Published:Updated:

தூக்குப் போட்டால் காயங்கள் இருக்குமா?

சேலத்தை உலுக்கும் மாணவனின் மர்ம மரணம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
தூக்குப் போட்டால் காயங்கள் இருக்குமா?

ள்ளிக் குழந்தைகளின் திகில் மர​ணங்கள் தமிழக மக்கள் நெஞ்சை வதைத்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், சேலம் மாவட்டத்தில் ப்ளஸ் டூ  மாணவன் ஒருவன் மர்மமாக இறந்த போன பரிதாபம் இது. 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தேவியாக்​குறிச்சி​யில் உள்ள மாருதி மெட்ரிக்குலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூலில் ப்ளஸ் டூ படித்தான் அனில்குமார். கடந்த 24-ம் தேதி, 'ஹாஸ்டலில் தூக்குப் போட்டு இறந்து விட்டான்’ அனில்குமார் என்று பள்ளிநிர்வாகம் தகவல் அளித்ததைத்

தொடர்ந்து, அடித்துப் பிடித்து ஓடிவந்து இருக்கிறார்கள் அனில்குமாரின் பெற்றோர். இருவரும் பேச முடியாத நிலையில் இருந்ததால், அனில்குமாரின் பெரியப்பா மகன் விஜயிடம் பேசினோம்.

தூக்குப் போட்டால் காயங்கள் இருக்குமா?

''நாங்க நெய்வேலி பேப்பேரியான் குப்பத்​தில் வசிக்கிறோம். எங்க சித்தப்பா தேவராஜ் என்.எல்.சி-யில் வேலை செய்கிறார். அவருக்கு அருள்குமார், அனில்குமார், அஜித்​குமார் என்று மூன்று பையன்கள். சனி, ஞாயிறு விடு​முறைக்காக வீட்டுக்கு வந்த அனில்குமார் திங்கள்கிழமையும் லீவு எடுத்துட்டு, செவ்வாய்கிழமை அதிகாலை 5.40-க்கு பஸ்ஸில் கிளம்பினான். காலை 9.10க்கு போன் செய்த அனில்குமார், 'அப்பா நான் ஸ்கூலுக்கு வந்துட்டேன்’னு சொல்லியிருக்கான். அதுக்குப்பிறகு ஸ்கூல்ல என்ன நடந்துச்சுன்னு தெரியலை.

அன்னைக்கு சாயங்காலம் 5.40 மணிக்கு எங்க சித்தப்​பாவுக்கு யாரோ போன் செய்து, 'அனில்குமார் இறந்துட்டான்’னு மட்டும் சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டாங்க. உடனே எல்லோரும் பதறியடிச்சிட்டு ஸ்கூலுக்குப் போனோம். அப்பவே ஒரு போலீஸ்காரர் போன் செய்து, 'யோவ் எங்கே இருக்க, சீக்கிரம் வர மாட்டியா?’னு மிரட்டினார். நாங்க ராத்திரி போய்ச் சேர்ந்தபோது ஸ்கூல்ல ஏகப்பட்ட போலீஸ் பாதுகாப்புக்காக நின்னாங்க.

தூக்குப் போட்டால் காயங்கள் இருக்குமா?

எங்க பையனைப் பார்க்கத் துடிச்சோம். ஆனா, யாருமே எங்களிடம் பேசலை, எந்தத் தகவலும் சொல்லலை. அதனால் ஆத்தூர் காவல் நிலையத்தில் ஸ்கூல் நிர்வாகத்தின் மீது புகார் கொடுத்தோம். புகாரை வாங்காம இழுத்தடிச்சு ரொம்பவும் லேட்டாத்தான் எஃப்.ஐ.ஆர். போட்டாங்க. பையன் உடல் இருக்கும் இடத்தைக்கூட எங்களுக்கு யாரும் சொல்லவே இல்லை.

இந்தப் பள்ளியின் பங்குதாரர்​களும் தமிழக அமைச்சர் ஒருவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாம்.  அதனால், அமைச்சர் சொல் லித்தான் காவல்துறை, ஸ்கூல் நிர்வாகத்​துக்கு சாதகமாக செயல்​​படு​துன்னு சொன்னாங்க. மதியம் 2 மணிக்கு மேலதான் ஆத்தூர் அரசுமருத்துவ​மனைக்குக் கூட்​​டிட்டுப் போய் உட​லைக் காட்டினாங்க.

அனில்குமாரின் உடலில் பல இடங்களில் காயம் இருந்​தது. இடது கால் கட்டை விரல், இடதுகால் முட்டி, இடது கை நடுவிர​லிலும் காயம் இருந்துச்சு. காதின் இரு மடல்களும் கிழிந்துபோய், பற்கள் உடைந்​திருந்துச்சு. வலது புருவத்தில் இருந்த காயத்தில் இருந்து ரத்தம் வழிந்திருந்துச்சு. கழுத்தின் முன் பக்கத்தில் ஆழமான வெட்டுக் காயம்... தூக்குப் போட்டால் உடலில் இப்படிக் காயங்கள் இருக்குமாங்க...? ஸ்கூல் வாத்தியாருங்கதான் அவனை அடிச்சுக் கொன்னு இருக்காங்க. நிச்சயம் அனில்குமார் மரணத்தில் மர்மம் இருக்குது. ஆனால் இதுகுறித்துப் பேச, அவனுடன் இருந்த பசங்க பயப்படுறாங்க. அவங்களைத் தனியா விசாரித்தால் உண்மை தெரியவரும்'' என்றார் பதற்றத்துடன்.

நடந்த சம்பவம் குறித்து மாருதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியிடம் பேசினோம். ''சனி, ஞாயிறு விடுமுறைக்காகப் போனவன், திங்கள்கிழமையும் வரவில்லை. செவ்வாய்க் கிழமையும் காலை 11 மணிக்கு மேல்தான் வந்திருக்கிறான். மதியச் சாப்பாட்டு நேரத்தில் சக மாணவர்களிடம் மனவருத்தமாகப் பேசியிருக்கிறான். 'உங்களை எல்லாம் பார்க்கத்தான் வந்தேன்’ என்றானாம். வகுப்புக்கு வரச்சொல்லி அழைத்து இருக்கிறார்கள். ஆனால், அவன் ஹாஸ்டலிலேயே இருந்திருக்கிறான். பள்ளி முடிந்து ஹாஸ்டலுக்குப் போன மாணவர்கள்தான், அனில்குமார் தூக்குப் போட்டு இறந்து கிடந்ததைப் பார்த்துச் சொன்னார்கள்.  உடனே காவல் துறைக்கும், பெற்றோருக்கும் முறைப்படி தகவல் கொடுத்து விட்டோம். சரியான தகவல் சொல்லவில்லை என்று பெற்றோர் சொல்வது முழுக்க முழுக்கத் தவறு. அவன் மிகவும் அமைதியான மாணவன். வீட்டில் நடந்த ஏதோ ஒரு பிரச்னையால்தான், தவறான முடிவை எடுத்திருக்கிறான். இங்கே யாரும் அவனைக் கண்டிக்கவில்லை. நடந்த சம்பவம் எங்களுக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது'' என்றார்.

மாணவன் மரணம் குறித்து ஆத்தூர் டி.எஸ்.பி. மாணிக்கத்திடம் கேட்டோம். ''எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், உடனே சென்று பார்த்தோம். மாணவனின் உடல் ஹாஸ்டலில் இருந்தது. மற்ற மாணவர்கள் பார்த்து பயந்தார்கள். அதனால் தாசில்தாரிடம் சொல்லிவிட்டு, வீடியோவில் பதிவு செய்துகொண்டு, உடலை அரசு மருத்துவமனைக்கு போஸ்ட் மார்ட்டம் செய்ய அனுப்பினோம். நாங்கள் பள்ளி நிர்வாகத்துக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய அவசியமே இல்லை'' என்றார்.

ஆனால் ஆத்தூர் தாசில்தார் தங்கராஜ், ''சம்பவம் நடந்ததும் தலைவாசல் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்கள். போலீஸார் எனக்கு எந்தத் தகவலும் கொடுக்காமல், உடலை எடுத்துப் போய்விட்டார்கள்'' என்று உறுதியாகச் சொன்னார்.  

சில மாணவர்களிடம் விசாரித்தோம். முதலில் பேசவே தயங்கிய ஒரு சிலர் ''எங்க ஸ்கூல்ல டார்ச்சர், மிரட்டல், அடி எல்லாமே நடக்கும்'' என்று மட்டும் சொன்னார்கள். முழு உண்மையையும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டாவது சொல்லட்டும்!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: க.தனசேகரன்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு