Published:Updated:

நடிகைகளுன் சுற்றினாரா சலீமுல்லாகான்?

ராமநாதபுரம் பரபரப்பு!

பிரீமியம் ஸ்டோரி
##~##
நடிகைகளுன் சுற்றினாரா சலீமுல்லாகான்?

.மு.மு.க. பிரமுகர் மீது கிளுகிளு புகார் ஒன்று பாய்ந்துள்ளது! 

கடந்த 17 வருடங்களாக தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் ராமநாதபுர மாவட்டத் தலைவராகவும், மனிதநேய மக்கள் கட்சியில் மாநிலச் செயலாளராகவும் இருந்தவர் சலீமுல்லாகான். திடீரென இவர் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தூக்கி எறியப்படவே, ராமநாதபுர இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் பெரும் சலசலப்பு.

'சலீமுல்லாவை நீக்கவேண்டிய அவசியம் என்ன?’ என்பது குறித்து ஏரியா நிர்வாகிகளிடம் விளக்கிச் சொல்வதற்காக த.மு.மு.க-வின் மூத்த தலைவர் ஹைதர் அலி, ம.ம.க. தலைவர் அப்துல் சமது ஆகியோர் ராமநாதபுரத்துக்கு வந்திருந்தனர்.

சலீமுல்லா விவகாரம் குறித்து ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. மற்றும் ம.ம.க. நிர்வாகிகளான சாதிக்பாஷா, அன்வர், வாணி சித்திக் ஆகியோர் நம்மிடம் கூட்டாகப் பேசினார்கள். ''சலீமுல்லாகான்

நடிகைகளுன் சுற்றினாரா சலீமுல்லாகான்?

நீக்கம் திடீரென்று எடுக்கப்பட்ட முடிவல்ல. ஆறேழு வருடங்களாகவே அவர் மீது ஏராளமான புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. ஆனாலும் அமைப்புக்குச் சொந்தமான லட்சக்கணக்கான பணமும், சொத்துக்களும் அவரிடம் இருந்த காரணத்தால்தான், உடனடியாக அவரை நீக்க முடியவில்லை. இப்போதும் அந்தச் சொத்துக்களை மீட்க முடியவில்லை. ஆனால் நமது உண்மையான தொண்டர்களும், த.மு.மு.க. வளர்ச்சிக்கு உதவும் நல்ல மனிதர்களும், 'சலீமுல்லாவின் மோசடித்தனத்தை தெரிந்துகொண்ட பிறகும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று தொடர்ந்து கேட்டதால்தான் இப்போது நடவடிக்கை எடுத்துள்ளோம்.

15 வருடங்களுக்கு முன்பு சாதாரண பரோட்டா மாஸ்டராக இருந்த சலீமுல்லா... இன்று பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறார். அவருக்கு எப்படி வந்தது இவ்வளவு பணம்? வெளிநாடுகளில் வியர்வை சிந்தி உழைக்கும் ராமநாதபுர மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம்  இளைஞர்கள், சமுதாயப் பணிகளுக்காக மாவட்டத் தலைவர் என்ற முறையில் சலீமுல்லாவுக்குப் பணம் அனுப்பிவைத்தார்கள். அந்தப் பணத்தை எடுத்து அவர், தன் சொந்த ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டார். வாணி சித்திக், சிக்கல் உசேன்கனி, கிரீன் இபுராஹிம் போன்றவர்கள் பள்ளிவாசல் கட்டவும், ஸ்கூல் கட்டவும், ஏழைகளுக்கு உதவுவதற்காக வட்டி இல்லாத வங்கியைத் தொடங்கவும் கலெக்ட் செய்து அனுப்பிய

நடிகைகளுன் சுற்றினாரா சலீமுல்லாகான்?

பணத்திலும் முறைகேடு செய்துள்ளார். எல்லாவற்றையும்விட பெரிய கொடுமை, அமைப்பு சார்பாக கட்டிய பள்ளிவாசலையே, அவர் பேரில் எழுதிக்கொண்டார். இலவசமாக செயல்படுத்த வேண்டிய ஆம்புலன்ஸ் சர்வீஸை தன் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்திக்கொண்டார். மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடியில் த.மு.மு.க. சார்பில் வாங்கிய பள்ளிவாசல்கள் உள்ளன. இவை வாங்கப்பட்டதற்கான கணக்குகளை இதுவரை ஒப்படைக்கவில்லை. மேலும் இரண்டு தேர்தல்களுக்கான செலவுக் கணக்குகளையும் காட்டவில்லை. அமைப்புப் பணத்தில் பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்துள்ளார். மேலும் பல பெண்களை ஏமாற்றியதாக பாலியல் புகார்களும் வந்துள்ளன. வெகுவிரைவில் பாதிக்கப்பட்ட பெண்களே அவர் மீது போலீஸில் புகார் கொடுப்பார்கள். த.மு.மு.க-வுக்கு இருக்கும் பெயரைப் பயன்படுத்தித்தான் அவரால் கட்டப்பஞ்சாயத்து செய்ய முடிந்தது. அவரது செயல்கள் எல்லை மீறியதால் அவரை நீக்கிவிட்டோம். இனி, த.மு.மு.க-வின் தொண்டர்கள் உழைப்பில் வாங்கிய சொத்துக்களை அவரிடம் இருந்து சட்டபடி மீட்பதற்கான நடவடிக்கையில் இறங்குவோம்'' என்று சொன்னார்கள்.

  இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் சலீமுல்லாகான் என்ன பதில் சொல்கிறார்?

''வெளிநாட்டில் நல்ல சம்பாத்தியத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த நான், சமுதாய மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் 1995-ல் தொடங்கப்பட்ட த.மு.மு.க-வில் இணைந்து, ராமநாதபுர மாவட்டத் தலைவராகச் செயல்பட்டேன். இதற்காக எனது சொந்தப் பணத்தைத்தான் நிறையவே செலவு செய்திருக்கிறேன். ஏராளமான போராட்டங்களில் கலந்துகொண்டு சிறைக்குப் போயிருக்கிறேன். என்னுடைய கடுமையான உழைப்பு காரணமாகத்தான், ராமநாதபுர மாவட்டம் த.மு.மு.க-வின் கோட்டையாக இருக்கிறது. அதனால்தான் ஜவாஹிருல்லா இங்கே நின்று ஜெயித்து எம்.எல்.ஏ-வாக வரவும் முடிந்தது. அதற்கெல்லாம் காரணமாக இருந்த என் மீது அவதூறு சொல்லி கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமியக் கொள்கைகளைப் பரப்புவதற்காக பள்ளிவாசல் ஒன்றை இங்கே கட்டினோம். இதற்கு பல்வேறு நபர்கள் நிதி உதவி செய்தார்கள். அதற்கென்று தனியாக டிரஸ்ட்டும் ஏற்படுத்தி இருக்கிறோம். அந்தப் பள்ளிவாசலை த.மு.மு.க. அமைப்புக்கு எழுதித் தரும்படி கேட்டார்கள். நான் முடியாது என்று மறுத்ததுதான் பிரச்னையாகிவிட்டது. அது மட்டுமில்லாமல் நாங்கள் நடத்தும் நிறுவனத்தில் இருந்து வட்டி இல்லாத கடன் வாங்கிய சில நிர்வாகிகள், பணத்தைத் திருப்பித் தரவில்லை. அதைத் திருப்பிக் கேட்டதற்காகத்தான் என்னை நீக்கியிருக்கிறார்கள்.  சென்னையில் நான் பல நடிகைகளோடு ஜாலியாக இருந்ததாகவும் வதந்தி பரப்புகிறார்கள். இது எல்லாமே பொய் என்பது எங்களோடு அமைப்பில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். அதனால்தான் எனக்கு ஆதரவாக இருந்த பல கிளைகளைக் கலைத்துவிட்டார்கள். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் இணைந்து பேசி விரைவில் முடிவை அறிவிப் பேன்'' என்று சொன்னார்.

விரைவில் சலீமுல்லா, அவரது ஆதரவாளர்களுடன் வேறு அமைப்புக்குச் செல்லப்போகிறார் என்பதுதான் லேட்டஸ்ட் திருப்பம்!

- செ.சல்மான்

படம்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு