Published:Updated:

தமிழகம் திரும்புமா பாண்டியாறு?

நீலகிரிப் போராட்டம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
தமிழகம் திரும்புமா பாண்டியாறு?

காவிரி, பெரியாறு, பாலாறு போன்ற வற்றை முறையே... கர்நாடகம், கேரளா, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களும் தடுத்து நிறுத்திவருகின்றன. இந்த சூழலில்தான், 'நம் தமிழ்நாட்டில் உருவாகி கேரளக் கடலில் கலக்கும் பாண்டியாறைக் கவனி யுங்கள்’ என்று உரக்கக் குரல் கொடுக்கிறார்கள், கூடலூர் மக்கள். 

இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடம் சிரபுஞ்சி என்றால், இரண்டாவது இடத்தில் இருக் கிறது தமிழ்நாட்டில் கூடலூர் அருகில் உள்ள தேவாலா. இங்கே ஆண்டுதோறும் தோராயமாக 7,000 மில்லி மீட்டர் மழை பெய்கிறது. இங்கு உற்பத்தி ஆகும் பாண்டியாறுக்கு நீர் ஆதாரமாக இருப்பது தேவாலா, பந்தலூர் மற்றும் ஓவேலிப் பகுதிகள். இந்த ஆறு கேரளத்தில் நுழைந்த பிறகு புன்னம்புழா என்ற பெயரில் அழைக்கப் படுகிறது.

தமிழகம் திரும்புமா பாண்டியாறு?

பாண்டியாற்றின் குறுக்கே அணை கட்டுவது என்று 1968-ம் ஆண்டிலேயே முடிவு எடுக்கப் பட்டது. அப்போது பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த கருணாநிதி, 'கூடலூர் மரப்பாலம் அருகே அணை கட்டினால், 14 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். 250 மெகா வாட் மின்சாரமும் தயாரிக்க முடியும்’ என்று அறிவித்தார். ஆனால், 'அணை கட்டினால் வனச்சூழல் பாதிக்கும்’ என்று காரணம் காட்டப்பட்டு, அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் 1998-ல் பாண்டியாறில் அணை கட்டுவதற்குப் பதில் தண்ணீரைத் தமிழகத் துக்குத் திருப்ப வேண்டும் என்ற கருத்தை மாநில அரசு வலியுறுத்தியது. மீண்டும் சுற்றுச்சூழல் காரணம் காட்டி திட்டம் நிறுத்தப்பட்டது. இந்த விவகாரம்தான் மீண்டும் உயிர் பெற்று எழுந்துள்ளது.

தமிழகம் திரும்புமா பாண்டியாறு?

விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.செல்வராஜ், ''மக்களுக்குத் தேவையான நீர் கிடைப்பதை, சுற்றுச்சூழல் காரணம் காட்டியே கடந்த 45 ஆண்டுகளாகத் தடுத்து வருகிறார்கள்.

ஆனால், காடுகளைக் காப்பதாகச் சொல்லி தவறான நடவடிக்கைகளில்தான் ஈடுபடுகிறார்கள். ஆண்டுக்குப் பல கோடி ரூபாய் பணத்தை வீணடிக்கிறார்கள். இருந்தும் இப்போது காடுகளில் மூங்கில் காடுகள் இருந்த இடங்களில் எல்லாம் பார்த்தீனியம் மண்டிக்கிடக்கின்றன. அதனால் தான் யானைகள் காடுகளைவிட்டு விவசாய நிலங்களுக்கு வருகின்றன. காட்டிலும் விலங்குகளுக்கு நீர்ப் பற்றாக்குறை இருக்கிறது. அதை எல்லாம் சரிசெய்யாமல், பாண்டியாறைத் திருப்பினால் வனச்சூழல் கெடும் என்பது சரியல்ல. கேரளாவுக்குள் நுழைந்து வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீர், தமிழகத்துக்குத் திருப்பினால் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் போதுமான அளவுக்குத் தண்ணீர் கிடைக்கும். நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்ட விவசாயிகளும் நல்ல முறையில் பயன்பெறுவார்கள்'' என்று பொங்கினார்.

நீலகிரி மாவட்ட வனத் துறை அதிகாரி ஒருவரிடம் விளக்கம் கேட்டோம். ''பாண்டியாறு என்பது கேரளத்தை நோக்கிப் பாயும் ஆறு. அதை தமிழகத்துக்குத் திருப்புவது என்றால், 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு தொங்கு பாலம் அமைக்க வேண்டும். இந்தப் பணி நடக்கும் நேரத்திலும் பின்னர் பராமரிக்கும் நேரத்திலும் அது இயற்கையின் அமைதிச் சூழலை நிச்சயம் பாதிக்கும். அந்தப் பாலத்தைப் பார்க்கவும் மக்கள் வருவார்கள். அதைத் தொடர்ந்து கடைகள், ஹோட்டல்கள், குடியிருப்புகள் வரும். அதனால் இது வீண் வேலை.

ஆனால், குழாய்கள் மூலம் தண்ணீரைத் திருப்பி அனுப்ப வழி இருக்கிறதா என்று ஆராய்ந்து பார்க்கலாம். பிரதமர்தான் தேசிய வனவிலங்கு வாரியத்தின் தலைவர். அதனால் வனத் துறை சம்பந்தமான முடிவுகள் எல்லாமே பிரதமரின் கையில்தான் இருக்கிறது.

புலிகள் சரணாலயத்தில் புலிகள் இருக்கின்றனவா என்பதை அவற்றின் நகக்கீறல்கள், கழிவுகள், கால்தடங்கள் மூலமாகக் கணக்கிட்டதில் சில குறைபாடுகள் இருந்தன. ஒரே புலியின் அடையாளங்களை மீண்டும் மீண்டும் கணக்கிட நேர்ந்தது. இப்போது காடுகளில் கேமராக்கள் பொருத்தி, புலிகளின் உடம்பில் உள்ள வரிகளை வைத்துக் கணக்கிடுவதால், நிச்சயம் குறைகள் இருக்காது. தமிழக வனத்தில் இப்போது சுமார் 200 புலிகள் இருக்கின்றன. முதுமலை, நீலகிரி, கூடலூர், களக்காடு, முண்டந்துறை, ஆனைமலை, மேகமலை, கொடைக்கானல், பழனி போன்ற பகுதிகளில் புலிகள் வசிக்கின்றன. உணவு, தண்ணீர் போன்ற தேவைகளுக்காக அவை இடம் பெயர்வது உண்டு. அதனால் களக்காட்டில் இந்த ஆண்டு புலிகள் இல்லை என்றால் அடுத்த ஆண்டு திரும்பி வரலாம். அவை வனத்தைவிட்டு வேறு எங்கும் செல்லப் போவதில்லை. யானைகள் மூங்கில் இல்லாமல் விவசாய நிலங்களுக்கு வருகிறது என்று சொல்வதை ஏற்க முடியாது. மூங்கில் குறைந்திருப்பதை அறிந்து பல இடங்களில் மூங்கில் கன்றுகள் நடப்பட்டு உள்ளன. ஓரிரு ஆண்டுகளில் அவைப் பூக்கத் தொடங்கிவிடும்.

காடுகளுக்கு அருகே இருக்கும் நிலங்களில் கரும்பு, நெல், வாழை, தென்னை போன்ற சுவையான பயிர்கள் வளர்ப்பதால்தான், யானைகள் அதைத் தேடி வருகின்றன. அதனால் வனத்தை ஒட்டிய பகுதிகளில் இத்தகைய பயிர்களைப் பயிரிடாமல் தவிர்க்க வேண்டும்'' என்றார்.

கோவை மாவட்ட பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர் சிவலிங்கம், ''1965-ல் தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இணக்கமான சூழல் இருந்த நேரத்தில், பாண்டியாறு-பொன்னம்புழா நீர்த் தேக்கத் திட்டம் போடப்பட்டது. மேற்கு நோக்கி கடலில் விழும் ஆழியாறு பரம்பிக்குளம், பெரியாறு போன்றவற்றைக் கிழக்கு நோக்கித் திருப்பியதுபோலவே இந்தத் திட்டமும் தமிழகத்துக்கு பயனளிக்கக்கூடியதாகும். இப்பகுதி புலிகள் காப்பகமாக மாறியதால், திட்டத்தை நிறைவேற்றுவதில் தொய்வு ஏற்பட்டது. அதனுடன் கேரள அரசும் எதிர்ப்பு தெரிவிக்கவே திட்டம் கைவிடப்பட்டது. நீராதாரம் மட்டும் இன்றி மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்பும் இருப்பதால் இரு மாநிலங்களும் பயன்பெறும் திட்ட வரையறையை இப்போது தமிழ்நாடு மின்சார வாரியம் உருவாக்கிக் கொடுத்துள்ளது. விரைவில் நல்ல முடிவு ஏற்படும்'' என்றார்.

பாண்டியாறைப் பயன்படுத்துவோம்!

- தமிழ்மகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு