோம். ஹுமாயுனிடம் கூடுதல் விசாரணை செய்ய வேண்டி இருந்ததால், ஸ்டேஷனில் வைத்திருந்தோம். ஏற்கெனவே ஒரு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு இருந்த மண்ணெண்ணெய்(?) ஸ்டேஷனில் இருந்தது.

அப்போது பணியில் இருந்த போலீஸார் வாகன சோதனைக்குச் சென்றுவிட்டதால்  ஸ்டேஷனில் ஹுமாயுன் மட்டும்தான் இருந்தார். விசாரணைக்குப் பயந்து அங்கே இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். நாங்கள் தீயை அணைத்து பக்கத்தில் இருந்த தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கே, சிகிச்சை அளிக்க முடியாத காரணத்தால், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போனோம். ஆனாலும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. ஹுமாயுனை நாங்கள் யாரும் கொடுமைப்படுத்தவில்லை. அவராகத்தான் தீ வைத்துக் கொண்டார்'' என்று சொன்னார்.

'ஒரு கைதியை மட்டும் ஸ்டேஷனில் வைத்து விட்டு எல்லா போலீஸ்காரர்களும் ரவுண்ட்ஸ் போய்விட்டோம்’ என்று சொல்வது நம்பும்படியாக இல்லை. போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்து வைக்கப்பட்டு இருக்கும் துப்பாக்கி, அரிவாள், கத்தி போன்றவற்றை கைதிகள் எடுத்துப் பயன்படுத்த ஆரம்பித்தால் நிலைமை எங்கே போய் நிற்கும்?

முழு உண்மையும் வெளிவர, அரசு நடவடிக்கை எடுக்கட் டும்!

- எம். செய்யது முகம்மது ஆஸாத்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு