Published:Updated:

மணல் கொள்ளை அடிக்கிறார்களா அமைச்சரின் ஆதரவாளர்கள்?

எடப்பாடி ஏடாகூடம்

பிரீமியம் ஸ்டோரி
##~##
மணல் கொள்ளை அடிக்கிறார்களா அமைச்சரின் ஆதரவாளர்கள்?

'சேலம் மாவட்டம் எடப்பாடிக்குப் பக்கத்தில் இருக்கும் வேப்பம்பட்டியில் இருந்து கோபி பேசுறேங்க. எங்க ஊரு ஏரியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மண்ணை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியோட ஆதரவாளர்கள் அள்ளிக்கிட்டு இருக்காங்க. நீங்கதான் வந்து விசாரிக்கணும்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) அழைப்பு வந்தது.

 விவசாயி கோபியைச் சந்தித்தோம். ''எங்க வேப்பம்பட்டி ஏரி 276 ஏக்கர் பரப்பளவு கொண்டதுங்க. இந்த ஏரியால்தான் ஆவணிபேரூர், போடிநாயக்கன்பட்டி, குப்பதாசன் வளவு, மல்லிபாளையம், நத்தக்காடு, செட்டிமாங்குறிச்சி வளவு, முனிச்சி வளவுன்னு 10 ஊர்களுக்கு மேல பாசனம் நடக்குது. இந்த ஏரிக்கு சரபங்கா நதியில் இருந்துதான் தண்ணீர் வரும். ஏரியில தண்ணீர் இருந்தால்தான் இந்தப் பக்கம் விவசாயம் அமோகமாக இருக்கும்.

ஆனா இப்போ, எங்க தொகுதியைச் சேர்ந்தவரான நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உற​வினர் சின்னுசாமியின் சூளைக்கு, ஏரியில் இருந்து வண்டல் மண் எடுத்துக்க பஞ்சாயத்துல அனுமதி கொடுத்தாங்க. அதான் பிரச்னை ஆயிடுச்சு. வண்டல் மண் ஒரு மீட்டர் ஆழத்துக்குள்தான் எடுக்கணும். ஆனா 15 மீட்டருக்குத் தோண்டி அடியில் உள்ள செம்மண், கரிசல் மண், மணல்னு தினமும் லாரி, லாரியா மண் எடுக்கிறாங்க. ஜே.சி.பி. வண்டியை வைச்சு இரவு பகலாத் தோண்டி எடுத்து, ஏரியை நாசப்படுத்திட்டாங்க. இதனால் ஏரியோட கரையும் பழுதாகிப்போச்சு.

மணல் கொள்ளை அடிக்கிறார்களா அமைச்சரின் ஆதரவாளர்கள்?
மணல் கொள்ளை அடிக்கிறார்களா அமைச்சரின் ஆதரவாளர்கள்?

அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலையீடு இருக்கிறதால, இதை அரசு அதிகாரிகளால் தடுக்க முடியவில்லை. இதே நிலைமை நீடிச்சா, எங்களால விவசாயமே பண்ண முடியாமப் போயிடும். நாங்களும் வி.ஏ.ஓ., ஆர்.ஐ., ஆர்.டி.ஓ., கலெக்டர்னு எல்லோருக்கும் புகார் கொடுத்துட்டோம். ஒண்ணும் வேலைக்கு ஆகலை. அமைச்சரிடமும் புகார் கொடுத்தோம். புகாரை வாங்கிக்கிட்டு, 'போங்க, நான் பார்த்துக்கிறேன்’னு அனுப்பினார். ஆனா, இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இன்னும் ஒரு வாரம்தான் பொறுப்போம். நடவடிக்கை எடுக்கலைன்னா 10 கிராம மக்களும் சாலை மறியல்ல உட்காரப்போறோம்'' என்றார் கோபமாக.

இதே விவகாரத்தைப் பேசிய விவசாயி ஆறுமுகம், ''ஏரியில் இருந்து தினமும் 200-க்கும் அதிகமான லாரிகளில் ஏரி மண்ணை அள்ளிட்டுப் போய் நாலைஞ்சு இடத்துல மலை போல கொட்டி வெச்சு விக்கிறாங்க. நாங்களே பலமுறை மணல் அள்ளிட்டுப் போகும் லாரியைப் பிடிச்சு ஆர்.டி.ஓ-விடம் ஒப்படைச்சிருக்கோம்.  ஆனா, எந்த நடவடிக்கையும் எடுக்கல. பஞ்சாயத்துத் தலைவர் கலைவாணி ராமகிருஷ்ணனிடம் சொல்லியும் பிரயோஜனம் இல்லை. மினிஸ்டர் தலையீடு இருப்பதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தயங்குறாங்க.

ஏரி, குளங்களைப் பாதுகாத்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக முதல்வர் எவ்வளவோ நடவடிக்கை எடுக்கிறார். ஆனால், அதே கட்சியைச் சேர்ந்த அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன் சொந்தத் தொகுதியிலேயே ஏரியை அழித்து விவ சாயத்தையும் சீரழிக்கிறார்'' என்று வேதனைப்​பட்டார்.

மணல் கொள்ளை அடிக்கிறார்களா அமைச்சரின் ஆதரவாளர்கள்?

மணல் அள்ளும் வீரமாத்தி அம்மன் சேம்பர் உரிமையாளர் சின்னுசாமியிடம் பேசினோம். ''வேண்டும்என்றே சிலர் என் மீது பொய்ப்புகார் சொல்கிறார்கள். நான் எங்க அசோசியேஸன் மூலமாகத்தான் இந்த ஆர்டரை எடுத்தேன். 2,500 லோடு மண் எடுக்க ஆர்டர் இருக்கு. ஆனால் பாதிகூட அள்ளவில்லை. இந்தத் தொழில்ல 30 வருஷ அனுபவம் எனக்கு இருக்கு. ஒரு மீட்டருக்கு மேல் மண்ணை எடுக்​கவும் மாட்டேன். நாங்க அள்ளிய அதே பகுதியில், நாட்டு சூளைக்​காரர்கள்தான் 30 அடிக்குக் குழி பறிச்சு விடிய, விடிய டிராக்டரில் மண் அள்ளுறாங்க. அவங்க இந்தப் பகுதியில 10 வருஷமா ஏரி மண்ணை அள்ளிட்டு இருக்காங்க. அதைத்தடுக்க நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சு பார்த்துட்டேன், முடியவில்லை. இவங்க அரசுக்கு அஞ்சு பைசாகூட தராம பல கோடி மண்ணை அள்ளிட்டு இருக்காங்க. எனக்கும் அமைச்சருக்கும் மணல் விவகாரத்தில் எந்தத் தொடர்பும் கிடையாது'' என்றார்.

அமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்டோம். அவரது  உதவியாளர் ஹரி பேசினார். தகவல்களை முழுமையாகக் கேட்டுக்கொண்டார். சற்று நேரம் கழித்துக் கூப்பிட்டவர், ''இந்த சம்பவத்​துக்கும் அமைச்சருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மண் அள்ளுவதாக அமைச்சரிடம் எந்தப் புகாரும் வரவில்லை. வந்தால், உடனே நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

இப்போது புகார் சொல்லி விட்டோம். என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று பார்ப்​போம்!

- வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு