Published:Updated:

விபத்தில் சிக்கியவர்களை விரட்டி அடிக்கிறார்கள்!

மரக்காணம் அரசு மருத்துவமனை மீது 'திடுக்' புகார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

க்களுக்கு அவசர மற்றும் அவசியச் சிகிச்சைகள் செய்வதற்காகத்தான் அரசு மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால், வெடிவிபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய ஒருவருக்கு சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பியதால், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மரக்காணம் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை எதிர்த்து மறியல் போராட்டத்தில் இறங்கி விட்டனர் மக்கள். 

பாதிக்கப்பட்டவரின் தந்தை ஏழுமலையிடம் பேசினோம். ''போன 6-ம் தேதி சாயங்காலம், நெருங்கிய ஒருவரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட என் மகன் ரமேஷ§ம் அவனது நண்பன் பாரதியும் சேர்ந்து வாணவெடி வைத்திருக்கிறார்கள். என் மகன் ஒரு வெடியைப் பற்றவைத்த நேரத்தில், எப்படியோ மற்ற வெடிகளிலும் பற்றிக்கொண்டது. அந்த வெடிகள் ஒட்டுமொத்தமாகக் கட்டிவைக்கப்பட்டு இருந்ததால், தரையிலேயே வெடித்து விட்டன. என் மகனுக்கு முகம் முழுவதும் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனே, மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றோம். அங்கே முதல்உதவி சிகிச்சை எதுவும் செய்யாமல், 'இங்கு ஏன் கொண்டு வந்தீர்கள்? ஜிப்மருக்குப் போங்கள்’ என்று விரட்டினர்'' என்று நிறுத்தியவரைத் தொடர்ந்து பேசினார், சாலை மறியலுக்குத் தலைமை தாங்கிய பா.ம.க. நகர செயலாளர் ஆறுமுகசாமி.

விபத்தில் சிக்கியவர்களை விரட்டி அடிக்கிறார்கள்!
விபத்தில் சிக்கியவர்களை விரட்டி அடிக்கிறார்கள்!

''இங்கே இருந்து ஒருத்தரைக் கார் வைச்சு புதுச்சேரி ஜிப்மருக்குக் கூட்டிட்டுப் போகணும்னா, குறைஞ்சது ஆயிரம் ரூபாய் செலவாகும். அங்கே போனாலும், 'உங்க ஊர்லே அரசு மருத்துவமனை இருக்கும்போது இங்கே ஏன் வந்தீங்க’ன்னு கேள்வி மேல் கேள்வி கேட்குறாங்க. அன்னைக்கு ரமேஷை உடனே ஜிப்மருக்குச் கூட்டிட்டுப் போனதால் காப்பாத்திட்டோம். இப்போ நல்லா இருக்கான். ஆனா, எல்லோராலும் இப்படிச் செய்ய முடியுமா?

இந்தச் சுற்றுவட்டாரத்தில் சுமார் 25 கிலோ மீட்டருக்கு வேறு பெரிய ஆஸ் பத்திரியே கிடையாது. இந்த ஆஸ்பத்திரி, இ.சி.ஆர். பைபாஸ் சாலையில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இருக்கிறது. இந்தப் பகுதியில் ஒரு மாதத்துக்கு குறைந்தது 20 விபத்துக்களாவது நடக்கின்றன. ஆனால், விபத்தில் சிக்கியவர்களை இங்குள்ள டாக்டர்கள் கவனிப்பதே இல்லை. புதுவைக்கு விரட்டி விடுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். எவ்வளவு ஆபத்தான நிலைமையில் வந்தாலும்  இ.சி.ஜி., ஸ்கேன், எக்ஸ்-ரே எதுவுமே எடுக்க மாட்டாங்க. இந்தப் பகுதியில் இருப்பவர்கள் பெரும்பாலும் கூலி வேலை செய்பவர்கள்தான். காலங்காத்தால வேலைக்குப் போனா, சாயங்காலம்தான் வீட்டுக்கு வருவாங்க. காய்ச்சல், காயம்னா கூட அதுக்குப் பிறகுதான் ஆஸ்பத்திரிக்குப் போவாங்க. ஆனா, அந்த

விபத்தில் சிக்கியவர்களை விரட்டி அடிக்கிறார்கள்!

நேரத்தில் டாக்டர்கள் யாரும் இருக்கிறதே இல்லை. மருந்து இல்லை, மாத்திரை இல்லைன்னு ஏகப்பட்ட பிரச்னைகள். அவசரத்துக்கு இளைஞனின் உயிரைக் காப்பாத்தக்கூட முயற்சி செய்யலைன்னதும்தான் மக்களுக்குக் கோபம் வந்து சாலை மறியலில் இறங்கி விட்டனர். எங்கள் தேவைகளை சொல்லி இருக்கிறோம். அரசுதான் இனி நடவடிக்கை எடுக்கணும்'' என்றார்.

மரக்காணம் அரசு மருத்துவமனை யின் முதன்மை டாக்டர் மாரியம்மாளி டம் பேசினோம். ''இது ஒரு நான்-தாலுக்கா மருத்துவமனை என்பதால் மொத்தமே நான்கு டாக்டர்கள்  இருக்க வேண்டும். ஆனால், இப்போது மூன்று டாக்டர் கள்தான் இருக்கிறோம். காலையில் 7.30 மணி தொடங்கி மாலை 5 மணி வரை தொடர்ந்து பணியாற்றுகிறோம். 24 மணி நேரமும் மருத்துவச்சேவை வேண்டும் என்றால், குறைந்தது ஐந்து டாக்டர்களாவது இருக்க வேண்டும். அப்போதுதான் ஷிஃப்ட் முறையில் பணியாற்ற முடியும். இதுகுறித்து மேலிடத்தில் பேசி இருக்கிறோம்.

ஸ்கேனிங் என்பது கர்ப்பிணிகளுக்கு மட்டும்தான் என்பதால், வாரம் ஒரு முறை ஸ்கேன் செய்கிறோம். இ.சி.ஜி., எக்ஸ்-ரே போன்றவையும் அவசியம் நேரும்போது எடுக்கத்தான் செய்கிறோம். விபத்தில் சிக்கிய பையன் இங்கே வந்தபோது, அந்தப் பையனுக்கு கண்கள்  பாதிக்கப்பட்டு இருந்தது. அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதி இங்கே இல்லை என்ற காரணத்தால்தான், ஜிப்மருக்குக் போகச் சொன்னோம். மற்றபடி விபத்தில் சிக்கிய அனை வரையும் விரட்டுவதாகச் சொல்வது உண்மை அல்ல'' என்றார்.

சாலை மறியலைத் தொடர்ந்து, மருத்துவமனை யைப் பார்வையிட வந்தார் ஆளும் கட்சியைச் சேர்ந்த திண்டிவனம் எம்.எல்.ஏ. ஹரிதாஸ். அவரிடம் பேசினோம். ''நான் மரக்காணம் மருத்துவ மனைக்கு இரவுநேரப் பணிக்காக ஒரு டாக்டரை நியமித்து இருந்தேன். ஏன் என்று தெரியவில்லை, அவரை நீக்கி இருக்கிறார்கள். சுகாதாரத் துறை அமைச்சரிடமும், முதல்வர் அம்மாவிடமும் உடனே பேசி இந்த மருத்துவமனையை தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த் துவதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறேன். 24 மணி நேரமும் அனைத்து மருத்துவ வசதிகளுடனும் இந்த மருத்துவமனையை இயங்க வைக்கிறேன்'' என்று வாக்குறுதி கொடுத்தார்.

சொன்னதை செயலில் காட் டட்டும்!

- அற்புதராஜ்

படம்:  ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு