Published:Updated:

என்னை டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டு, நீ நிம்மதியா இருக்கியா?

ஓசி சாராயம்... ஒன்பது கத்திக் கத்து!

பிரீமியம் ஸ்டோரி
##~##

நெல்லை மாவட்டப் போலீஸாருக்கு இது போதாத காலம் போலும்!  நாங்குநேரியில் அப்பாவி ஒருவரை இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொன்றதாக எழுந்த சர்ச்சையே இன்னும் ஓயவில்லை. அதற்குள் சுரண்டை காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டரை போலீஸ் காரர் ஒருவரே குத்திக் கொலை செய்துவிட்டார். 

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே இலஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கி. இவர் சுரண்டை காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ-யாகப் பணிபுரிந்தார். சொந்த ஊரில் இருந்து தினமும் வந்து செல்ல இயலாது என்பதால், காவல் நிலையம் அருகில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்தார். அவருடன் பணி புரியும் தலைமைக் காவலரான சண்முகராஜ், கோடைவிளையூர் கிராமத்தைச்

என்னை டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டு, நீ நிம்மதியா இருக்கியா?

சேர்ந்தவர். அவரும் இசக்கியுடன் ஒரே வீட்டில் தங்கி இருந்தார். அவர்தான் ஜூலை 26-ம் தேதி இசக்கியை சரமாரியாகக் கத்தியால் குத்தி, கொலை செய்து உள்ளார்.

இந்தக் கொலைக்கு என்ன காரணம் என்று ஸ்டேஷன் வட்டாரத்தில் விசாரித்தோம். ''நெல்லை மாவட்டத்தைப் பொறுத்தவரை சுரண்டை காவல் நிலையம் 'பசை’யானது. அதனால் தினமும் பணம் புரளும். சமீபத்தில் திருட்டுத்தனமாக மது பாட்டில்களை விற்பனை செய்த ஒருவரை போலீஸார் கைது செஞ்சாங்க. அவரிடம் இருந்து கைப்பற்றிய பாட்டில்களில், பாதிக்கும் மேல் போலீஸார் பதுக்கிட்டாங்க. சண்முகராஜ் நிறைய பாட்டில்களை சுருட்டிக்கொண்டு, அதனை

என்னை டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டு, நீ நிம்மதியா இருக்கியா?

ரூமில் வைத்து தினமும் குடித்தார். அதைப் பார்த்த இசக்கி, 'நீ மட்டும் தினமும் குடிக்கிறியே... ஓசியில் கிடைச்சதுதானே. எனக்கும் கொடு’ என்று கேட்டிருக்கிறார். இதில்தான் தகராறு ஆரம்பம்.

அதன் பிறகு இருவரும் சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட அடிக்கடி தகராறு செஞ்சிருக்காங்க. போலீஸ் ஸ்டேஷனிலும் சண்டை நடந்திருக்கிறது. சண்முகராஜ் டியூட்டி நேரத்திலும் போதையில் இருப்பது உண்டு. இந்த விவகாரம் எஸ்.பி வரைக்கும் புகாராகப் போனது. லோக்கலில் இருக்கும் எஸ்.பி-யின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவர் மூலமாக புகார் சென்றதால், ஜூலை 22-ம் தேதி சண்முகராஜை, எஸ்.பி விஜயேந்திர பிதரி டிரான்ஸ்ஃபர் செய்தார். ஆனால், தன்னோட டிரான்ஸ்பஃருக்கு இசக்கிதான் காரணம்னு சண்முகராஜ் தப்பாப் புரிஞ்சுக்கிட்டார்.

அதனால் டூட்டிக்குப் போகாமல் சுரண் டைக்கு வந்த சண்முகராஜ், வீட்டில் தூங்கிக் கிட்டு இருந்த இசக்கியை எழுப்பி, 'என்னை சுத்தமல்லி ஸ்டேஷனுக்கு மாற்ற நீதான் காரணம். என்னை அனுப்பிட்டு நீ மட்டும் நிம்மதியாத் தூங்குறியா’ன்னு சொல்லி மறைச்சு வைச்சிருந்த கத்தியை எடுத்து சரமாரியாக் குத்தி இருக்கார். சுதாரிக்கக்கூட முடியாமல் சாஞ்சுட்டார் இசக்கி. சத்தம் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்ததும், பயந்துபோன சண்முகராஜ், பைக்கை எடுத்துக்கிட்டுப் பறந்துட்டார். இசக்கியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயும் பலன் இல்லாமப் போயிருச்சு. வழியிலேயே அவர் உயிர் போயிடுச்சு'' என்றார்கள்  வேதனையுடன்!

என்னை டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டு, நீ நிம்மதியா இருக்கியா?

இசக்கியின் உடலில் ஒன்பது கத்திக் குத்துகள் விழுந்திருக் கின்றன. உயிர் இழந்த அவருக்கு மனைவியும், நான்கு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இசக்கியின் மனைவி கல்யாணி பிரபா, தாங்க முடியாத சோகத்தில் இருக்கவே, அவரது மகன் திருமலைக்குமாரிடம் பேசினோம்.

''எங்கப்பா யாருக்கு எந்தக் கெடுதலும் நினைக்காதவர். தினமும் எங்களிடம் ஏதாவது ஒரு நேரம்

என்னை டிரான்ஸ்ஃபர் பண்ணிட்டு, நீ நிம்மதியா இருக்கியா?

பேசிடுவார். போன வாரம் வீட்டுக்கு வந்தப்ப சோகமா இருந்தார். எங்கம்மா விசாரிச்சதுக்கு, 'ஸ்டேஷனில் கொஞ்சம் பிரச்னை. என்னை ஒருத்தர் தப்பாப் புரிஞ்சுக்கிட்டு அடிக்கடி சண்டைக்கு வர்றார்’னு சொன்னார். அது இந்த அளவுக்கு ஆகும்னு நாங்க நினைக்கவே இல்லை. எங்களுக்கு அவர் வீடு, இடம்னு எந்தச் சொத்தும் சேர்த்துவைக்கலை. அவர்தான் எங்களுக்குச் சொத்தாக இருந்தார். அவர் இல்லாத குடும்பத்தை நினைச்சுப் பார்க்கவே முடியலை. அவரைக் கொல்றதுக்கு எப்படித்தான் மனசு வந்துச்சோ?'' என்றபடி கதறி அழுதார்.

கொலை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிய சண்முகராஜ், பைக்கில் செங்கோட்டைக்குப் போய் இருக்கிறார். அங்கே பைக்கை நிறுத்திவிட்டு பஸ் ஏறி ராஜ பாளையம் போய் இருக்கிறார். அங்கே அவர் ஏ.டி.எம்-மில் அவர் பணம் எடுத்ததற்கான ஆதாரத்தை போலீஸார் கைப்பற்றி இருக்கிறார்கள். அவரைப் பிடிக்க தனிப் படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடல் நடக்கிறது.

இந்த சம்பவம் பற்றி நெல்லை எஸ்.பி-யான விஜயேந்திர பிதரியிடம் கேட்டதற்கு, ''சண்முகராஜ் மேல நிறைய புகார் வந்ததால், அவரை சுத்தமல்லி ஸ்டேஷனுக்கு மாறுதல் செஞ்சேன். அவரும் அங்கே போய் வேலையில் சேர்ந்துட்டார். சம்பவம் நடந்த தினத்தில் குடிச்சுட்டு சுரண்டைக்குப் போய் இசக்கியிடம் தகராறு செஞ்சு  கத்தியால் குத்திட்டார்.

தலைமறைவா இருக்கிற சண்முகராஜை கைது செஞ்சு சட்டத்தின் முன்பாக நிறுத்துவோம். உயிர் இழந்த இசக்கியின் குடும்பத்துக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்யத் தயாராக இருக்கோம்'' என்றார்.

போலீஸே குற்றவாளியாக மாறினால்... சாமான்ய மக்கள் எங்கே போய் நியாயம் கேட்பார்கள்?

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு