ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

ஃப்ளெக்ஸ் ரங்கசாமி பராக்...!

புதுவை கலக்கல்

##~##
ஃப்ளெக்ஸ் ரங்கசாமி பராக்...!

'பாயும் புலியே’, 'சீறும் சிறுத்தையே’, 'எழுச்சி சிங்கமே’, 'மின்னலே’, 'தானே புயலே...’- இவை எல்லாமே ஆகஸ்ட் 4-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை வாழ்த்தி வைக்கப்பட்டு உள்ள ஃப்ளெக்ஸ் வாசகங்கள்! 

புதிதாக புதுச்சேரிக்குள் வருபவர்கள் ஏதோ சர்க்கஸ் கூடாரத்துக்குள் நுழைந்து விட்டோமோ என்று அச்சப்படும் அளவுக்கு எங்கு பார்த் தாலும், முதல்வர் ரங்கசாமி சைக்கிள் ஓட்டுவது, ரேஸ் கார் ஓட்டுவது, கத்திச் சண்டை போடுவது, கர்ணம் அடிப்பது போன்ற ஃப்ளெக்ஸ் பேனர்கள் மிரட்டுகின்றன. ரங்கசாமியின் முகத்தை கோலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்களின் உடல்களோடு மார்ஃபிங் செய்தும் அதகளப்படுத்தி இருக்கிறார்கள் என்.ஆர்.காங்கிரஸார். இதில் அடிக்கோடிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ரங்கசாமியின் ஆட்சியில்தான், பேனர், கட்-அவுட் வைப்பதற்கான தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்தச் சட்டம் இன்னமும் அமலில் இருக்கிறது. அந்தச் சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும்தான் தொண்டர்களுக்குப் போட்டியாக கோதாவில் குதித்து இருக்கிறார்கள். கர்ணன், மகதீரா, நார்னியா, பிரின்ஸ் ஆஃப் பெர்ஷியா போன்ற கெட்-அப்களில் பேனர் வைத்தவர்கள், முருகப் பெருமானைப் போல சித்திரித்தும் பேனர் வைக்க... இந்து முன்னணி கொதித்து எழுந்தது. அதையடுத்து, அந்த பேனர் மட்டும் திடீரெனக் காணாமல் போனது.

ஃப்ளெக்ஸ் ரங்கசாமி பராக்...!
ஃப்ளெக்ஸ் ரங்கசாமி பராக்...!

புதுச்சேரி மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன், ''2009-ம் ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் திறந்தவெளி விளம்பரங்கள் வைக்க தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டது. யார் பேனர் வைத்தாலும் அதை அகற்ற வேண்டியது நகராட்சித் துறை, கொம்யூன் பஞ்சாயத்து, காவல்துறை மற்றும் வருவாய் துறையினரின் கடமை. ஆனால், இதை எதையுமே அந்தத் துறையினர் செய்வதே இல்லை. கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதல்வரிடம் இது பற்றிக் கேட்டபோது, 'தொண்டர்கள் வைக்கிறாங்க...’ என்று அவர்கள் மீது பழி போட்டார்.  'தொண்டர்களைக் கூட கட்டுப்படுத்த முடியாத நீங்கள்தான் முதல்வரா?’ என்று சட்டசபையிலே நான் கேட்டு, பெரும் வாக்குவாதமே ஏற்பட்டது. நிறைய ரவுடிகளும், தாதாக்களும் முதல்வருக்கு பேனர் வைத்துள்ளது அதிர்ச்சி தருகிறது. காவல் துறையினரும், புதுச்சேரி ஆட்சியரும் என்ன செய்கிறார்கள் என்றே தெரியவில்லை. முதல்வரை எதிர்த்துத் தங்கள் வேலையைச் செய்ய அனைவரும் பயப்படு கிறார்கள் என்பதே உண்மை'' என்று பொறிந்தார்.

ஃப்ளெக்ஸ் ரங்கசாமி பராக்...!
ஃப்ளெக்ஸ் ரங்கசாமி பராக்...!

புதுவை ஆட்சியர் தீபக் குமாரிடம் பேசினோம். ''நீண்ட விடுப்புக்குப் பிறகு இப்போதுதான் பணியில் சேர்ந்துள்ளேன். புதுச்சேரியில் வைக்கப் பட்டிருக்கும் பேனர்களை அகற்றுவதற்கு உத்தரவு போட்டுள்ளேன்'' என்றார் சுருக்கமாக.

முதல்வரின் பிறந்த நாள் முடிந்த பிறகு நிதானமாக அகற்றிக் கொள்ளலாம் என்று இருக்கிறார்களோ என்னவோ..?    

- நமது நிருபர்

படங்கள்: ஜெ.முருகன், ஆ.நந்தகுமார்