Published:Updated:

தினம் ஒரு கொள்ளை... வாரம் இரண்டு கொலை!

அலறும் வேலூர்

பிரீமியம் ஸ்டோரி
##~##
தினம் ஒரு கொள்ளை... வாரம் இரண்டு கொலை!

வெயிலுக்குப் பிரபலமான வேலூர், இப்போது கொள்ளைக்குப் பிரபலமான மாவட்டமாக ஆகிவிட்டது. எந்த நடவடிக்கையும் எடுக் காமல் வேடிக்கை பார்க்கிறது போலீஸ் என்பதுதான் புகார்!

''அ.தி.மு.க. ஆட்சி என்றால் சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கும் என்பது பொது மக்களின் எண்ணம். ஆனால் இப்போதைய அ.தி.மு.க. ஆட்சி அப்படி இல்லை. நாடெங்கும் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமாகிவிட்டன. அதிலும் வேலூர் மாவட்டத்தில்தான் மிக அதிகமான தொடர் கொள்ளைகள்!'' என்று குற்றம் சாட்டுகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளரான நாராயணன்.

''அரக்கோணத்தில் இருந்து திருப்பத்தூர் வரை 150 கி.மீ நீளம் பரந்து விரிந்த மாவட்டம் இது. பெரும்பாலான பகுதிகள் ஆந்திர மாநில எல்லையை ஒட்டி இருக்கிறது. இங்கு பணியாற்ற வரும் எஸ்.பி., இந்த மாவட்டத்தையும் காவல் நிர்வாகத்தையும் புரிந்துகொள்ளவே பல மாதங்கள் ஆகும். ஆனால் கடந்த ஒன்றரை வருடத்தில் மட்டும் அன்பு, ஏ.ஜி.பாபு, கயல்விழி, ஈஸ்வரன் என்று வேலூர் மாவட்டம் நான்கு எஸ்.பி-க்களைச் சந்தித்துவிட்டது. இடையில் ஒரு மாதம் எஸ்.பி. பணியிடம் காலியாகவும் இருந்தது. இப்படி அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படுவதால், சீரான நிர்வாகமோ, கடுமையான கண்காணிப்போ இல்லாமல், கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்கள் மிக அதிகமாக நடக்கின்றன.

தினம் ஒரு கொள்ளை... வாரம் இரண்டு கொலை!

நகைக் கடை, அடகுக் கடை என்று தொடங்கியவர்கள் போலீஸ் அதிகாரிகள் வீடுகளிலேயே  கொள்ளை அடித்தார்கள். இப்போது பகல் நேரத்திலேயே கொள்ளைகள். கடந்த முறை வாணியம்பாடியில் ஒரு கொள்ளை நடந்தபோது, நகைக் கடை உரிமையாளர்களை வரவழைத்த காவல் துறையினர், விழிப்பு உணர்வுக் கூட்டம் போட்டனர். அதன் பிறகு வேலூரில் செல்போன் கடையில்

தினம் ஒரு கொள்ளை... வாரம் இரண்டு கொலை!

கொள்ளை நடந்தபோது, செல்போன் கடைக்காரர்களை வரவழைத்து மீட்டிங் போட்டனர். இப்படி மீட்டிங் மட்டும் போடுவதைத்தான் நடவடிக்கை என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை.

கடந்த வாரம் வேலூர் லாங் பஜார் நகைக் கடையில் வாலிபர் ஒருவர், வயதான பெண்மணியைக் கூட்டிச் சென்றுள்ளார். தனது திருமணத்துக்கு நகைகள் வாங்க வந்திருப்பதாகச் சொல்லி நகைகளை வாங்கியவர், 'பக்கத்துக் கடையில எங்க சொந்தகாரங்க இருக்காங்க. அம்மா இங்கேயே இருக்கட்டும். அவங்ககிட்ட நகையைக் காட் டிட்டு வந்துடுறேன்’ என்று சொல்லி நகைகளோடு சென்றுவிட்டார். ஒரு மணி நேரம் ஆகியும் அவர் வராததால், அந்த அம்மாவைப் பிடித்து கடைக்காரர் விசாரித்து இருக்கிறார்கள். 'அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. என்னைப் பார்த்து, 'என் அம்மாவைப் போலவே இருக்கீங்க. என்னோட கல்யாணத்துக்கு நகை வாங்கணும். வந்து செலெக்ட் பண்ணிக் கொடுங்க’னு கூட்டிட்டு வந்தார்’ என்று பதறினார். உடனே அந்த நகைக் கடைக்காரர் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

இரண்டு நாளைக்கு முன்பு, வேலூர் கிருஷ்ணா நகரில் உள்ள வீட்டுக்கு ஒரு பெண்ணும் பையனும் வீடு பார்ப்பது போல பகல் ஒரு மணிக்குப் போய் இருக்கிறார்கள். வீட்டுக்கார அம்மாவும் வீட்டைச்

தினம் ஒரு கொள்ளை... வாரம் இரண்டு கொலை!

சுற்றிக்காட்டி இருக்கிறார். வீட்டுக்கார அம்மா ஏமாந்த சமயத்தில், அவர் கழுத்தில் இருந்த ஆறு பவுன் செயினை அறுத்துக்கொண்டு, அவரை அறையில் தள்ளிப் பூட்டிவிட்டு ஓடிவிட்டார்கள். போலீஸ் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதால்தான், இப்படி சாவகாசமாக பகல் நேரங்களிலும் தைரியமாக திருட்டுத்தனம் செய்கிறார்கள்.

ராணிப்பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் 20 பவுன் தங்கம், ஒரு கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை போய் இருக்கிறது. திருப்பத்தூரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரை வெட்டிக் கொலை செய்து இருக்கிறார்கள். காட்பாடியில் ஒரு வீட்டில் புகுந்து கொள்ளை அடித்து இருக்கிறார்கள். தினம் ஒரு திருட்டு, வாரத்துக்கு இரண்டு கொலை என்று வேலூரின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே வருகிறது.

இதைவிடக் கொடுமை என்னவென்றால், போலீஸ் வேடத்தில் ஒரு பெண் வேலூரில் இரண்டு வருடங்களாக ஏமாற்றிக்கொண்டு இருந்திருக்கிறார். பலரிடம்  பணம் வாங்கி இருக்கிறார்.  

கொள்ளைச் சம்பவம் நடந்த உடனே... போலீஸ் அதிரடியாகச் செயல்பட்டு கொள்ளையர்களைப் பிடித்து சிறையில் அடைத்தால்தான் திருடர்கள் பயப்படுவார்கள். இப்போதைய நிலையில் வேலூர் மாவட்டத்தில் சுலபமாகத் திருடலாம் என்ற எண்ணம்தான் புதிய திருடர்களை உருவாக்கி இருக்கிறது. அந்த அளவுக்கு காவல் துறையின் செயல்பாடு மந்தமாக இருக்கிறது'' என்று உணர்ச்சிவசப்பட்டார்.

புதிதாகப் பொறுப்பேற்று இருக்கும் வேலூர் மாவட்ட எஸ்.பி. ஈஸ்வரனிடம் பேசினோம். ''இப்போதுதான் வேலூர் மாவட்டத்துக்கு வந்து இருக்கிறேன். நிச்சயமாக பொதுமக்களின் பாதுகாப்புக்கு காவல் துறை உறுதுணையாக இருக்கும். கடந்த காலங்களில் நடந்த சம்பவங்கள்போல இனி நடக்காமல், கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதி அளித்தார்.

ஏதாவது செய்யுங்க சார், ரொம்ப பயந்துபோயிருக்காங்க வேலூர் மக்கள்!

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்: ச.வெங்கடேசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு