Published:Updated:

பணம் கொடுத்து பதவிக்கு வந்தாரா?

திருவண்ணாமலை திகுதிகு

பிரீமியம் ஸ்டோரி
##~##
பணம் கொடுத்து பதவிக்கு வந்தாரா?

ளும் கட்சி நிர்வாகிகள் பணம் பண்ணத் தொடங்கி இருப்பது, அ.தி.மு.க-வினரின் கண்களையே உறுத்தும் அளவுக்குப் பெருகிவிட்டது என்பதற்கு திருவண்ணாமலையில் நடந்த சம்பவமே சாட்சி. 

'திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும் நகரமன்றத் தலைவருமான பாலச்சந்தரின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவரை உடனே மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் வருகிற எம்.பி. தேர்தலில் இங்கே அ.தி.மு.க. வெற்றி பெற முடியும்’ என்று கொடநாட்டுக்குப் புகார் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள் திருவண்ணாமலை அ.தி.மு.க. விசுவாசிகள்.

இந்த விவகாரம் குறித்து பெயரை மறைத்துப் பேசினார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர். ''பாலச்சந்தரின் சொந்த ஊர் போளூர் பக்கத்தில் ஒரு கிராமம். ஆரம்பத்தில் அவருக்குச் சொல்லிக்கொள்ளும்படி

பணம் கொடுத்து பதவிக்கு வந்தாரா?

சொத்துக்கள் எதுவும் இல்லை. உடைந்துபோன ஒரு ஜல்லி மிஷின் இருந்தது. அதைக்கூட பராமரிக்க முடியாமல் விற்கும் நிலையில்தான் இருந்தார். நகர மன்றத் தலைவர், மாவட்டச் செயலாளர் போன்ற பதவிகள் வந்ததும், கொஞ்ச நாட்க ளிலேயே  நான்கு கல் குவாரிகளை டெண்டர் எடுத்து ஜல்லி உடைத்து வருகிறார். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு போடுவது என்றால், இவரிடம்தான் ஜல்லி வாங்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டம்.

பதவி கிடைத்ததில் இருந்து பணம்.. பணம் என்று பரபரப்பதுதான் இவருடைய ஒரே வேலை. எந்த ஒரு வேலைக்கான டெண்டர் என்றாலும், கமிஷன்களை கறாராகப் பேசுகிறார்.  

இந்தப்பகுதி மக்களுக்கு அடிப்படை வசதி களைக்கூட இதுவரை செய்து கொடுக்கவில்லை. குறிப்பாக, தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. ஆனால், அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படுவது இல்லை. கடந்த ஆட்சியில் டெண்டர் எடுத்தவர்கள், குப்பைகளை வீடுவீடாகச் சென்று சேகரித்து நகரைச் சுத்தமாக வைத்திருந்தார்கள். இப்போது அந்த

பணம் கொடுத்து பதவிக்கு வந்தாரா?

டெண்டரை கேன்சல் செய்துவிட்டு தனக்கு வேண்டியவருக்குக் கொடுத்து, அதிலேயும் லாபம் பார்த்து விட்டார். குப்பைகள் முறையாக அள்ளப் படாததால், இப்போது நகரம் முழுவதும் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கிறது. கொசுத் தொல்லையும் அதிகரித்து விட்டது.

இவர் நேரடியாக எதிலும் இறங்குவது இல்லை. இவருக்காக அனைத்தையும்  டீல் செய்வது  இவரோடு இருக்கும் அரசப்பன். கவுன்சிலர் பதவிக்கு நின்று தோற்ற அரசப்பன்தான் இப்போது, நகரமன்றத் தலைவர் போல நகராட்சியில் செயல்பட்டு வருகிறார்.

அதேபோல் இவர், தெற்கு மாவட்டச் செயலாள ராகப் பதவி ஏற்ற கதை சுவாரஸ்யமானது. இவர் ராவணனின் ஆதரவாளர். ராவணனின் உதவி யாளர் மோகனுடைய மகனுக்கு வேலூரில் இருக்கும் ஒரு பொறியியல் கல்லூரியில் ஸீட் வாங்கிக் கொடுத்ததன் மூலம் ராவ ணனிடம் நெருக்கமானார். ராவண னுக்குப் பணம் கொடுத்துத்தான் மாவட்டச் செயலாளர் பதவியை வாங்கினார் என்கிறார்கள். ராவணன் சிறையில் இருந்த நேரத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்தார். இப்போது மீண்டும் தலைகால் புரியாமல் ஆடுகிறார். கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் மதிப்பதே இல்லை. எல்லோரையும் தகாத வார்த்தைகளில்தான் பேசுகிறார். தன்னைக் கவனிப்பவர்களுக்குத்தான் கட்சிப் பதவிகள் தருகிறார். 'என்னை யாரும், எதுவும் செய்ய முடியாது. அம்மாகூட என் மாவட்டச் செயலாளர் பதவியைத்தான் பறிக்க முடியும். அது போனாலும் நான் நகரமன்றத் தலைவர்தான்’ என்று தெனாவெட்டாகப் பேசுகிறார். இவரை நீக்கிவிட்டு உடனே தகுதியான ஒருவரை திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டும். இல்லை என்றால் வரும் தேர்தலில் அ.தி.மு.க-வினர்கூட ஓட்டுப் போட மாட்டார்கள்'' என்று கடுகடுத்தனர்.

பணம் கொடுத்து பதவிக்கு வந்தாரா?

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பாலச்சந்தரிடம் விளக்கம் கேட்டோம். ''இதெல்லாம் என் மீது வேண்டும் என்றே சிலர் சுமத்தும் அபாண்டமான குற்றச்சாட்டுகள். பணம் கொடுத்துப் பதவிக்கு வர்ற அளவுக்கு எனக்கு வசதி கிடையாதுங்க. என்னோட கட்சிப் பணியைப் பார்த்து, அம்மாதான் பதவியைக் கொடுத்திருக்காங்க. என்னோட குவாரியும் பேங்க் லோன் வாங்கித்தான் நடத்திட்டு வர்றேன். குப்பைப் பிரச்னைக்கு  விரைவில் தீர்வு காணப்படும். தவிர, நான் எந்த வேலையையும் நகராட்சியில் எடுத்துச் செய்வதே இல்லை. அரசப்பன் எனது மீடியேட்டர் அவ்வளவுதான். தி.மு.க-வுக்கு வால் பிடிக்கும் எங்கள் கட்சிக்காரர்கள்தான் இது மாதிரியான குற்றச்சாட்டுக்களைக் சொல்லிக் கொண்டே இருப்பார்கள். என்னைப் பற்றி அம்மாவுக்கு நன்றாகவே தெரியும்'' என்றார்.

அப்படியா?

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு