Published:Updated:

ஒரு கட்டி.. ஒரு ஊசி... ஒரு மரணம்!

நீலாங்கரை வேதனை

பிரீமியம் ஸ்டோரி
##~##
ஒரு கட்டி.. ஒரு ஊசி... ஒரு மரணம்!

'உதடு கட்டியை நீக்கச் சென்ற ஒரு பெண்ணுக்கு உயிரே போய்விட்டது’ என்ற திடுக் செய்தியால் பரபரப்பாகி இருக்கிறது கிழக்குக் கடற்கரைச் சாலை! 

நீலாங்கரையைச் சேர்ந்த அன்புக்கரசிதான் பலியானவர். மகளை இழந்த சோகத்தில் இருந்த ரேணுகாவிடம் பேசினோம். ''எங்களுக்குச் சொந்த ஊரு கும்பகோணம் பக்கத்தில் இருக்கும் ஆரியபடைவீடு. பெரிய நீலாங்கரைக் குப்பத்துக்கு வந்து இரண்டு வருஷமாகுது. அன்புக்கரசி, ரம்யா, சத்யா, பொற்செல்வினு எங்களுக்கு நாலு பெண்கள். மூத்தவள் அன்புக்கரசிக்கு 23 வயசு. மூணு வருஷத்துக்கு முன்னாடி கதிரவன் என்பவருக்குக் கல்யாணம் பண்ணிவெச்சோம். அவளுக்கு ரெண்டு பிள்ளைங்க. மூத்தவ நிதன்யாவுக்கு ரெண்டு வயசு... அடுத்தவ பிரசன்யாவுக்கு நாலு மாசம்.

அன்புக்கரசி அழகா இருப்பா. கொஞ்ச நாளுக்கு முன்னாடி உதட்டில் ஒரு கட்டி புதுசா வந்துச்சு. அதை எடுக்கணும்னு சொல்லிட்டே இருந்தா. அதனால என் மருமகன்கூட 18-ம் தேதி ராத்திரி ஈஞ்சம்பாக்கத்துல இருக்கிற அன்னை கிளினிக்குக்கு போனா. கொஞ்ச நேரத்தில் கைக் குழந்தை அழுததால், அவளுக்குப் போன் பண்ணினேன். உடனே பார்த்துட்டு வந்துடுவேன்னு சொன்னா... அதுதான், அவ சொன்ன கடைசி வார்த்தை. உதட்டுக் கட்டியை எடுக்கிறேன்னு போனவ உயிரையே எடுத்துட்டாரும்மா அந்த படுபாவி டாக்டர்'' என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுதார்.

ஒரு கட்டி.. ஒரு ஊசி... ஒரு மரணம்!
ஒரு கட்டி.. ஒரு ஊசி... ஒரு மரணம்!

மனைவியைப் பறிகொடுத்த துயரத்தில் இருந்த கதிரவனுக்கு ஆறுதல் சொல்லிப் பேசவைத்தோம். ''கட்டியை எடுக்கப் போனப்ப டாக்டர் பாலாஜிதான் அந்த ஆஸ்பத்திரியில  இருந்தார். 'இது ரொம்ப சிம்பிள். சின்னதா ஒரு ஊசியைப் போட்டு வெட்டி எடுத்துடலாம்’னு சொல்லி, ஊசி மருந்து எழுதிக் கொடுத்தார். அந்தக் கிளினிக்ல இருந்த மெடிக்கல்ல மருந்து வாங்கிக் கொடுத்தேன். அன்பு சிரிச்சுட்டே, அங்க இருந்த பெட்டில் ஏறிப் படுத்தா. டாக்டர் உதட்டில் ஒரு ஊசி போட்டார். திடீர்னு உதடு பெரிசாகிடுச்சு. என்ன டாக்டர் இப்படி ஆகுதேன்னு கேட்டேன். ஒண்ணும் இல்லை, நீங்க வெளியே போய் உட்காருங்கன்னு சொன்னார். அடுத்து மணிக்கட்டிலும் ஊசி போட்டார். நான் அதைப் பார்த்து பயந்து வெளியே வந்துட்டேன். கொஞ்ச நேரத்தில் டாக்டர் என்னைக் கூப்பிட்டு, 'உங்க மனைவி மயக்கம் ஆயிட்டாங்க. நீங்க பெரிய ஆஸ்பத்திரிக்கு உடனே கொண்டு போங்க’ன்னு சொன்னார். ஆனா, மறக்காம ஃபீஸையும் வாங்கிக்கிட்டார். எனக்கு ஒண்ணும் ஓடலை. 'அன்பு... அன்பு’னு கத்திக்கிட்டு அவளைத் தோளில் தூக்கிக்கிட்டு பக்கத்துல இருக்கும் ஆஸ்பத்திரிக்கு ஓடினேன். அங்க இருந்த டாக்டருங்க அவளைப் பரிசோதிச்சுப் பார்த்துட்டு, என் அன்பு செத்துப்போயிட்டானு சொல்லிட்டாங்க'' என்றவர் பெருங்குரலெடுத்து அழுதார்.

ஒருவாறு தேறியவர், ''அன்புவுக்கு உடம்பில் எந்த பிரச்னையுமே கிடையாது. ஊசி போட்டதுமே அன்புவோட உடம்பு கறுத்துப் போச்சு. அடுத்த மாசம் எம் பொண்ணுக்கு ரெண்டு வயசு பிறக்குது. எப்படி எல்லாம் கொண்டாடலாம்னு நானும் அன்புவும் பேசிவெச்சிருந்தோம். எல்லாமே மண்ணாப் போச்சே. அன்பு என்னையும் குழந்தைகளையும் அனாதையாக்கிட்டுப் போயிட்டாளே...'' என்று கதறி அழுதார்.

அன்புக்கரசி இறந்த தகவல் அறிந்ததும், அந்தப் பகுதி மக்கள் கிளினிக்கை முற்றுகையிட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், டாக்டர் பாலாஜியை கிளினிக்கில் இருக்கச் சொல்லிவிட்டு, அன்புக்கரசி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். அதற்குள் டாக்டர் பாலாஜி கிளினிக்கைப் பூட்டிவிட்டுத் தப்பி ஓடி விட்டார். அவர் குடும்பத்தோடு தலைமறைவாகி இருக்கும் நிலையில், அவர் சார்பில் நம்மிடம் பேசியவர்கள், ''டாக்டர் இங்கே கிளினிக் தொடங்கி அஞ்சு வருஷங்களுக்கு மேல் ஆகுது. ரொம்பவும் அனுபவசாலி. அதிக பவர் உள்ள ஊசி எதையும் போட மாட்டார். அந்தப் பெண்ணுக்கு ஏதாவது பிரச்னை இருந்து, அது அவரின் குடும்பத்தினருக்கே தெரியாமல் இருந்திருக்கலாம். அதனால், டாக்டர் ஊசி போட்டதும், உடல்நிலை பாதித்தும் இருக்கலாம்'' என்றார்கள்.

ஒரு கட்டி.. ஒரு ஊசி... ஒரு மரணம்!

நடந்த சம்பவம் குறித்து நீலாங்கரை உதவி ஆணையர் உமாசங்கரிடம் பேசினோம். ''மருத்துவமனைக்குச் சென்றவர் இறந்ததாக வந்த புகாரின் பேரில் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினோம். இரண்டு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்திருக்கிறார்கள். உடல் உறுப்புகள் லேப் டெஸ்ட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது. திருமணமாகி ஏழு ஆண்டுகள் வரை இயற்கைக்கு மாறான வகையில் மரணம் அடைந்திருந்தால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்படும். அந்த வகையில் தாம்பரம் ஆர்.டி.ஓ-வும், நானும் விசாரணை நடத்திவருகிறோம். விசாரணைக்குப் பின் டாக்டர் மீது தவறு இருக்கும்பட்சத்தில் நிச்சயம் கைது செய்யப்படுவார்'' என்றார்.

டாக்டர் கைது செய்யப்படலாம். ஆனால், அம்மாவை இழந்து தவிக்கும் பிஞ்சுகளுக்கு என்ன பதில்?

- மு.செய்யது முகம்மது ஆசாத்

படங்கள்: வீ.நாகமணி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு