Published:Updated:

யானைத் தந்தத்தை சுட்டதா வனத் துறை?

தர்மபுரி பரபரப்பு

பிரீமியம் ஸ்டோரி
##~##
யானைத் தந்தத்தை சுட்டதா வனத் துறை?

'எங்களுக்கு எப்போது விமோசனம்?’ என்று தர்மபுரி யானைகள் கலங்கிப்போய் இருக்கின்றன! 

ஆந்திராவில் இருந்து தடம் மாறி வந்த யானைக் குடும்பம் ஒன்று நான்கு மாதங்களாக சேலம், தர்மபுரி மாவட்ட வனப் பகுதியில் திரிகிறது. வனத் துறையினர் யானைகளைப் பட்டாசு வெடித்துத் துரத்தித் துன்புறுத்துகிறார்கள் என்பதை 'வழி தவறிய யானைகள்... உயிர் குடிக்கும் வனத் துறை!’ என்ற தலைப்பில் கடந்த 8.7.12 தேதியிட்ட ஜூ.வி. இதழில் எழுதி இருந்தோம். இந்தச் செய்தி வெளியானதும் வனத் துறை அமைச்சர் பச்சைமால் விசாரணை நடத்துவதற்காக கடந்த 11-ம் தேதி சேலம் வந்தார். 'யானைகள் பிரச்னைக்குத் தீர்வு கிடைக்கும். தவறு செய்த வன அலுவலர்களுக்குத் தண்டனை கிடைக்கும்’ என சமூக ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் அமைச்சரோ, யானைகள் இருக்கும் ஏரியா பக்கம்கூட போகாமல், கலெக்டர் அலுலகத்தை மட்டும் எட்டிப் பார்த்துவிட்டுக் கிளம்பிவிட்டார். இதனால் வன ஆர்வலர்கள் அமைச்சர் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் வழி தவறிய யானைகளில், ஓர் ஆண் யானைக்குத் தந்தத்தைக் காணவில்லை என்ற செய்தியும் வெளியாக.. ஏரியா மீண்டும் பரபரப்பாகி உள்ளது.

யானைத் தந்தத்தை சுட்டதா வனத் துறை?

'சேலமே குரல் கொடு’ அமைப்பின் தலைவர் பியூஸ் நம்மிடம், ''வனத் துறை அமைச்சருக்கு வனத்தைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டும். வன உயிரினங்கள் மீது அக்கறை வேண் டும். இது எதுவும் இல்லாத ஒருவர் வனத் துறை அமைச்சராக இருந்தால், காடு எப்படி உருப்படும்?

ஆந்திராவில் இருந்து வழி தவறி வந்த ஏழு யானைகள் சேலம், தர்மபுரி வனப் பகுதியில் வழி தெரியாமல் தத்தளித்தன. அப்போதே வனத் துறையினர் சரியான வழியில் செயல்பட்டு இருந்தால், எளிதில் அவற்றைத் திருப்பி அனுப்பி இருக்க முடியும். ஆனால் அவர்கள் யானைகள் மீது வெடி

யானைத் தந்தத்தை சுட்டதா வனத் துறை?

போட்டதால் இரண்டு யானைகள் செத்துவிட்டன. இதுபற்றி இதுவரை எந்த ஓர் விசாரணைக்கும் உத்தரவு இடப்படவில்லை. மீதி இருக்கும் யானைகளும் தினம் தினம் வனத் துறையின் அராஜகத்தால் அவதிப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில்தான் ஓர் ஆண் யானையின் தந்தம் காணாமல் போய் இருக்கிறது.

யானைகளுக்குள் சண்டை நடந்தால்தான் தந்தம் உடைய வாய்ப்பு உண்டு. ஆனால் இங்கே இருக்கும் யானைகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை. அதனால் அவற்றுக்குள் சண்டை வர வாய்ப்பே இல்லை. எங்களுக்கு வனத் துறையினர் மீதுதான் சந்தேகமாக இருக்கிறது. அவர்கள்தான் வெடியைப் போட்டு யானைத் தந்தத்தை உடைத்திருக்க வேண்டும். ஏனென்றால், யானைகளை எப்படிக் கையாள்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. வன விலங்குகளைக் கையாளத் தெரியாதவர்களை எப்படித்தான் வேலைக்குச் சேர்த்தார்களோ?

யானைத் தந்தத்தை சுட்டதா வனத் துறை?

விசாரணை நடத்த வந்த அமைச்சர், யானை இருக்கும் திசைப் பக்கம்கூட திரும்பிப் பார்க்காமல் போய்விட்டார். பொறுப்பில்லாத அமைச்சரை உடனடியாக பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று முதல்வருக்கு மனு அனுப்பி இருக்கிறோம்'' என்றார் ஆதங்கத்தோடு.

சேலம் மாவட்ட வனத் துறை அலுவலர் சுகிர்தராஜ் கோவில்பிள்ளையைச் சந்தித்துப் பேசினோம். ''சேலம் வனப் பகுதி யானைகள் வாழ்விடம் இல்லாத பகுதி. இந்த யானைகள் கடந்த சில வருடங்களில் மட்டும் 12 பேரைக் கொன்றுவிட்டன. இந்தப் பகுதி சிறு சிறு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கே யானைகள் புகுந்து கிராம மக்களைத் துன்புறுத்தினால்... அதற்கு நாங்கள்தானே பொறுப்பாக முடியும்? அதனால்தான் இந்தப் பகுதியில் இருந்து விரட்டுகிறோம். இந்த யானைகளால் கடந்த நான்கு மாதங்களாக எங்களால் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியவில்லை என்பதுதான் நிஜம்.

யானைகளைத் துன்புறுத்த வேண்டும் என்பது எங்களது நோக்கம் கிடையாது. தமிழக வனத் துறை அமைச்சர் சேலம் வந்த முதல் நாள் இரவே, 'யானைகளைப் பார்க்க வேண்டும். கூட்டிப் போங்கள்’ என்று கேட்டார். அந்த இரவு நேரத்தில் சென்றால் பாதுகாப்பாக இருக்காது என்றுதான் நாங்கள் அழைத்துச் செல்லவில்லை. மறு நாள் காலையும் காட்டுக்குள் செல்ல அமைச்சர் ஆர்வமாகத்தான் இருந்தார். ஆனால் யானைகள் அப்போது அந்தப் பகுதியில் இல்லை என்பதால், அவரை அழைத்துச் செல்லவில்லை. யானையின் தந்தம் காணாமல்போனது பற்றி விசாரித்து வருகிறோம்'' என்றார்.

தங்கள் சொந்தங்களுடன் யானைகள் விரைவில் இணையட்டும்!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு