Published:Updated:

'யாரைக் கேட்டு என் தொகுதிக்குள்ளே வந்தீங்க?'

அமைச்சரிடம் எகிறிய அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

பிரீமியம் ஸ்டோரி
##~##

முதல்வரால் முக்கியமானவர் என்று கருதப்படும் உள்ளாட்சித் துறை அமைச்சர் முனுசாமியை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஒருவரே நடுத் தெருவில் வைத்து அர்ச்சனை செய்த சம்பவத்தை என்ன என்று சொல்வது?   

கோவை மாநகராட்சியின் சிறப்புத் தூய்மைக் குழு துவக்க விழா கடந்த 13-ம் தேதி நடந்தது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் முனுசாமி, கவுண்டம் பாளையம் தொகுதிக்குச் சென்றார். மேயர் செ.ம.வேலுச்சாமியுடன் சென்றவர், மருதம் நகரில் சமநிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுமானப் பணியைப் பார்வையிட்டுக்கொண்டு இருந்தார். அப்போது, 'யாரைக் கேட்டு என் தொகுதிக்குள்ளே வந்தீங்க?’ என்று சிம்மக் குரல் ஒலித்தது. திடுக்கிட்டுத் திரும்பி பார்க்க... ஆவேசம் பொங்க நின்றார் அந்தத் தொகுதியின் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான ஆறுக்குட்டி.

கோபத்துடன் அமைச்சரை நெருங்கிய ஆறுக்குட்டி மளமளவென வாக்குவாதத்தில் இறங்க, அருகில் இருந்தவர்கள் அதிர்ந்து விட்டார்கள். கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வான சேலஞ்சர் துரை, சமாதானம் பேசிப்பார்த்தும் பயன் இல்லை. ஒரு கட்டத்தில் முனுசாமியே சமாதானக் கொடி ஆட்டியும் ஆறுக் குட்டி அடங்குவதாக இல்லை.

'யாரைக் கேட்டு என் தொகுதிக்குள்ளே வந்தீங்க?'

'நினைச்ச நேரத்துக்கு சும்மா வந்துட்டுப் போற இடமுன்னு இதை நினைச்சீங்களா? இந்த தொகுதியோட எம்.எல்.ஏ. நான். என்கிட்டே ஒரு வார்த்தை சொல்ல முடியாதா?’ என்று எகிறிக் கொண்டே இருந்தார் ஆறுக்குட்டி.

ஒரு கட்டத்தில் 'ஆறு... கொஞ்சம் அமைதியா இருங்க. கோபப்படாதீங்க. இனிமே தவறு நடக் காமப் பார்த்துக்கிறேன்’ என்று முனுசாமி மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்தார். ஆனால் சமாதானம் அடையாத ஆறுக்குட்டி, 'என்னோட கோபத்துல நூறு சதவிகிதம் நியாயம் இருக்குது. இது அம்மா காதுக்குப் போகட்டும். அவங்க விசாரிச்சா, என்னோட நியாயத்தை நிச்சயம் புரிஞ்சுப்பாங்க’ என்று விடாமல் உறும... நொந்துபோன முனுசாமி கும்பிடு போட்டுவிட்டு காரில் ஏறிக் கிளம்பி விட்டார்.

இது சம்பந்தமாக அ.தி.மு.க-வினரிடம் பேசினோம். ''ஆறுக்குட்டியோட சொந்த தொகுதிக்குள் நடக்கிற அரசு நிகழ்ச்சி இது. அவரைக் கூப்பிடாதது தப்புதான். இதுல இன்னொரு விஷயத் தையும் கவனிச்சே ஆகணும். கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் கோவையில எங்க கட்சி அலுவலகமான, இதய தெய்வம் மாளிகையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்துச்சு. அப்போ மேயர் செ.ம.வேலுசாமிக்கும் ஆறுக் குட்டிக்கும் இடையில கருத்து மோதல் வந்திச்சு. ஆவேசப்பட்ட ஆறுக்குட்டி, 'ஆனது ஆகட்டும், நான் பார்த்துக்கிறேன்’னு பேசினார்.

இப்போ தன் சொந்தத் தொகுதிக்குள்ளே மினிஸ்டர்கூட அந்த மேயரைப் பார்த்ததும் அவருக்கு ஆத்திரம் தலைக்கு ஏறிடுச்சு. என்ன தான் நியாயம் இருந்தாலும் பொது இடத்தில் ஆறுக்குட்டி இப்படி வெளிப்படையாக் கோபத்தைக் காட் டாமல் இருந்திருக்கலாம்'' என்று சொன் னார்கள்.

ஆறுக்குட்டி எம்.எல்.ஏ-விடம் நாம் கேட்டோம். ''நான் ஒண்ணும் அனாவசியமா வாக்குவாதம் எதுவும் பண்ணலை. நான் அமைச்சரிடம் பேசியதை சண்டைனோ, தகராறுனோ எடுத்துக் காதீங்க. என்னோட உரிமைக்காக நான் குரல் கொடுத்தேன், அவ்வளவுதான். கவுண்டம்பாளையம் என்னோட மண். எனக்கு அங்கீகாரம் கொடுத்து அம்மா என்னை வேட்பாளரா நிறுத்தினாங்க. அம்மாவின் ஆசீர்வாதத்தால் நான் ஜெயிச்ச தொகுதி இது. இந்தத் தொகுதி மக்களுக்கு என்ன தேவை இருக்குதுன்னு ஒரு எம்.எல்.ஏ-வான எனக்குத் தானே தெரியும்? அமைச்சர் இங்கே வர்றப்ப எனக்கு சரியானபடி தகவல் சொல்லி இருந்தா, வணக்கத்தோட வரவேற்று இருப்பேன். தொகுதி மக்களோட தேவை களையும் பொன்னாப் பூவா எடுத்துச் சொல்லியிருப்பேன். அதை விட்டுட்டு என்னோட வீட்டுக்குள்ள என்கிட்டயே சொல்லாம வந்தா... கோபம் வரத்தானே செய்யும்? இதைத்தான் நான் கேட்டேன். விவகாரம் அம்மா காதுக்குப் போய் விசாரணைவெச்சாலும் இதைதான் சொல்லப்போறேன். எனக்கு வேற யாரிடமும் எந்த பிரச்னையும் இல்லை'' என்று வெளிப்படையாகவே பேசினார்.

இதற்கு அமைச்சர் முனுசாமி என்ன விளக்கம் சொல்கிறார்? ''அரசோட திட்டங் களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க நேரம் காலம் பார்க்காமல் நாங்கள் ஓடிக் கொண்டு இருக்கிறோம். கோவையில் இருக்கும் கட்சி நிர்வாகிகள் கூப்பிட்டார்கள் என்று நான் அந்த இடத்துக்குப் போனேன். அது யார் தொகுதி என்பது கூட எனக்குத் தெரியாது. அவர்களுக்குள் ஏதோ பிரச்னை என்பது எனக்குத் தெரியாது. அதனால்தான், தேவை இல்லாமல் அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்து விட்டது'' என்று நிதானமாகவே சொன்னார்.

அதுசரி, சண்டையில கிழியாத சட்டை எங்கேதான் இருக்கு?

- எஸ்.ஷக்தி, படம்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு