Published:Updated:

வீடு கட்ட அனுமதி மறுக்குறாங்க!

கொடைக்கானல் கொந்தளிப்பு

பிரீமியம் ஸ்டோரி
##~##
வீடு கட்ட அனுமதி மறுக்குறாங்க!

''கொடைக்கானலில் யார் யாரோ வந்து வீடு கட்டு கிறார்கள். ஆனால், மண்ணின் மைந்தர்களான நாங்கள் வீடு கட்ட முயன்றால், சட்டங்களைக் காட்டி சிக்கல் உண்டு பண்ணுகிறார்கள் அரசு அதிகாரிகள்'' என்று கொந்தளிக்கிறார்கள் கொடைக்கானல் பூர்வீகக் குடிமக்கள். 

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்குக்குப் பின்பு, மலைகள் பாதுகாப்பு சட்டத்தை கடுமையாக அமல்படுத்தத் துவங்கினார்கள் அதிகாரிகள். நகர எல்லைக்குள் விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட கட்டடங்களுக்குக் கடிவாளம் போட்டனர். இதனால் நகர்ப் பகுதிகளைவிட்டு, கிராமப்புறங்களுக்கு இடம் பெயர்ந்தனர் பண முதலைகள். அங்கு தோட்ட வீடுகள் என்ற போர்வையில் அடுக்குமாடிக் கட்டடங்களைக் கட்டி விடுதிகளாகப் பயன்படுத்தி வருகிறார்கள். 2010-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த வள்ளலார், 'கிராமங்களில் வீடு கட்ட உள்ளூர் பஞ்சாயத்து அனுமதியுடன் ஊரக வளர்ச்சித் துறை, வனத் துறை, வருவாய்த் துறை, கனிமவளத் துறை,  வேளாண்மைத் துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளின் அனுமதி பெற்றால் மட்டுமே கொடைக் கானல் மலையைக் காப்பாற்ற முடியும்’ என மாநில அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். அரசும் அவருடைய பரிந்துரையை உத்தரவாக வெளியிட்டது. கிராமப்புறங்களில் வீடு கட்ட விண்ணப்பிப்போரின் சிரமத்தைத் தவிர்க்க, மாதம் ஒருமுறை அனைத்துத் துறை அலுவலர்களையும் ஒன்றாக கொடைக்கானல் அனுப்பிவைத்தார். இதனால் கடுமையான சட்டம் இருந்தும், பிரச்னை ஏற்படவில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு, கலெக்டர் வள்ளலார் அங்கிருந்து மாற்றப்பட... அதன் பின்னர்தான் சிக்கல் ஆரம்பம். 'மலைகளைப் பாதுகாக்கப் போடப்பட்ட சட்டம் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளின் பைகளை நிரப்ப மட்டுமே பயன்படுகிறது’ என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

வீடு கட்ட அனுமதி மறுக்குறாங்க!

இதுகுறித்து நம்மிடம் பேசினார் வில்பட்டி பஞ்சாயத்தைச் சேர்ந்த பிரபு, ''மலை பாதுகாப்பு சட்டம் இல்லை என்றால், கொடைக்கானலில் கட்டடங்களை மட்டும்தான் பார்க்க முடியும். ஆனால், இந்தச்

வீடு கட்ட அனுமதி மறுக்குறாங்க!

சட்டத்தால் பூர்வீக மக்களால் தங்களது வீடுகளைப் புதுப்பித்துக் கட்டவோ, புதிய வீடுகளைக் கட்டவோ முடியவில்லை. கொடைக்கானலை ஒட்டியுள்ள கிராமப் பஞ்சாயத்துகளில் தங்களுடைய பட்டா நிலத்தில் வீடு கட்ட முயலும்போது மலைப் பாதுகாப்பு சட்டத்தைக் காரணம் காட்டி அனுமதி தர மறுக்கிறார்கள். இங்கு ஒரு சென்ட் நிலத்தில் வீடு கட்ட வேண்டும் என்றால், குறைந்தது பத்து லட்சம் செலவாகும். காரணம் மலைப் பகுதி என்றால், மணல், செங்கல் விலை எல்லாம் இரு மடங்கு விலையில் விற்பனை செய்வார்கள். இந்த நிலையில் பஞ்சாயத்தில் கட்டட அனுமதிக்கு விண்ணப்பித்தால் 60 ஆயிரம் வரை லஞ்சம் கேட்கிறார்கள். ஏன் என்று கேட்டால், ஆறு டிபார்ட்மென்ட் அதிகாரிகளைக் கவனிக்க வேண்டி இருக்கிறது என்று பஞ்சாயத்துத் தலைவர்களே சொல்கிறார்கள். அப்படியே பணத்தைக் கொடுத்தாலும்கூட அனுமதி கொடுக்காமல் இழுத்தடிக்கிறார்கள். திண்டுக்கல் கலெக்டர் வெங்கடாசலத்திடம் மனு கொடுத்தபோது,  'வீட்டு மனைக்கு சிக்கல்படுத்த வேண்டாம். உடனே அனுமதி கொடுங்கள்’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டார். ஆனாலும், எதுவும் நடக்கவில்லை.

கொடைக்கானல் கிராமங்களில் உள்ளவர்கள் இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரசாங்க வேலைகளுக்குப் போகத் துவங்கி இருக்கிறார்கள். அவர்கள் வங்கியில் வீட்டுக் கடன் வாங்க கட்டட அனுமதி வேண்டும். இதனால் பலர் வீடுகள் அஸ்திவாரம் தோண்டிய அளவிலேயே இருக்கிறது. இந்த சிக்கலால், கட்டுமானத் தொழிலாளர்களும் வேலை இல்லாமல் தவிக்கிறார்கள்.

கொடைக்கானலைப் பொறுத்தவரை பட்டா நிலங்களைவிட, அரசுப் புறம்போக்கு நிலங்களே அதிகம். சாமைக்காட்டு பள்ளம், பெரும்பள்ளம், கவுஞ்சி, மண்ணவனூர் பகுதிகளில் பலர் அரசுப் புறம்போக்கு நிலங்களில் பங்களாக்களைக் கட்டியுள்ளனர். வருவாய்த் துறையினரை அவர்கள் சரிக்கட்டிவிடுவதால், அவற்றை எல்லாம் தடுப்பதும் இல்லை. வீடு கட்டி முடித்த பின்பு பஞ்சாயத்துகளில் வீட்டு வரி செலுத்தி அந்த ரசீதினை வைத்து மின் இணைப்பு பெற்றுவிடுகிறார்கள். இதுபோன்ற பங்களாக்கள் கொடைக்கானலைச் சுற்றி ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. இவற்றைத் தடுக்காமல் மலைப் பாதுகாப்புச் சட்டத்தை எங்களைப் போன்ற சாமானியர்கள் மீது ஏவி பாவலா காட்டுகிறார்கள் அதிகாரிகள்'' என்று அனலாகக் கொதித்தார்.

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் வெங்கடாசலத்திடம் பேசினோம். ''இதுகுறித்து என் கவனத்துக்கும் வந்தது. கிராமங்களில் வீடுகட்டக் கோரும் விண்ணப்பங்களை உடனடியாக பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட் டுள்ளேன். கட்டட அனுமதிக்கு பணம் வாங்குவதாகச் சொல்லப்படும் புகார்கள் மீது விசாரணை நடத்த உத்தரவிடுகிறேன்'' என்றார்.

பூர்வீகக் குடிகளின் துயர் துடைக்கப் படுமா?

- இரா.முத்துநாகு

படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு