Published:Updated:

ஆர்.வி. கைதுக்குக் காரணம்... ஆளும் கட்சிப் பிரமுகரா?

திருச்சி திகுதிகு

பிரீமியம் ஸ்டோரி
##~##
ஆர்.வி. கைதுக்குக் காரணம்... ஆளும் கட்சிப் பிரமுகரா?

திருச்சியில் வலம் வரும் அதிரடி முகங்களில் ஒருவர்... ஆர்.விஸ்வநாதன். ஆர்.வி. என்றால்தான் அனைவருக்கும் தெரியும். முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர், சினிமா விநியோகஸ்தர், தயாரிப் பாளர் என்று பரபரப்பான மனிதர். இவர் கடந்த 26-ம் தேதி அதிகாலை திடீரென மாநகரப் போலீஸாரால் கைது செய்யப்பட... திருச்சி அரசியல் வட்டாரத்தில் பற்றியது பரபரப்பு! 

ஆர்.விஸ்வநாதன் வளர்ந்த கதை ரொம் பவே சுவாரஸ்யமானது. விஸ்வம் போஜன் என்பவர் சொந்தப் பகை காரணமாக ஆர்.விஸ்வநாதன் மீது ஆசிட் ஊற்ற... முகம் முழுவதும் வெந்துபோனாலும் உயிர் பிழைத்தார். அதன் பின் தனக்கென ஒரு படையை உருவாக்கிக்கொண்டார் ஆர்.வி. இவருக்குப் பக்கபலமாக வலம் வந்த எட்டரை ராஜா என்பவரை சுந்தர் நகர் மாணிக்கம் என்பவர் வெட்டிக் கொன்றார். பழிக்குப் பழியாக மாணிக்கம் வெட்டிக் கொல்லப்பட... அந்த வழக்கில் விஸ்வநாதன் கைது செய்யப்பட்டார்.  கொலையைப் பார்த்த நேரடி சாட்சிகள் யாரும் இல்லை என்று காரணம் சொல்லப்பட்டு விஸ்வநாதன் விடுதலையானார். அடுத்தடுத்து ஆர்.வி-க்கு ஏறுமுகம்தான். முத்தரையர் முன்னேற்றச் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆனார். பின்னர் பரதன் ஃபிலிம்ஸ் நிறுவனம் ஆரம்பித்து விநியோகஸ்தர் ஆனார். தனது மகன் பரதனை ஹீரோவாக்கி, 'நீ நான் நிலா’ என்ற பெயரில் திரைப்படம எடுத்து, தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார். அடுத்து சிம்புவை வைத்து எடுத்த 'கெட்டவன்’ படம் பூஜையோடு நின்றது.

ஆர்.வி. கைதுக்குக் காரணம்... ஆளும் கட்சிப் பிரமுகரா?

திருச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முத்தரையர் சமூகத்தினர் அதிகம் என்பதால், கட்சிப் பொறுப்புகளிலும் ஆட்சிப் பொறுப்புகளிலும் அந்த சமூகத்தினருக்கு முக்கியத்துவம் கிடைப்பது வழக்கம். அதுபோல் அவர்களது சமூகத்தைச் சேர்ந்த மன்னரான பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்த நாள் விழா, வருடந்தோறும் அரசால் விமரிசையாகக் கொண்டாடப்படுவதும் உண்டு.

இந்த வருடம் மே மாதம் நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட நிர்வாகம் உரிய ஏற்பாடு களைச் செய்யவில்லை என்று, விஸ்வநாதனின் ஆட்கள் கலவரத்தில் இறங்கினார்கள். அதில் காந்தி மார்க்கெட்

ஆர்.வி. கைதுக்குக் காரணம்... ஆளும் கட்சிப் பிரமுகரா?

இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் தாக்கப்பட்டார். அதனால் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் மீது பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்ததாக வழக்குத் தொடரப்பட்டது. கைது நடவடிக்கையில் போலீஸார் இறங்குவதற்கு முன்னர் நீதிமன்றத்துக்குச் சென்று முன் ஜாமீன் வாங்கினார் விஸ்வநாதன்.

இந்த நிலையில்தான், வீர முத்தரையர் பேரவைத் தலைவரான செல்வகுமார் என்பவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு இருக்கிறார் விஸ்வநாதன். அவருடைய மகன்கள் ராம்பிரபு மற்றும் பாலமுருகன், மருமகன்கள் ரவிசங்கர் மற்றும் தர்மராஜ் ஆகியோரும் இப்போது கைது செய்யப்பட்டு உள்ளனர். இன்னொரு மகனான பரதன் தலைமறைவு ஆகிவிட்டார்.

''வீர முத்தரையர் பேரவை நடத்திவரும் செல்வக்குமாருக்கும் விஸ்வநாதனுக்கும் ரொம்ப நாட்களாகவே மோதல் இருக்கிறது. மார்ச் 12-ம் தேதி ராம்ஜி நகர் பகுதியில் உள்ள செல்வகுமாரின் வீட்டில் விஸ்வநாதன் தன் அடியாட்களுடன் நுழைந்தார். வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்கியதுடன், கொன்றுவிடுவேன் என்று மிரட்டிவிட்டு வந்ததாகப் போலீஸில் புகார் கொடுத்தார் செல்வக்குமார்'' - விஸ்வநாதனின் கைதுக்குக் காரணமாக போலீஸார் சொல்வது இதைத்தான்.

நான்கு மாதங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்துக்கு இப்போது போலீஸார் கைது நடவடிக்கையில் இறங்கக் காரணம் என்ன?

''செல்வக்குமாருக்கும் விஸ்வநாதனுக்கும் சில ஆண்டுகளாகவே அவ்வப்போது தகராறு நடப்பது உண்டு. ஆனாலும், அவர்கள் போலீஸை நாடியது இல்லை. இப்போது விவகாரம் கைது வரை போய்

ஆர்.வி. கைதுக்குக் காரணம்... ஆளும் கட்சிப் பிரமுகரா?

இருப்பதற்குக் காரணம் திருச்சியைச் சேர்ந்த முக்கிய ஆளும் கட்சிப் பிரமுகர்தான். அவருடைய சகோதரர்கள்  ரியல் எஸ்டேட் தொழிலில் இருக்கிறார்கள். அவர்களுடன் விஸ்வநாதன் தரப்பினர் சமீப காலமாக போட்டியில் இறங்கிக் குடைச்சல் கொடுத்து வந்தனர். அதனால் எரிச்சலான அந்தப் பிரமுகர் விஸ்வநாதனைப் பணியவைக்க விரும்பி பழைய வழக்குகளைத் தூசி தட்டவைத்திருக்கிறார்'' என்கிறார்கள் திருச்சி அரசியல் வட்டாரத்தில்.

செல்வக்குமாரை சந்திக்க முயன்றோம். அவர் உயிருக்குப் பயந்து தலைமறைவாக இருப்பதாக அவருடைய நண்பர்கள் சொன்னார்கள்.  

விஸ்வநாதனின் வழக்கறிஞர் அகிலனிடம் பேசினோம். ''இது முற்றிலும் பொய்யான வழக்கு. யாரையோ திருப்திப்படுத்தவே இந்த வழக்கு புனையப்பட்டு இருக்கிறது. செல்வக்குமாரை அழைத்து மிரட்டி புகாரை வாங்கி கைது செய்துள்ளனர். இதை சட்டப்படி எதிர்கொள்வோம்'' என்றார்.

கன்டோன்மென்ட் சரக போலீஸ் உதவி கமிஷனர் காந்தியைச் சந்தித்தோம். ''மார்ச் மாதம் வீட்டை அடித்து நொறுக்கிய பிறகும் செல்வக்குமார் பொறுமையாக இருந்திருக்கிறார். அதன் பிறகும் விடாமல், கொலை செய்துவிடுவதாக விஸ்வநாதன் தரப்பினர் மிரட்டி வந்திருக்கிறார்கள். அவர் உயிருக்குப் பயந்து எங்களிடம் வந்து புகார் கொடுத்தார். நாங்கள் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுத்துள்ளோம். இதில் வேறு எந்த அரசியல் பின்னணியும் இல்லை'' என்றார்.

விஸ்வநாதன் கைது ஆகியிருக்கும் சூழலில் திடீரென ஊருக்குள் அசம்பாவிதம் நடக்கலாம் என்று அலெர்ட் ஆக இருக்கிறது காவல் துறை!

- அ.சாதிக் பாட்ஷா, 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு