தஞ்சை அதிர்ச்சி
##~## |

'பள்ளிக் குழந்தைகளுக்காக சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்திய முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். படித்த பள்ளி, இழுத்து மூடும் நிலையில் உள்ளது. காப்பாற்றுங்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) தகவல் வந்தது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாரங்கபாணி சன்னதி தெருவில் 1910-ம் ஆண்டு தொடங்கப்பட்டது யானையடி அரசு தொடக்கப் பள்ளி. இங்கேதான் எம்.ஜி.ஆர். தன் ஆரம்பக் கல்வியைக் கற்றார். 1922-ம் ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி, முதல் வகுப்பில் எம்.ஜி.ஆர். சேர்க்கப் பட்டார். நான்காம் வகுப்பின் பாதியில் மாற்றுச் சான்றிதழ் வாங்கிக்கொண்டு பள்ளியில் இருந்து வெளியேறினார். நூற்றாண்டு கண்ட அந்த ஆனை யடிப் பள்ளிக்கூடம்தான் இப்போது சிக்கலில் இருக்கிறது.

இந்தப்பள்ளி குறித்து நமக்குத் தகவல் சொன்ன இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணிச்செயலாளர் குருமூர்த்தி, ''கும்பகோணத்தில் மொத்தம் ஆறு நகராட்சிப் பள்ளிகள் உள்ளன. அனைத்துமே மோசமான நிலையில்தான் உள்ளது. குறிப்பாக, எம்.ஜி.ஆர் படித்த யானையடிப் பள்ளியை

அரசும் அதிகாரிகளும் கண்டுகொள்வதே இல்லை. நினைவுச் சின்னமாகப் பாதுகாக்க வேண்டிய ஒரு பள்ளி, இன்று இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துவிட்டது. முன்பு இங்கே 640 மாணவர்கள் படித்தனர். ஆனால், இப்போது 30 பேர்தான் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், ஓர் ஆசிரியர் என்று பரிதாபமான நிலையில் இயங்கி வரும் இந்தப் பள்ளியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை.
சத்துணவுத் திட்டத்தை தமிழகம் முழுக்க விரிவுபடுத்தியவர் எம்.ஜி.ஆர். ஆனால், அவர் படித்த பள்ளியில் இப்போது சத்துணவு சமைக்கப்படுவது இல்லை. அருகில் இருக்கும் அரசு மேல் நிலைப்பள்ளியில் இருந்து இரண்டு வாளிகளில் சத்துணவு எடுத்து வந்து, மாணவர்களுக்குக் கொடுக்கிறார்கள். மாணவர்களின் எண்ணிக்கை குறைவு என்று காரணம் கூறி பள்ளியை மூட இருப்ப தாக பேச்சு நிலவுகிறது'' என்றார்.
இந்த விவகாரம் குறித்து கும்பகோணம் அ.தி.மு.க நகராட்சித் தலைவர் ரத்னா சேகரிடம் பேசினோம். ''தலைவர் எம்.ஜி.ஆர். படித்த பள் ளியை நிச்சயம் போற்றிப் பாதுகாப்போம். புதிய கட்டடங் களுடன் சீரமைக்க நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. பள்ளி மூடப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. மாணவர்க ளின் சேர்க்கை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்'' என்றார்.
இதுகுறித்துப் பேசிய கும்பகோணம் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், ''யானை யடிப்பள்ளி மேம்பாட்டுக்காக தொகுதி மேம் பாட்டு நிதியில் இருந்து நிதிஒதுக்கீடு செய்ய தயாராக இருக்கிறேன். அடுத்த ஆண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்'' என்றும் உறுதி அளித்தார்.
- சி.சுரேஷ், படங்கள்: கே.குணசீலன், செ.சிவபாலன்