Published:Updated:

தற்கொலைக்குத் தூண்டியதா போலீஸ்?

தற்கொலைக்குத் தூண்டியதா போலீஸ்?

பிரீமியம் ஸ்டோரி
##~##
தற்கொலைக்குத் தூண்டியதா போலீஸ்?

திருச்சி, திருவெறும்பூர் போலீஸாரால் விசா ரணைக்கு அழைத்து வரப்பட்ட தாய், மகன் இருவரும் விஷம் குடித்து உயிர் இழந்திருக்கும் சம்பவம், மனித உரிமை ஆர்வலர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது! 

உண்மையில் என்ன நடந்தது?  

''திருவெறும்பூர் ஏரியாவில் கடந்த சில மாதங்களாகவே டூ வீலரில் வந்து நகை பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்த காரணத்தால், எஸ்.ஐ. உதயகுமார் தலைமையில் ஸ்பெஷல் க்ரைம் டீம் ஒன்று உருவாக்கப்பட்டது. கடந்த வாரம் ராமநாதபுரம் போலீஸில் சிக்கிய செந்தில் என்ற திருடன், 'திருச்சி திருவெறும்பூர் பகுதியில் சுரேஷ் என்பவருடன் சேர்ந்து பல வழிப்பறிகளில் ஈடுபட்டேன்’ என்று சொல்லி இருக்கிறார். இந்தத் தகவல் திருச்சி போலீஸுக்குத் தெரிவிக்கப்படவே, சம்பந்தப்பட்ட சுரேஷை 'பொறி’ வைத்துப் பிடித்தார்கள்.

'திருவெறும்பூர் ஏரியாவில் இதுவரை 11 வழிப்பறிகள் செய்துள்ள நாங்கள், அந்த நகைகளில் சிலவற்றை அரியலூரில் உள்ள நடராஜன் என்பவர் மூலமாக, ராணி என்ற பெண்ணிடம் கொடுத்து அடகுவைக்கச் சொல்லி காசு வாங்குவோம்’ என்று போலீஸிடம் ஒப்பித்து இருக்கிறார் சுரேஷ்.

தற்கொலைக்குத் தூண்டியதா போலீஸ்?
தற்கொலைக்குத் தூண்டியதா போலீஸ்?

உடனே அரியலூருக்குச் சென்ற திருவெறும்பூர் போலீஸ் டீம்...  நடராஜன், ராணி அவரது மகன் ஆனந்த பாபு ஆகியோரை கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு திருச்சி அழைத்து வந்திருக்கிறார்கள். ராணி ஆறு மாதங்களுக்கு முன்பு சுரேஷிடம் இருந்து 15 பவுன் நகைகளை வாங்கி அரியலூர் வங்கியில் அடகு வைத்திருக்கிறார். அந்த நகைகளை அவர் போலீஸிடம் ஒப்படைப்பதாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் போலீஸ் 100 பவுன் வரையிலும் நகைகளைக் கேட்டு கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். என்ன செய்வது என்று புரியாமல் கடுமையான மன உளைச்சலில் இருந்திருக்கிறார் ராணி'' என்று சொல்கிறார், ராணிக்காக ஆஜரான வக்கீல் கதிரவன்.

அடுத்து நடந்ததையும் அவரே சொல்கிறார். ''நகைகளை அடகுவைத்த ரசீதுகளை எடுத்து வருவதற்காக அரியலூருக்கு ராணி, ஆனந்த பாபு, நடராஜன் ஆகியோரை அழைத்துச் சென்றது திருவெறும்பூர் போலீஸ். அப்போது வீட்டில் நகைகளை பாலீஸ் போடுவதற்காகப் பயன்படுத்திய சயனைடைப் பார்த்திருக்கிறார் ராணி. இது நகைத் தொழிலில் இருக்கும் பலரும் வைத்திருப்பதுதான். ரசீதுகளை எடுத்து வந்த நேரத்தில் சயனைடையும் சேர்த்து எடுத்துக்கொண்டார். எதிர்பார்த்த அளவுக்கு தங்கம் இல்லை என்று

தற்கொலைக்குத் தூண்டியதா போலீஸ்?

தெரியவந்ததும் மீண்டும் ராணியையும் ஆனந்தபாபுவையும் மிரட்டிக் கொடுமைப்படுத்தி உள்ளது போலீஸ். ஸ்டேஷனுக்குப் போனால் இன்னமும் அதிகம் கொடுமை நடக்கும் என்று பயந்துபோய், போலீஸ் வேனில் சென்றபோதே சயனைடைச் சாப்பிட்டுவிட்டார்கள். அதன் பிறகு சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து இருவரும் மயங்கிவிட்டார்கள். உடனே இவர்களை அரியலூருக்கு அழைத்துச் சென்றால் பிரச்னை வரலாம் என்று நினைத்து திருச்சிக்கு அழைத்துப் போனார்கள். ஆனால் அதற்குள் இருவரது உயிரும் பிரிந்துவிட்டது.

திருவெறும்பூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ.ராஜேந்திரன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். கொடுமைப்படுத்திய ஸ்பெஷல் க்ரைம் டீமின் லீடரான எஸ்.ஐ. உதயகுமார், பெண் எஸ்.ஐ. கமலவேணி ஆகியோர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆளும் கட்சி வி.ஐ.பி. ஒருவரின் சிபாரிசால் இவர்கள் மீது நடவடிக்கை பாயவில்லை என்கிறார்கள். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை இந்தப் பிரச்னையை விட மாட்டோம்'' என்றார் ஆவேசமாக.

மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஆதி நாராயணமூர்த்தி, பொன் முருகேசன் ஆகியோர், 'இறந்தவர்களில் ராணியின் முகத்தில் காயமும், ஆனந்த பாபுவின் காலில் காயமும் இருக்கிறது. செவ்வாய்க் கிழமையே இவர்களை அழைத்து வந்து இரண்டு நாட்களுக்கு மேல் சட்ட விரோதக் காவலில் வைத்து போலீஸ் துன்புறுத்தி இருக்கிறது. விசாரணைக்கு அழைத்துச் செல்லும் தகவலைக்கூட உறவினர்களிடம் போலீஸ் தெரிவிக்கவில்லை. காவல் துறையில் இருவரை மட்டும் சஸ்பெண்ட் செய்திருப்பது போதுமான நடவடிக்கை அல்ல. தற்கொலைக்குத் தூண்டிய வழக்கை போலீஸார் மீது பதிவு செய்து, அவர்கள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்' என்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் துறையின் கருத்தை அறிய திருச்சி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா விடம் பேசினோம். 'ராணியையும், அவரது மகன் ஆனந்த பாபுவையும் வியாழக்கிழமை காலையில்தான் திருவெறும்பூர் போலீஸார் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். அழைத்து வரும் நேரத்தில் போலீஸார் கவனக் குறைவாக இருந்ததால், அவர்கள் விஷம் குடித்து இறந்துவிட்டனர். நகைத் தொழிலில் உள்ளவர்கள் விஷத்தன்மை கொண்ட சில ரசாயனங்களைப் பயன்படுத்துவது வழக்கம். அதைத்தான் ராணியும் ஆனந்தபாபுவும் குடித்து இருக்கிறார்கள். கவனக்குறைவாக இருந்த காரணத்தால் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ.ராஜேந்திரன் ஆகியோர் மட்டும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்' என்றார்.

இப்போது, திருட்டுத் தங்கத்தை மீட்கும் முயற்சி மறைந்து, தங்களைத் தாங்களே காத்துக்கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறது போலீஸ். போலீஸுக்குப் பயந்து தற்கொலை செய்துகொண்ட இருவர் குடும்பத்துக்கும் என்னதான் செய்யப்போகிறது காவல் துறை?

- அ. சாதிக் பாட்சா

படங்கள்: எம்.ராமசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு