ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

இது தென்னை அரசியல்!

பரபர டி.ஆர்.பாலு... பாயும் பழனிமாணிக்கம்

##~##
இது தென்னை அரசியல்!

ஞ்சை அரசியல் வட்டாரத்தில் தி.மு.க. புள்ளிக ளான எஸ்.எஸ்.பழனி மாணிக்கத்துக்கும் டி.ஆர்.பாலுவுக்கும் இடையிலான மோதல் மிகப்பிரசித்தம். லேட்டஸ்ட்... தென்னை விவசாயிகளின் பிரச்னையை மையமாகக்கொண்ட இவர்களது அரசியல்தான்! 

தஞ்சை மாவட்டத்தின் கடைக்கோடிப் பகுதியான பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணிப் பகுதிகளில் தென்னை விவசாயம்தான் முக்கிய வாழ்வாதாரம். சமீபகாலமாக தேங்காய் விலை வரலாறு காணாத அளவுக்குச் சரிந்து வருகிறது. அதனால், தேங்காய்க்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தி தென்னை விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தை ஆளும் கட்சியான அ.தி.மு.க. பெரிதாகக் கண்டுகொள்ளாத நிலையில், அரசியல் லாபத்துக்காக தி.மு.க. புள்ளிகள் இருவரும் கையில் எடுத்துள்ளனர்.

இது தென்னை அரசியல்!

தென்னை விவசாயிகள் சங்கத் தலைவரான பழனிவேல், ''இந்தப்பகுதி முழுக்க தென்னை சார்ந்த தொழில்கள் அதிகமாக நடைபெறுகின்றன. ஆனால், தேங்காய் ஒன்று 2.50 ரூபாய்க்குத்தான்

இது தென்னை அரசியல்!

விற்கப்படுகிறது. இது, கடந்த 30 ஆண்டுகளுக்கு முந்தைய விலை. இன்றைய காலகட்டத்தில் செலவினங்கள் எகிறி இருக்கின்றன. அதனால், கடுமையான நஷ்டத்தில் தவிக்கிறோம்.

வெளிநாடுகளில் இருந்து தேங்காய்களை இறக்குமதி செய்ய அதிக வரி விதித்து இருக்கிறார்கள். அதனால், எண்ணெய் பிழியாத தேங்காய்களை புண்ணாக்கு என்ற பெயரில் பெரிய நிறுவனங்கள் இறக்குமதி செய்கின்றன. இதனாலும் பெரிய அளவில் நாங்கள் பாதிக்கப்படுகிறோம். உரித்த தேங்காய்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கொப்பரை விலையை உயர்த்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உதவிக் கரம் நீட்டினால்தான் இந்தப் பகுதி மக்கள் மீள முடியும். தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவும், மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கமும் எங்களுக்காகத் தனித்தனியே போராடி வருகின்றனர். அதனால் விரைவில் எங்களது பிரச்னைகளைத் தீர்க்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்'' என்று கேட்டுக்கொண்டார்.

கடந்த 25-ம் தேதி பழனிமாணிக்கம் தலைமையில் பேராவூரணியில் 'தென்னை விவசாயக் கருத்தரங்கு’ நடத்தப்பட்டது. இதில் தென்னை வளர்ச்சி வாரியத் தலைவர் ஜோஸ் கலந்துகொண்டார். அந்த விழாவில் பழனிமாணிக்கம், ''தென்னை விவசாயிகளைக் காப்பாற்றுவதற்கும் தேங்காய் விலை வீழ்ச்சியைத் தடுப்பதற்கும் மத்திய அரசின் விவசாயத் துறை அமைச்சர் சரத்பவார் மற்றும் செய லாளர் ஆகியோருடன் கலந்து பேசி தென்னை விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற உடனே நடவடிக்கை எடுப்பேன்'' என்று பேசி விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்தார்.

இது தென்னை அரசியல்!

இதைக் கேள்விப்பட்ட மறுநாளே மன்னார்குடியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் டி.ஆர்.பாலு. ''பட்டுக்கோட்டை, பேராவூரணி, திண்டுக்கல், தேனி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய் விலை சரிவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயத் துறை அமைச்சர் சரத்பவாரிடம் தெரிவித்து உள்ளேன். 'தென்னை விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக தேங்காய் கொள்முதல் செய்யவேண்டும். தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க வேண்டும். மானியம் அளிக்க வேண்டும்’ என்பதுபோன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை அவரிடம் விளக்கி உள்ளேன். வரும் 11-ம் தேதி என் முன்னிலையில் சென்னையில் நடைபெறும் விழாவில் தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை சரத்பவார் நேரடியாகக் கேட்டு அறிவார். நானே பிரச்னைகளைத் தீர்த்து வைப்பேன்'' என்று திடீர் பேட்டி அளித்தார்.  

தென்னை விவகாரத்தை இருவரும் தங்கள் கௌரவப் பிரச்னையாக எடுத்துக்கொண்டு செயல்படுவது குறித்துப் பேசும் தஞ்சை தி.மு.க. நிர்வாகிகள், ''வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியின் தி.மு.க. வேட்பாளர் யார் என்பதுதான் இந்தப் போட்டிக்கு காரணம். தொகுதியில் ஓட்டு வங்கியாகத் திகழும் தென்னை விவசாயிகளைக் கவரத்தான் இருவரும் போட்டி போடுகிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்பு வரை தன் சொந்த ஏரியாவான தஞ்சாவூரை டி.ஆர்.பாலு கண்டுகொண்டதே இல்லை. சொந்த ஊரான தளிக்கோட்டைக்கு அருகில் உள்ள வடசேரியில் சாராய ஃபேக்டரி ஆரம்பிக்க டி.ஆர்.பாலு எடுத்த முயற்சிக்கு மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

எனவே, சொந்த ஊரில் தனக்கு தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டியே தன் மகன் டி.ஆர்.பி.ராஜாவை மன்னார்குடியில் தி.மு.க. சார்பில் போட்டியிட வைத்து, வெற்றி பெறவைத்தார். அத்துடன் தஞ்சை தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்தவும் தொடங் கினார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பதே டி.ஆர்.பாலுவின் எண்ணம்.

இவரது நடவடிக்கைகள் இப்போது தஞ்சை தொகுதியைக் கையில் வைத்திருக்கும் பழனிமாணிக்கத்துக்குக் கடும் எரிச்சலைக் கிளப்பி உள்ளது. அதனால், அவரும் தன் பங்குக்குக் கிடுகிடுவென செயலில் இறங்கி, டி.ஆர்.பாலுவுக்கு இடைஞ்சல் கொடுக்க ஆரம்பித் துள்ளார்'' என்றனர்.

இருவரின் போட்டா போட்டியில் தென்னை விவசாயிகளின் பிரச்னை தீர்ந்தால் சந்தோஷம்!

- சி.சுரேஷ்

படங்கள்: கே.குணசீலன்