Published:Updated:

மக்களை விரட்டுமா புலிகள் காப்பகம்?

சத்தியமங்கல அதிர்ச்சி

பிரீமியம் ஸ்டோரி
##~##
மக்களை விரட்டுமா புலிகள் காப்பகம்?

த்தியமங்கலம் பகுதியை புலிகள் காப்பகமாக அறிவித்து இருப்பது, இந்தப் பகுதி மக்களிடையே மிரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 'புலிகள் காப்பகமாக அறிவிப்பதை வரவேற்கிறோம். அதேநேரம் பூர்வீகவாசிகளான எங்களை மலையில் இருந்து விரட்ட நடக்கும் முயற்சிகளை சகிக்க மாட்டோம்'' என்று ஆவேசப் போராட்டத்தில் குதித்துவிட்டார்கள். 

போராட்டத்தை முன்னெடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தரத்திடம் பேசினோம். ''சத்தியமங்கலத்தை புலிகள் காப்பகமாக அறிவிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று வனத் துறை அமைச்சர் பச்சைமால் அறிவித்து இருக்கிறார். புலிகள் காப்பகம் அமைப்பது குறித்து மத்திய அரசுதான் அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால், மத்திய அரசு அறிவிக்கும் முன்பே தமிழக வனத் துறை, இங்கே இருந்து மக்களை வெளியேற்றத் துடிக்கிறது.

மக்களை விரட்டுமா புலிகள் காப்பகம்?

ஏற்கெனவே சத்தியமங்கலம் வனவிலங்கு சரணாலயமாக இருக்கிறது. இப்போதே இங்குள்ள மக்களை காடுகளில் ஆடு, மாடு மேய்க்க அனுமதிப் பது இல்லை. காட்டுப் பகுதியில் உள்ள கோயிலுக்குச் செல்லவும் அனுமதி கொடுப்பது இல்லை. புலிகள் காப்பகத்துக்கான நிபந்தனைகள் மிக அதிகம் என்பதால், மக்களை வெளியேற்றத்தான் வனத் துறை முயற்சி செய்யும். உதாரணமாக சிறு வனப் பொருள் களான தேன், நெல்லி போன்றவற்றை மலைவாழ் மக்கள் மகசூல் செய்ய 2003-ம் ஆண்டு தமிழக அரசு உரிமை வழங்கியது. ஆனால் இதுவரை அதற்கு வனத் துறையினர் அனுமதிக்கவில்லை. புலிகள் காப்பகம் அமைந்தால் காட்டின் அருகேகூட மக்கள் நடமாட முடியாத நிலையை வனத் துறை ஏற்படுத்தி விடும். இதற்கு சரியான எடுத்துக்காட்டு, ஊட்டி டு சாம்ராஜ் நகர் நெடுஞ்சாலை. இங்கு இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வாகனமும் செல்ல அனுமதி கிடையாது. காரணம் கேட்டால், சாலையில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு மான்கள் போன்ற வன உயிரினங்கள் இறந்துவிடும் என்கிறார்கள்.

1,48,000 ஹெக்டேர் பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்க இருக்கிறார்களாம். சில கிராமங்களைத் தவிர்த்துவிட்டு, மற்ற பகுதிகள் முழுமையான காப்பகப் பகுதிகளாகச் செயல்படும் என்று தெரிவிக்கிறார்கள். இதில் மையப் பகுதி, வெளிவட்டப் பகுதி என்று சில இடங்களைக் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இந்தப் பகுதியில் தெரி யாமல் நுழைந்துவிட்டால்கூட கைது, வழக்கு என்று அலைய வேண்டியதாகிவிடும்.  

நாங்கள் புலிகள் காப்பகம் வேண்டாம் என்று கூறவில்லை. காப்பகம் அமையும்பட்சத்தில், 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தப்பட்ட வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் மற்றும் பழங்குடி யினர் வாழ்வுரிமை பாதுகாப்புச் சட்டத்தில் இருப்பதுபோன்று செயல்பட வேண்டும். அப்போது தான் மண்ணின் மைந்தர்களுக்கான அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படாமல் இருக்கும்.

மக்களிடம் கருத்து கேட்க அமைச்சர் வருவதாகத் தகவல் வந்தது. ஆனால்,  வனத் துறையினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி சரியாக செலவு செய்யப்பட்டு இருக்கிறதா என்று ஆய்வு செய்யத்தான் வந்தார். 'மக்களை வெளியேற்ற மாட்டோம்’ என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். இதுதொடர்பாக முதல்வருக்கு மனு அளித்துவிட்டேன். நேரில் சந்தித்து விளக்கவும் முயற்சி செய்து வருகிறோம்.  கடந்த 5-ம் தேதி தென்காசி எம்.பி. லிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம். இந்தப் பகுதியில் வாழ்கிற 40 ஆயிரம் மக்களுக்காக நாங்கள் தொடர்ந்து போராடி, மக்களுக்கான உரிமைகளை நிச்சயம் பெற்றுத் தருவோம்'' என்றார் உறுதியாக.

இது குறித்து பேசிய ஈரோடு மண்டல வன பாதுகாப்பு அலுவலர் அருண், ''மக்களை வெளியேற்றும் எண்ணம் வனத் துறைக்கு இல்லை. தவறான வதந்தியை சிலர் பரப்புகின்றனர். மூன்று வருடங்களுக்கு முன்பே புலிகள் இங்கு இருப்பது உறுதி செய்யபட்டுத்தான் முன்மொழிவு அனுப்பப்பட்டது. புலிகள் காப்பகமாக மாறிய பிறகு, தமிழ்நாடு வனச் சட்டத்தின்படி காடுகளில் நுழைவதும் குற்றம்தான். ஆனால் பழங்குடியின மக்கள் அங்கேயே வாழ்வதால், அவர்களுக்குச் சில உரிமைகளை அரசு தந்துள்ளது. பழங்குடியின மக்கள் அவர்களாகவே வெளியேறினால், அரசின் சார்பில் இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். எந்தக் காரணம்கொண்டும் இங்கே வசிக்கும் மக்களை வெளியேற்றும் எண்ணம் அரசுக்குக் கிடையாது. இதைத்தான் அமைச்சரும் அறிவித்தார்'' என்றார்.

வனத் துறை அமைச்சர் பச்சைமாலிடம் மக்கள் எதிர்ப்பு குறித்துக் கேட்டபோது, ''நான் தற்போது துறை சம்பந்தமான ஆய்வுக்காக அந்த மானில் இருக்கிறேன். சென்னை திரும்பியதும் அதிகாரிகளிடம் பேசிவிட்டு, கருத்து தெரிவிக்கிறேன்'' என்றார்.

வனம் வளமாக இருந்தால்தான் மனித குலமும் செழிக்கும். அதே நேரம் மலைகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்!

- ம.சபரி, படங்கள்: க.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு