Published:Updated:

மறைக்கப்படுகிறதா கல்விக் கட்டண ரத்து ஆணை?

தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு ஓர் நற்செய்தி

பிரீமியம் ஸ்டோரி
##~##
மறைக்கப்படுகிறதா கல்விக் கட்டண ரத்து ஆணை?

'தமிழகத்தில் அனைத்து வித மான படிப்புகளுக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய எஸ்.சி./எஸ்.டி. மாணவர்களுக்கு 100% கல்விக் கட்டணம் ரத்து’ என்று ஓர் அரசாணை வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் தீயாய் பரவியிருக்க வேண்டிய இந்தச் செய்தி, ஏனோ யாருக்குமே தெரியாமல் போய்விட்டது.அதிகமாய் அந்தச் செய்தி பரவிவிடக்கூடாது என்று அரசு அமைதியாய் இருக்க... 'கட்டணம் கட்டவில்லை’ என்று தலித் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் கொடுமையும் பல இடங்களில் நடக்கிறது! 

தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காகப் போராடி வரும் 'துடி’ அமைப்பினர் ஜூலை 17-ம் தேதி சென்னையில் அந்த அரசு ஆணை குறித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். திரளான மாணவர்கள் பங்குகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் பேராசிரியர் கல்யாணி, வழக்கறிஞர் ரஜினிகாந்த் உட்பட பலர் உரையாற்றினர்.

மறைக்கப்படுகிறதா கல்விக் கட்டண ரத்து ஆணை?

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேசினோம். ''மத்திய அரசு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் 9.1.2012 அன்று அரசாணை எண் 6, தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையால் வெளியிடப்பட்டது. இந்த அரசு ஆணையின்படி சுயநிதிக் கல்வி நிறுவனங்களில் அனைத்துவிதமான படிப்புகளுக்கும் அரசு ஒதுக்கீடு செய்த இடங்களில் பயிலும் ஆதிதிராவிட பழங்குடியின மாணவர்களிடம் பெறப்பட்ட தொகை முழுவதையும் கடந்த கல்வி ஆண்டில் இருந்து திருப்பிச் செலுத்த வேண்டும். பதிவுக் கட்டணம், டியூஷன் கட்டணம், விளையாட்டு, மாணவர் சங்கம், நூலகம், பத்திரிகைகள், மருத்துவப் பரிசோதனை போன்ற கட்டணங்களும் இதில் அடங்கும். சிறுபான்மையினர் நடத்தும் கல்வி

மறைக்கப்படுகிறதா கல்விக் கட்டண ரத்து ஆணை?

நிறுவனங்களுக்கும் இவை பொருந்தும். இரண்டு லட்ச ரூபாய் வரை வருமான வரம்புள்ள பொருளாதாரத்தில் பின் தங்கிய எஸ்.சி/எஸ்.டி. மாணவர்களுக்கு இந்த அரசாணை பொருந்தும். ஆனால் இது வெறும் ஏட்டளவில் நின்றுவிட்டது. தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்கள் பலரும் கடந்த ஆண்டில் கட்டிய கட்டணத்தைத் திரும்ப பெற வேண்டிய நிலையில் இது தெரியாமல் இந்த ஆண்டுக்கான கட்டணத்தையும் கட்டி வருகின்றனர்.

அரசு ஆணை வெளியிட்டு ஆறு மாதங்கள் கடந்த பிறகும், இது குறித்த தகவல் முழுமையாக அனைத்துக் கல்வி நிலையங்களுக்கும் அனுப்பப்படவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டிய தலித் மாணவர்களுக்கு இந்த அரசு ஆணை வெளியிடப்பட்ட தகவலே தெரியவில்லை. ஏனெனில் செய்தித்தாள்கள் மூலமாகவோ, பிற ஊடகங்கள் மூலமாகவோ தமிழக உயர்கல்வித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, நிதித்துறை என்று எந்தத் துறையுமே பொது மக்களிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சேர்க்கவில்லை.

கடந்த கல்வி ஆண்டில் இருந்து இது நடைமுறைப்படுத்தப்படும் என்று ஆணையில் இருக்கிறது. அப்படியென்றால் கடந்த ஆண்டு பொறியியல், மருத்துவம், தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் துறையில் கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கும் இந்த ஆணை பொருந்துகிறது. ஆனால் கல்வி நிறுவனங்களில் அரசு ஆணை விஷயம் தெரியாததால், மாணவர்கள் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள். பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற தொழிற்கல்வி பயிலும் மாணவர்கள் சிலர் கட்டணம் கட்ட இயலாத நிலையில், இடை நீக்கம் செய்யப்படும் சூழலில் இருக்கின்றனர். இந்த ஆண்டு தொழிற் படிப்புகளில் சேரும் மாணவர்களிடமும், 'பின்னர் திருப்பித்தரப்படும்’ என்கிற உத்தரவாதத்தோடு கட்டணம் கேட்கிறது அரசு. இது தேவையில்லாத நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது. இதனால் கட்டணத் தொகையைத் திரட்ட முடியாமல், தொழில் கல்வியில் சேர முடியாமலே பலர் போய்விடும் அபாயமும் இருக்கிறது'' என்றனர் மாணவர்கள்.

துடி இயக்கத்தைச் சேர்ந்த பாரதி பிரபு, ''வறுமையின் காரணமாகக் கல்வியைப் பாதியிலேயே நிறுத்தும் தலித் மாணவர்களின் குடும்பங்களிடையே ஒரு கல்விப் புரட்சியை ஏற்படுத்தும் நோக்கத்திலேயே இந்த அரசாணை அமைந்திருக்கிறது. ஆனால் இந்த அரசாணையை தமிழக அரசுத்துறைகளே முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பது வேதனை அளிக்கிறது. இதனை தமிழக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் நோக்கத்தில்தான், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தோம்.

இந்த அரசு ஆணையை முறையாக தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்க ளுக்கு அனுப்ப வேண்டும்; தலித் மாணவர்கள் அனைவரும் இதை அறிந்துகொள்ளும் வண்ணம் பத்திரிகை களில் வெளியிட வேண்டும்; பொறியியல், மருத்துவம், தொழில் கல்வி கற்றுத் தரும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்தத் தகவலை ஆதிதிராவிட நலத் துறை கொண்டு சேர்க்க வேண்டும்; கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கும் உயர்கல்வித் துறை உடனடியாகச் சுற்றறிக்கையாக இந்த அரசாணையை அனுப்ப வேண்டும்; கடந்த கல்வியாண்டில் தலித் மாணவர்கள் செலுத்திய தொகையை திருப்பித் தர வேண்டும்; சாதி மற்றும் வருமானச் சான்றிதழைக் காண்பித்தாலே கட்டணமின்றி அவர்களை அனுமதிக்க வேண்டும்'' என்றார்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்

நா.சுப்ரமணியத்திடம் பேசினோம். ''அரசு ஆணை வெளியானபோது முக்கிய நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தோம். அடிக்கடி விளம்பரம் கொடுத்து அரசுக்குச் செலவு வைக்க முடியாது இல்லையா? முறையாக எல்லா கல்வி நிறுவனங்களுக்கும் அரசாணை அனுப்பப்பட்டுவிட்டது. ஏதாவது ஒன்றிரண்டு கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கேட்டபோது தெரியாது என்று சொல்லி இருக்கலாம். அந்த நிறுவனங்கள் எவை என்று தெரிவித்தால், முறையாக நடவடிக்கை எடுக்கப்படும். தலித் மாணவர்களுக்கு ஒரு குறையும் இல்லாத வகையில் அரசு இயங்குகிறது'' என்றார்.

இந்தத் திட்டம் அனைத்து மக்களையும் கொண்டு சேர்க்கும் பணியில் அனைத்துக் கட்சிகளும், பொது நல இயக்கங்களும் களம் இறங்கவேண்டும்.

- கவின் மலர்

படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு