Published:Updated:

அடகு வெச்ச நகைகளைச் சுட்டுட்டாங்க...

மணப்புரம் ஃபைனான்ஸ் மீது மடேர் புகார்

பிரீமியம் ஸ்டோரி
##~##
அடகு வெச்ச நகைகளைச் சுட்டுட்டாங்க...

'தங்க நகைகளுக்குக் கூடுதல் பணம், குறைவான வட்டி’ என்று உரக்கக் கூவி அழைக்கும் மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனம் அதிரடிப் புகார் ஒன்றில் சிக்கவே, எஃப்.ஐ.ஆர். எழுதப்பட்டுவிட்டது! 

மதுரை அண்ணாநகரைச் சேர்ந்தவர் கிஷோர்குமார். இவர், தனது அம்மாவின் மருத்துவச் செலவுக்காக, மதுரை தல்லா குளத்தில் உள்ள 'மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட்’ மற்றும் டவுன் ஹால் ரோட்டில் உள்ள 'மணப்புரம் ஜெனரல் ஃபைனான்ஸ் அண்டு லீஸிங் லிமிடெட்’ நிறுவனத்திலும் சுமார் 42 பவுன் நகைகளை அடமானம் வைத்திருக்கிறார். 31.7.06 முதல் 16.5.07 வரை ஒன்பது தவணைகளாக வைக்கப்பட்ட இந்த நகைகளின் மீது 2.32 லட்சம் கடன் வாங்கி இருக்கிறார். பணம் புரட்டிக்கொண்டு ஜூலை 2007-ல், அடமான நகைகளைத் திருப்பப் போனார் கிஷோர்குமார். அப்போது, 'உங்களது நகைகளை கேரளாவில் ஏலத்துக்கு விட்டாச்சு. இது சம்பந்தமா தலைமை அலுவலகத்தில்தான் மேற்கொண்டு தகவல் கேக்கணும்; எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று பதில் கிடைத்திருக்கிறது. தலைமை அலுவலகத்திலும் இதே பதிலைச் சொல்லி இருக்கிறார்கள்.

அடகு வெச்ச நகைகளைச் சுட்டுட்டாங்க...

உடனே நியாயம் கேட்டு ரிசர்வ் பேங்க், கோர்ட் என அலைந்தார். இவர் நடத்திய ஐந்து வருடப் போராட்டத்துக்கு இப்போது தான் விடிவு கிடைத்திருக்கிறது. மணப்புரம் ஃபைனான்ஸ் தலைவர் உள்ளிட்டவர்கள் மீது நம்பிக்கை மோசடி, நம்பிக்கைத் துரோகம் உள்ளிட்ட செக்ஷன்களில் வழக்குப் பதிவு செய்து இருக்கிறது மதுரை போலீஸ்!

தேதி வாரியாக தான் நடத்திய ஐந்து வருட மல்லுக்கட்டு தொடர்பான பேப்பர்களை எடுத்துவைத்துக்கொண்டு நம்மிடம் பேசினார் கிஷோர்குமார். ''அடகுவெச்ச நகைகளை மீட்கப் போனப்போ, நகைகளை வித்துட்டதாப் பொறுப்பில்லாம பதில் சொன்னாங்க. இது எவ்வளவு பெரிய மோசடி! அப்பவே தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷன், போலீஸ் கமிஷனர், கலெக்டரிடம் புகார் குடுத்தேன். ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அடகு வெச்ச நகைகளைச் சுட்டுட்டாங்க...

அதனால் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன். 'ரெண்டு மாசத்துக்குள் கலெக்டர் இந்த புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கணும்’னு உத்தரவாச்சு. ஆனா, 'மணப்புரம் ஃபைனான்ஸ் கம்பெனி ரிசர்வ் பேங்க் அனுமதி பெற்று நடத்தப்படுவதால்... ரிசர்வ் பேங்கை அணுகிப் பரிகாரம் தேடவும்’னு பதில் கொடுத்தார் கலெக்டர். உடனே திருவனந்தபுரத்தில் இருக்கும் ரிசர்வ் பேங்க் கிளைக்குக் கடிதம்

அடகு வெச்ச நகைகளைச் சுட்டுட்டாங்க...

எழுதினேன். அங்கே இருந்து, 'மணப்புரம் ஜெனரல் ஃபைனான்ஸ் அண்டு லீசிங் லிமிடெட் கம்பெனிக்கு மட்டுமே அனுமதி உள்ளது. இன்னொரு நிறுவனமான மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு ரிசர்வ் பேங்க் அனுமதி தரப்படவில்லை. உங்களது புகார் மனு மீது  விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்’னு பதில் வந்தது. இதை வைச்சு கலெக்டர், போலீஸ் கமிஷனரிடம் திரும்பவும் புகார் கொடுத்தேன். ஆனாலும் எந்த பிரயோஜனமும் இல்லை.

எனக்கு வேற வழி தெரியலை. 'என்னு டைய புகார் தொடர்பா விசாரிச்சு நடவடிக்கை எடுக்க உத்தரவிடணும்’னு மதுரை உயர் நீதிமன்றத்தில் தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாருக்கு எதிரா வழக்குப் போட்டேன். ரெண்டு வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கணும்னு ஜெயக்குமாருக்கும் தென் மண்டல ஐ.ஜி-க்கும் உத்தரவு போட்டது கோர்ட். அதுக்குப் பிறகுதான் மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத் தலைவர் வி.பி.நந்தக்குமார் மீதும், எனக்குக் கடன் குடுத்த இரண்டு பிராஞ்ச்களின் மேனேஜர்கள் மீதும் நம்பிக்கை மோசடி, நம்பிக்கைத் துரோகம் போன்ற ஜாமீனில் வெளிவர முடியாத செக்ஷன்களில் எஃப்.ஐ.ஆர். போடப்பட்டது.

ஆனா, எஃப்.ஐ.ஆர். போட்டு 15 நாளைக்கு மேல ஆகியும், இன்னும் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. இன்னும் 15 நாள் பாத்துட்டு மறுபடியும் கோர்ட்டுக்குப் போவேன். இதுவரைக்கும் 50 ஆயிரத்துக்கும் மேல செலவு செஞ்சிட்டேன். அப்படியும் நகைகள் கைக்கு வரலை.  ரெண்டு பவுன் மூணு பவுன்னு இவங்ககிட்ட அடமானம் வெச்ச பலர் எதிர்த்துப் போராட முடியாம அடங்கிப் போயிடுறாங்க. என்னைப் போலவே என் ஃபிரெண்ட் மோகன் என்பவரும் 27 பவுனை இழந்திருக்கார்'' என்றார்.

இதுபற்றி நாம் விளக்கம் கேட்கச் சென்றபோது அங்கே வேறொரு அதிர்ச்சி ரியாக்ஷன் காத்திருந்தது. 'கிஷோர்குமார் அந்த நகைகளை அப்போதே மீட்டுவிட்டார்’ என்று இப்போது சொல்கிறார்கள். மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் தென் மண்டல மேலாளர் அருமூர்த்தியிடம் பேசியதற்கு, ''நாங்க முறைப்படி அனுமதி பெற்றுத்தான் நிதி நிறுவனங்களை நடத்துகிறோம். எங்களிடம் கிஷோர்குமார் நகைகளை அடமானம் வெச்சது உண்மை. அவர் அடமானம் வெச்சப்ப இருந்த அதிகாரிகள் யாரும் பொறுப்பில் இல்லை. நகைகளை அவர் மீட்டுக்கொண்டதாகத்தான் எங்களிடம் இருக்கும் ஆதாரங்கள் சொல்கிறது. மீட்க வில்லை என்றால், அதற்கான ஆவணங்களைக் கொடுக்கட்டும். அவருடன் நாங்கள் ஒத்துழைக்கத் தயார். கோர்ட் தலையிட்டு இருப்பதால் விரிவாகப் பேசுவது சரியாக இருக்காது'' என்றார்.

அடகு வைத்தபோது தனக்குத் தரப்பட்ட அனைத்து ரசீது களையும் கிஷோர்குமார் பத்திர மாக வைத்துள்ளார். நகைகளை இவர் மீட்டு இருந்தால் இந்த ரசீதுகளை ஃபைனான்ஸ் கம்பெனிகள் திரும்ப வாங்கி இருக்குமே..!

லாஜிக் ஏகத்துக்கும் இடிக்கிறது!

''அவர் அடமானம் வைத்த போது இருந்த அதிகாரிகள் இப்போது வேலையில் இல்லை என்று சொல்வது எல்லாம் ஒரு பதிலா, சார்? என்னதான் நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?'' என்று  இன்ஸ்பெக்டர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ''இந்தப் பிரச்னை வருஷக் கணக்கா நீண்டுட்டே இருக்கு சார். எஃப்.ஐ.ஆர். போட்டிருக்கோம். டீப்பா விசாரிச்சுத்தான் நடவடிக்கை எடுக்கணும்'' என்கிறார்.

அப்படிப் போடு... மணப்புரமே தேவலை!

  - குள.சண்முகசுந்தரம்

  படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு