Published:Updated:

ஈ...டா ஈ....டா ஈ....டா!

காலராவுக்கு அலறும் சென்னை

பிரீமியம் ஸ்டோரி
##~##
ஈ...டா ஈ....டா ஈ....டா!

சென்னையை காவு வாங்கத் தொடங்கி உள்ளது காலரா. இதுவரை 400 பேர் வாந்தி, பேதிக்காக சிகிச்சை பெற் றுள்ள நிலையில், மூன்று பேருக்குக் காலரா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்ந்தால் சென்னையே நோய் வாய்ப்பட வாய்ப்பு உள்ளது. 

சுகாதாரக்கேடுதான் காலரா பரவ அடிப் படைக் காரணம். காலரா ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனையின் ஆர்.எம்.ஓ-வான டாக்டர் ஆனந்த் பிரதாபிடம் கேட்டோம். ''கழிவு நீர் கலந்த குடிநீரைக் குடிப்பதாலும், ஈ மொய்த்த உணவுகளைச் சாப்பிடுவதாலும் வாந்தி, பேதி ஏற்படுகிறது. விப்ரியோ காலரா மற்றும் ஈ-கோலை என்ற இரண்டு பாக்டீரியாக்களும்தான் வாந்தி, பேதியை ஏற்படுத்துகின்றன. இந்த இரண்டு பாக்டீரியாக்களுமே அசுத்த நீர், ஈ மற்றும் மலத்தினால் பரவக்கூடியவை.

ஈ...டா ஈ....டா ஈ....டா!

வாந்தி, பேதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலம் கெட்டியாக இல்லாமல் தண்ணியாகப் போகும். மலத்துடன் சேர்ந்து தாது உப்புக்களும் வெளியேறு வதால் விரைவிலேயே சோர்ந்து விடுவார்கள். உடலில் உள்ள நீர்ச்சத்து முழுவதுமாக வெளியேறிவிடுவதால், உடல் இளைத்துவிடும். உடனடியாக சிகிச்சை அளிக்கா விட்டால் மரணம் ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு. வாந்தி, பேதி இருக்கின்ற எல்லோருக்கும் காலரா இருக்கிறது என்று அர்த்தம் இல்லை. வாந்தி, பேதி என்பது காலராவுக்கான ஓர் அறிகுறி மட்டும்தான். மலப் பரிசோதனை மூலம்தான் காலரா இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.  

ஈ...டா ஈ....டா ஈ....டா!

தண்ணீரை நன்கு காய்ச்சி, ஆற வைத்து, வடிகட்டி மட்டுமே குடிக்க வேண்டும். ஈ மொய்த்த உணவு களைச் சாப்பிடக் கூடாது. நன்றாக வேகவைத்த உணவுகளையே உண்ண வேண்டும். குளோரின் கலந்த தண்ணீரை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும். சாப்பிடுவதற்கு முன் கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். மலம் கழித்த பிறகு கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். வாந்தி, பேதி ஏற்பட்டால் உப்பு மற்றும் சர்க்கரை கரைசல் தண்ணீரை அரைமணி நேரத்துக்கு ஒரு முறை கொடுக்க வேண்டும். அத்துடன், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதும் அவசியம்.

நீங்கள் இருக்கும் இடத்தையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டைச்

ஈ...டா ஈ....டா ஈ....டா!

சுற்றிலும் மழைநீர் தேங்கவிடக் கூடாது. குப்பைகளைக் கண்ட இடங்களில் கொட்டாமல், அதற்கென உள்ள தொட்டிகளில் மட்டுமே கொட்ட வேண்டும். முக்கியமாக, வாந்தி, பேதி ஏற்பட்டால் நீங்களாகவே மருந்துக் கடைக்குப்போய் மாத்திரை வாங்கிச் சாப்பிடக் கூடாது'' என்று எச்சரிக்கை விடுத்தார்.

சென்னையில் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ள கீழ்ப்பாக்கம் ஓசோன் குளம் அருகில் உள்ள பூபதி நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீரும் கலந்து வந்துள்ளது. அதைக் குடித்ததால்தான் அந்தப் பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையிலும், கீழ்ப்பாக்கம் அரசு பொது மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காலரா இருப்பதாக உறுதி செய்யப்பட்ட மூன்று பேரும் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் தனி வார்டில் தங்க வைக்கப்பட்டு தீவிரக் கண்காணிப்பில் உள்ளனர். அங்கு விசிட் அடித்தோம்.

நோயாளிகளும், அவர்களுடைய உறவினர்களும் சாப்பிட்டுப் போட்ட மிச்சங்கள் சில இடங்களில் அப்படியே கிடக்கின்றன. அவற்றின் மீது குத்தகைக்கு எடுத்தது போல் ஈக்களின் கூட்டம் மொய்த்துக் கிடக்கிறது. நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள வார்டுக்கு வெளியே ஒருவர் ஆழ்ந்த நித்திரையில் இருக்க, அவர் மீதும் ஈக்களின் கூட்டம். வெளியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த பெண்களின் மீதும் ஈக்கள் மொய்த்தவண்ணமே இருக் கின்றன.

பல இடங்களில் முறையாகக் குப்பை அள்ளப்படாததே ஈக்கள் அதிகமாகப் பெருகுவதற்குக் காரணம். சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாலான இடங்களில் மாநகராட்சியும், ஒரு சில இடங்களில் தனியார் நிறுவனங்களும் குப்பை அள்ளி வருகின்றன. மாநகராட்சி குப்பை அள்ளும் இடங்களில் போதுமான பணியாளர்கள் இல்லாததால் குப்பைகள் தேங்கிவிடுகின்றன.

இது குறித்துப் பேசிய மேயர் சைதை துரைசாமி, ''பாதிக்கப்பட்டப் பகுதிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. நோய் பரவக் காரணமான ஈக்களைக் கட்டுப்படுத்த பேகான் பைட் குருணையைத் தூவியும், தடுப்பு மருந்துகள் தெளித்தும் வருகிறோம். பொதுக் குழாய்களில் வரும் குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிக்கப்பட்டு, குறைவாக இருந்தால் குளோரின் மாத்திரை விநியோகிக்கப்படுகிறது. மேலும், நோய் பரவியுள்ள இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, நோய்த் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. அத்துடன், சாலை ஓரங்களில் விற்கப்படும் உணவுகளைப் பறிமுதல் செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் காலரா பற்றிய விழிப்பு உணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி வருகிறோம். சென்னை மாநகராட்சி இப்போது போர்க்கால நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்றார்.

பாதிக்கப்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதுதான் நல்ல நிர்வாகமோ?

- சி.காவேரி மாணிக்கம்

படங்கள்: எம்.உசேன், என்.விவேக்,

சொ.பாலசுப்ரமணியன், வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு