Published:Updated:

''அலறக் கூட அவகாசம் இல்லாமல்...''

நாகை மீனவர்களைப் பலி வாங்கிய பாமாயில்!

பிரீமியம் ஸ்டோரி
##~##
''அலறக் கூட அவகாசம் இல்லாமல்...''

மீனவர்களுக்குக் கடலில் மட்டுமல்ல... கரையிலும் துயரம்தான். மரணம் எந்த ரூபத்திலும் வரும் என்பதற்குக் கொடூரமான உதாரணம்... இந்தச் சம்பவம். பாமாயில் இறக்கி வைக்கும்போது விஷ வாயு தாக்கி மூவர் உயிர் இழக்கவே, சோகத்தில் நிற்கிறது நாகை! 

இந்தோனேஷியாவில் இருந்து 3,000 டன் பாமாயில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு நாகப்பட்டினம் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது தீப்தி என்ற மலேசிய சரக்குக் கப்பல். நாகப்பட்டினம் ஆழம் குறைந்த துறைமுகம் என்பதால், வெகு தொலைவில் நிறுத்தப்பட்ட அந்தக் கப்பலில் இருந்து சிறிய வகை கப்பலான பார்ஜர்கள் மூலம்தான் எண்ணெய்யை துறைமுகத்துக்குக் கொண்டுவர முடியும். ராஜாத்தி ஏஜென்சியின் பார்ஜர் மூலம் 22-ம் தேதி இரவு எண்ணெய்யைக் கரைக்குக் கொண்டுவரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்ட நேரத்தில் தான் அந்த பயங்கரம் நடந்தது.

''அலறக் கூட அவகாசம் இல்லாமல்...''

அந்தப் பணியில் இருந்தவர்களில் ஒருவரான ஜான்விக்டர் நடந்ததை நம்மிடம் சொன்னார். ''நான், வேலவன், வெங்கடேஷ், ஆல்பர்ட் வியாகுலசாமி உட்பட மொத்தம் 12 பேர் அந்த வேலையில் இருந்தோம். கப்பல்ல இருந்து 120 டன் எண்ணெய்யை பார்ஜரில் ஏற்றிக்கொண்டு கரை திரும்பினோம். பார்ஜர் டேங்கினுள் குழாயைவிட்டு பம்ப் செய்து, கரையில் இருக்கும் பெரிய டேங்கர்களுக்கு மாற்றுவது வழக்கம். அப்படிச் செய்தபோது எண்ணெய் சரியாக ஏறவில்லை. அதனால், குழாயை சரிபார்க்க முதலில் உள்ளே இறங்கினார் வேலவன். இறங்கி வெகுநேரம் கடந்தும் அவரைக் காணாததால், அடுத்து வெங்கடேஷ் உள்ளே இறங்கினார். அவரையும் காணவில்லை. பிறகு ஆல்பர்ட், 'என்னடாது... இறங்கினவன் எவனும் மேல வரக் காணோம்’னு சொல்லிட்டே உள்ளே இறங்கினார். அவரும் மேலே வரவில்லை.

''அலறக் கூட அவகாசம் இல்லாமல்...''

உடனே சுதாரித்துக்கொண்டு உள்ளே பார்த்தால், மூன்று பேரும் மயங்கி மிதந்தார்கள். அதைப் பார்த்ததும் சிலர் பயந்துபோய் மயங்கிட் டாங்க. துறைமுக அதிகாரி, தீயணைப்பு நிலை யம்னு எல்லோருக்கும் தகவல் சொன்ன நேரத்தில் நானும் மயங்கிட்டேன். பிறகு பார்த்தா... இப்படி மோசம் நடந்துபோச்சு'' என்றார் இன்னமும் பயம் விலகாமல்.

''அலறக் கூட அவகாசம் இல்லாமல்...''

துறைமுக அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்து ஆய்வு செய்த பிறகுதான், அவர்கள் விஷ வாயு தாக்கி உயிர் இழந்தது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.  மயங்கி விழுந்தவர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு, காப்பாற்றப்பட்டார்கள்.

இறந்துபோன மூவரும் நாகப்பட்டினம் ஆரியநாட்டுத் தெருவைச் சேர்ந்த மீனவர்கள். மீன் பிடித் தொழிலுக்குப் போகாத நாட்களில் இதுபோன்ற வேலையில் ஈடுபடுவார்களாம். இறந்தவர்களில் வேலவனும் வெங்கடேஷ§ம் மாமன் மச்சான்கள். வேலவனின் தங்கை சிவகாமியைத்தான் வெங்கடேஷ் திருமணம் செய்துள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் சிங்கப்பூரில் பணிக்குச் செல்ல இருந்தாராம் வேலவன். இன்னொருவரான ஆல்பர்ட் வியாகுலசாமிக்கு இரண்டு குழந்தைகள்.

கச்சா எண்ணெய் எப்படி விஷமானது?

''எண்ணெயை பம்ப் செய்யப் பயன் படுத்தப்பட்ட ஜெனரேட்டரில் இருந்து வெளிவந்த கரும்புகை, கச்சா எண்ணெய் ஏற்றப்படும் டேங்கரில் சேகரமாகி இருந்து இருக்கிறது. டேங்கரில் கச்சா எண்ணெய் ஏற்றப்பட்டபோது இரண்டும் சேர்ந்து விஷ வாயுவாக மாறி இருக்கிறது. அந்த விஷ வாயு உள்ளே இறங்கிய தொழிலாளர்களைத் தாக்க... அலறக்கூட அவகாசம் இல்லாமல் மூச்சு முட்டிப் பலியாகி இருக்கிறார்கள்.

இந்த வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள் பாதுகாப்பு கவசம் உள்ளிட்ட எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும்  இல்லை. அது குறித்த விழிப்பு உணர்வும் அவர்களுக்கு இல்லை. அதனால்தான் இப்படி ஒரு விபத்து'' என்கிறார்கள் அதிரவைக்கும்படி.

விபத்து குறித்து நாகப்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. ராஜாத்தி ஏஜென்சி நிறுவனம் தொழிலாளர்களின் குடும்பங்களுடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, நிவாரண உதவிகளை வழங்க இருக்கிறதாம். தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இனியாவது தொழிலாளர்கள் உயிருக்குப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் செயல் படட்டும்!

- கரு.முத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு