ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

என்னைப் பலி கொடுத்தாவது கோயிலை மீட்பேன்!

ராமகோபாலன் அதிரடி

##~##
என்னைப் பலி கொடுத்தாவது கோயிலை மீட்பேன்!

மாமல்லபுரம் ஸ்தல சயனப் பெருமாள் கோயிலைக் கையகப்படுத்த தொல் பொருள் துறை முடிவு எடுத்திருப்பதாக நாளிதழ்களில் விளம்பரம் வெளியான தினத்தில் இருந்தே போராட்டங்களை நடத்தி வருகின்றனர் மாமல்லபுரம் மக்கள் வாழ்வுரிமை மீட்புக் குழுவினர். 

கடந்த 31-ம் தேதி, கடற்கரைக் கோயிலில் விளக்கேற்றி வழிபடும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்து மாமல்லபுரம் வீதி களில் போஸ்டர்கள் ஒட்டப்படவே... ஏரியா முழுவதும் பரபரப்பு கிளம்பியது. 'கடற்கரைக் கோயிலுக்கு உள்ளே நுழைபவர்களைக் கைது செய்வோம்’ என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. இதற்காக 30-ம் தேதி நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவை செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. செல்லப்பா பிறப்பித்து இருந்தார்.

காலை 9 மணிக்கு, கங்கை கொண் டான் மண்டபம் அருகில் போராட்டக் குழு தலைவர் ஜனார்த்தனம், ஒருங் கிணைப்பாளர் மல்லை சத்யா போன்ற நிர்வாகிகளுடன் பொதுமக்கள் கூடினார்கள். போராட்டத்துக்குத் தலைமை ஏற்பதற்காக வந்திருந்தார், இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலன்.

என்னைப் பலி கொடுத்தாவது கோயிலை மீட்பேன்!

'தடை உத்தரவு இருக்கிறது. அதைமீறி கடற்கரைக் கோயிலுக்கு சென்றால் கைது செய்ய நேரிடும்’ என்று காவல்துறை யினர் எச்சரிக்கை செய்தனர். கடற்கரைக் கோயிலுக்குச் செல்வதால் தேவையற்ற பிரச்னை ஏற்படும் என்பதால், ஸ்தல சயனப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதற்கு போலீஸாரிடம் அனுமதி கேட்டனர் மீட்புக் குழுவினர். அவர்களும் அனுமதி அளிக்கவே, தொல்பொருள் துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி ஸ்தல சயனப் பெருமாள் கோயிலுக்குப் புறப்பட்டது குழு.

என்னைப் பலி கொடுத்தாவது கோயிலை மீட்பேன்!

தரிசனத்தை முடித்து வெளியே வந்த ராமகோபாலன், ''அறநிலையத் துறை மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். அரசாங்கம் மசூதிகளின் சொத்தை எடுக்கவில்லை; சர்ச்சுகளின் சொத்தை எடுக்கவில்லை. ஏன் இந்துக்களின் கோயிலை மட்டும் எடுக்கிறது? இந்துக் கோயிலில் உள்ள சொத்துக்கள் எவ் வளவு கொள்ளை போகிறது? மத்திய அரசின் தொல்லியல் துறையால் எடுக்கப்பட்ட பல கோயில்கள் பூட்டியே கிடக்கின்றன. மக்கள் யாரும் அங்கே சென்று தரிசனம் செய்ய முடியவில்லை. உயிரோட்டமுள்ள கோயில் என்றால், அங்கே வழிபாடு நடக்க வேண்டும். ஆறுகால பூஜை நடக்க வேண்டும். நித்திய அன்னதானம் நடக்க வேண்டும். இதுபோன்ற வழிபாடுகளைச் செய்தால்தான் அது கோயில். சும்மா பூட்டிக்கிடந்தால் அது கோயிலா? இந்த ஸ்தல சயனப் பெருமாள் கோயிலை அரசாங்கம் கையகப்படுத்த விட மாட்டோம். திருவண்ணாமலைக் கோயிலை தொல்லியல் துறையினர் எடுக்க முயன்றபோது அங்கே அனைத்துக் கட்சியினரும் சேர்ந்து ஒன்றாகப் போராட்டம் நடத்தி எதிர்த்தார்கள். அதனால் அந்த முயற்சியை அரசாங்கம் கைவிட்டது. மல்லை மக்களும் திருவண்ணாமலை மக்களுக்குச் சளைத்தவர்கள் அல்ல. கடற்கரை கோயிலுக்குச் செல்லக் கூடாது என்று அரசாங்கம் இன்று தடை விதித்திருக்கிறது. தடையை மீறுவது எங்கள் நோக்கம் அல்ல. அதன் மூலம் அரசாங்கத்துக்குச் சிக்கலை உருவாக்க விரும்பவில்லை. அயோத்தியில் யாரும் உள்ளே வரக்கூடாது என்று அரசாங்கம் சொன்னது. அங்கே என்ன நடந்தது? லட்சக்கணக்கானோர் போராட்டம் செய்தனர். ஏராளமான சாதுக்கள் இறந்து போனார்கள். அப்படி பலி கொடுத்துத்தான் அங்கே கோயிலை மீட்டனர். அதுபோல என்னைப் பலி கொடுத்துத்தான் இந்தக் கோயிலை மீட்க முடியும் என்றால், அதற்கும் தயார்!'' என்றார் உணர்ச்சிகரமாக.

நம்மிடம் பேசிய மல்லை சத்யா, 'போராட்டத்துக்கு வந்தால் கைது செய்வோம் என்று காவல்துறையினர் எச்சரித்ததையும் மீறி இங்கே பலர் வந்திருக்கின்றனர். கடற்கரைக் கோயில் தொல்பொருள் துறை வசம் வந்த பிறகு அங்கே வழிபாடு கிடையாது. வெறும் காட்சிப் பொருளாகவே கோயில் இருக்கிறது. அதுபோல இந்தக் கோயிலையும் மாற்ற நினைக்கிறார்கள். இந்த மண்ணில் வாழ்பவர்களை நாடோடிகளாக மாற்றும் முயற்சிதான், இந்த மத்தியத் தொல்பொருள் துறையின் சட்டம். இந்தச் சட்டத்தால் ஏற்கெனவே கடுமையான பாதிப்பில் இருக்கிறது மாமல்லபுரம். கோயிலை மீட்க எவ்வளவு தடைகள் வந்தாலும் தகர்த்து எறிவோம்!' என்றார் ஆவேசத்துடன்.

- பா.ஜெயவேல்