Published:Updated:

எங்க உயிராவது மானத்தோடு போகட்டும்!

வேதனையில் தேனி திருநங்கைகள்

பிரீமியம் ஸ்டோரி
##~##
எங்க உயிராவது மானத்தோடு போகட்டும்!

திருநங்கைகள், சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழ்பவர்கள். அரசு என்னதான் திட்டங்கள் தீட்டினாலும், அவர்களுடைய வேதனை இன்னும் தீரவே இல்லை. தேனி மாவட்டத்திலும் அப்படி ஒரு விவகாரம். 

தேனி நகராட்சிக்கு உட்பட்ட வள்ளி நகரில் திருநங்கைகள் குடியிருக்க ஐந்து வருடங்களுக்கு முன்பு தற்காலிகமாக இடம் ஒதுக்கப்பட்டது. அத்துடன் வடபுதுப்பட்டி பஞ்சாயத்தில் இந்திரா காந்தி நினைவு வீடு கட்டும் திட்டத்தின் கீழ், வீடு கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த வீடுகள் கட்டி முடிக்கப்படவே இல்லை. அதற்குள் வள்ளி நகர்வாசிகளிடம் இருந்து திருநங்கைகள் மீது புகார்கள் கிளம்ப... பதிலுக்கு திருநங்கைகளும் அந்த ஏரியாவாசிகள் மீது புகார் கொடுத்துள்ளார்கள். வருவாய்த் துறையினர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னை ஓய வில்லை.

எங்க உயிராவது மானத்தோடு போகட்டும்!

தேனி கலெக்டர் பழனிசாமியிடம் திருநங்கைகள் மீது புகார் கொடுக்க வந்த வள்ளி நகர் மக்களிடம்

எங்க உயிராவது மானத்தோடு போகட்டும்!

பேசினோம். ''திருநங்கைகளை ஒட்டுமொத்தமாக எங்க தெருவில் குடியேற்றியதில் இருந்து ஒரே பிரச்னைதான். ராத்திரியில் தண்ணியைப் போட்டுட்டு ரோட்டில் அசிங்கமா ஆடுறாங்க. தெருவுல இருக்குற வயசுப் பசங்களை வளைச்சுப் போடு றாங்க. இதைக் கண்டிச்சா கண்டமேனிக்குத் திட்டுறாங்க. அதனால அவங்களைக் காலி செய்யப் புகார் கொடுத்தும் பலன் இல்லை. சட்டம் அவங்க பக்கம் இருக்குறதால நாங்க ஒண்ணும் செய்ய முடியாதுன்னு அதிகாரிங்க சொல்றாங்க. அந்த அதிகாரிங்க இங்கே வந்து குடும்பத்தோட குடியிருந் தாத்தான் எங்க வலி புரியும்'' என்றார்கள் கொதிப்பாக.

திருநங்கைகள் சார்பாக ஸ்வாதி, சத்யா இருவரும் பேசினார்கள். ''தேனி மாவட்டத்தில் 143 திருநங்கைகள் இருக்கோம். எங்களுக்கான அமைப்பும் சட்டமும் வந்த பின்னாலதான் நாங்க கொஞ்சமாவது நிம்மதியா வாழ முடியுது. எங்களில் வயசானவங்க வீட்டு வேலை செஞ்சு வயித்தைக் கழுவுறோம். இளம் வயசுக்காரங்க கரகாட்டம், இழவு வீட்டுக்கு ஒப்பாரிக்கு போறதுன்னு ஏதோ சம்பாதிச்சு சாப்பிடுறோம். ஆனா, பிரச்னை மேல் பிரச்னை செஞ்சு எங்களைக் கேவலப்படுத்துறாங்க. எங்களை அசிங்கப்படுத்துறவங்க, பாலியல் தொல்லை செய்றவங்களைப் பத்தி போலீஸில் புகார் கொடுத்தா, கண்டுக்கவே மாட்டேங்கிறாங்க. அதனால் எங்களால் நிம்மதியாக வாழவே முடியலை.

நாங்க குடியிருக்கும் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஒரு அம்மா எங்க மேல அன்பா இருப்பாங்க. அவருக்கும் வள்ளி நகரில் உள்ள குறிப்பிட்ட ஒரு சாதியினருக்கும் ரொம்ப நாளா பிரச்னை. இதை மனசுல வெச்சுக்கிட்டுத்தான், எங்க மேல் பழி போடுறாங்க. நாங்க எந்த தப்புத்தண்டாவும் செய்றது இல்லை. வீணா எங்க மேல தவறான புகாரைச் சொல்லி எங்களை அசிங்கப்படுத்தி, மக்களிடம் இருந்து பிரிக்கிறாங்க. வள்ளி நகரில் இருக்கிற குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த வயசுப் பசங்க தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கிட்டே இருக்காங்க.

எங்க உயிராவது மானத்தோடு போகட்டும்!

எங்க நிலைமையை 2010-ல் தேனி கலெக்டரா இருந்த முத்துவீரனிடம் சொன்னோம். முதல் கட்டமா 72 திருநங்கை களுக்கு வீடுகள் கட்ட உத்தரவிட்டார். வீடு வேண்டுவோர் பெயரில் 20 ஆயிரம் ரூபாய் வங்கிக் கடனும் கொடுத்தார். அவர் கலெக்டரா இருந் தப்ப, 10 வீடுகளுக்கு வேலை முடிந்தது. அவர் மாற்றலாகிப் போனதில் இருந்து வேலையைக் கிடப்பில் போட்டுட்டாங்க'' என்று சொல்லிக்கொண்டு இருந்தபோதே அவர்களுக்கு செல்போன் அழைப்பு. அதில் வந்த செய்தியைக் கேட்டு அழுதவர்கள், கண்ணீரைத் துடைத்துக்கொண்டு தொடர்ந் தார்கள்.

''திருநங்கைகள் பலருக்கு தங்குறதுக்கு வீடு இல்லாததால், பஸ் ஸ்டாண்டில் படுத்துத் தூங்குறாங்க. ஆதரிக்க எங்களுக்கு யாருமே இல்லைங்க. அதனால மனசு ஒடிஞ்சு ஒரு சிலர் தற்கொலை செஞ்சுக்கிறாங்க. இப்ப வந்த போன் அதுதான். எங்களை மாதிரி திருநங்கை ஒருவர், தூக்க மாத்திரையைத் தின்று கேரள மாநிலத்தில் உள்ள தொடுபுழா பஸ் ஸ்டாண்டில் செத்துக்கிடக்குறாங்களாம். இப்படி எங்களை அனாதையா மாத்தத்தான் நிறையப் பேர் ஆசைப்படுறாங்க. எங்க வீடுகளை வேகமா முடிச்சுக் கொடுத்தா... உயிரையாவது அங்கே மானத்தோடுவிடுவோம்'' என்று குமுறினர்.

அவர்களுக்காக வடபுதுப்பட்டி பஞ்சாயத்தில் கட்டப்படும் வீடுகளைப் பார்வையிட்டோம். எல்லாமே அறைகுறையாகக் கிடந்தன. மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களிடம் பேசினோம். ''இந்திரா காந்தி நினைவு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நரிக்குறவர்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 124 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தில் பயனாளிகளே வீடு கட்ட வேண்டும். பயனாளிகள் அனைவரும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்கள் என்பதால், அரசே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என அப்போதைய கலெக்டர் முத்துவீரன் சொன்னார். அதனால், அதிகாரிகளின் தனிப்பட்ட முயற்சியில் 32 வீடுகளுக்கான வேலைகள் துவக்கப்பட்டன. ஆட்சி மாறி, கலெக்டர் மாற்றப்பட்டதால் வீடுகளைப் பயனாளிகளே கட்டிக்கொள்ள வேண்டும் என்று இப்போது மாவட்ட அதிகாரிகள் சொல்லிவிட்டனர். ஆனால் வீடு கட்ட திருநங்கைகள், நரிக்குறவர்கள் முன்வரவில்லை. அதனால் அப்படியேகிடக்கிறது'' என்றார்கள்.

இதுகுறித்து தேனி கலெக்டர் பழனிசாமியிடம் பேசினோம். ''தொகுப்பு வீடுகளை அரசே கட்டித் தர விதிமுறைகள் இல்லை. இருந்தாலும், திருநங்கைகள் மற்றும் நரிக்குறவர்கள் நிலையை கருத்தில்கொண்டு ஆலோசனை செய்து, நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.

இன்னமும் ஆலோசனையே செய்யவில்லை என்றால்... திருநங்கைகள் துயரம் எப்போதுதான் தீருமோ?

- இரா.முத்துநாகு

படங்கள்: வீ.சக்தி அருணகிரி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு