ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

எங்க ஏரியா உள்ளே வராதே!

வீரபாண்டி ஆறுமுகத்துக்கு மீண்டும் சிக்கல்!

##~##
எங்க ஏரியா உள்ளே வராதே!

சேலம் அங்கம்மாள் காலனி பிரச்னை சூறா வளிக் காற்றுபோலச் சுற்றிச் சுழன்று அடிக்கிறது. முன்னாள்  அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த பிறகும், இந்தப் பிரச்னை ஓயவில்லை. 

'இனி எப்போதும் வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மாவட்டத் துக்குள் கால் வைக்கக் கூடாது. அவர் சேலத்துக்குள் வந்தால், சட்டம் ஒழுங்கு சீரழிந்து விடும்’ என்று, அங்கம்மாள் காலனி மக்கள் சேலம் கலெக்டர் மகரபூஷணத் திடம் கடந்த 25-ம் தேதி மனு கொடுத்தனர். உடனே ஆவேசமான தி.மு.க-வினரும் பதிலுக்கு 27-ம் தேதி கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று மனு கொடுக்க முயலவே, ஏராளமானோர் கைது செய்யப் பட்டனர்.

கலெக்டர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டிருந்த போலீஸ் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, தி.மு.க.

எங்க ஏரியா உள்ளே வராதே!

வழக்கறிஞர் பிரிவினரும் மாநகராட்சி எதிர்க் கட்சித் தலைவி புவனேஸ்வரி, முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, வெண்நிலா சேகர் உள்ளிட்ட 20 பேர் கலெக்டரை சந்தித்தனர். 'வீரபாண்டியாரின் 60 வருட அரசியல் வாழ்க்கையைக் கொச்சைப்படுத்துகிறார்கள். தனியாருக்குச் சொந்தமான அந்த இடத்தில் இருந்து ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த வேண்டும்’ என்று பதில் மனு கொடுத்தனர். அதனால், இரண்டு பக்கமும் உஷ்ணம்.

கலெக்டரிடம் மனு கொடுத்த அங்கம்மாள் குடியிருப்புவாசியான கணேசனைச் சந்தித்தோம். ''வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக  இருந்தபோதும், இல்லாத போதும்... கூலிப் படையை ஏவி எங்களைப் படாதபாடுபடுத்துகிறார். இவர் எங்களுக்குச் செய்த அநியாயத்துக்குத் தண்டனையாகத்தான் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஆறுமுகத்துக்கு குண்டாஸ் கிடைத்தது. ஆனால், அவர் திருந்தவில்லை. எங்களை மீண்டும் அடித்துத் துவைத்து அந்த இடத்தை விட்டுத் துரத்துவதிலேயே குறியாக இருக்கிறார்.  

எங்க ஏரியா உள்ளே வராதே!

அவர் ஜெயிலில் இருக்கும்போது எப்படி எங்களைத் தாக்குவார்? என்று பொதுமக்கள் பலரும் நினைக்கலாம். அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தாலும் சிறையில் தன்னைப் பார்க்க வரும் ஆட்களிடம் சொல்லி ரவுடிகளிடம் பணத்தைக் கொடுத்து எங்கள் உயிருக்கு விலை பேசுகிறார். கடந்த வாரம், எங்கள் காலனியைச் சேர்ந்த சரவணன் கல்லாங்குத்தில் வேலைக்குப் போகும்போது அடையாளம் தெரியாத ஆட்களால் தாக்கப்பட்டுப் படுகாயம் அடைந்துள்ளார். இதுபோன்ற ஆபத்து இருப்பதால் எங்களால் வெளி வேலைக்குக்கூட போக முடியவில்லை.

ஜெயிலில் இருக்கும்போதே எங்களை மிரட்டுபவர், மீண்டும் ஊருக்குள் வந்தால் எங்களை அழித்தே விடுவார். அதனால், ஆறுமுகம் இனி சொந்த ஊருக்கு வரக் கூடாது. அவர் சேலம் மாவட்டத்துக்குள் வந்தால் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துவிடும். சேலம் மக்கள் அச்சம் இல்லாமல் நிம்​மதியாக வாழ வேண்டும் என்றால், சேலம் மாவட்டத்துக்குள் அவர் எப்போதுமே வர அனுமதிக்கக் கூடாது என்று கலெக்டரிடம் மனு கொடுத்துவிட்டு வந்தோம்'' என்றார்.

எங்க ஏரியா உள்ளே வராதே!

இதுபற்றி தி.மு.க-வின் மாநகரத் துணை அமைப்பாளரும் வழக்கறிஞருமான நரசிம்மனிடம் பேசினோம். ''அங்கம்மாள் காலனியின் நிலம் தங்களுடையது என்பதற்கு அவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறது? நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அதிகாரத் துஷ்பிரயோகம் செய்து ஒருவருடைய தனிப்பட்ட இடத்தில் அவர்களைக் குடியமர்த்த வைப்பதும் அரசு வரிப்பணத்தில் போலீஸ் பாதுகாப்பு கொடுப்பதும் நீதிமன்ற அவமதிப்புச் செயல். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இந்த ஜனநாயக நாட்டில் யாரும் கலெக்டரைச் சந்தித்து மனு கொடுக்க உரிமை இருக்கிறது. ஆனால், மனு கொடுக்கச் சென்றவர்களையும் தி.மு.க. கரை வேட்டியுடன் ரோட்டில் சென்றவர்களையும் கைது செய்து உள்ளே தள்ள காவல் துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தது?

அராஜகமாகச் செயல்படும் மாவட்டக் கலெக்டர் மீதும் காவல் துறை கமிஷனர் மீதும் வழக்குத் தொடுக்கப் போகிறேன். 60 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் சேலத்துக்கு ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம், கலெக்டர் அலுவலகம் போன்ற எத்தனையோ நல்ல காரியங்களைச் செய்த வீரபாண்டியாரை சேலம் மாவட்டத்துக்குள் வரக்கூடாது என்று சொல்வதற்கு அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? மூலப்பத்திரமே இல்லாத அவர்களை அந்த இடத்தைவிட்டு உடனே மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும்'' என்றார்.

சேலம் கலெக்டர் மகரபூஷணத்திடம் பேசினோம். ''கலெக்டர் என்பவர் பொதுவான நபர். இரண்டு பக்கத்தினரும் என்னிடம் மனு கொடுத்திருக்கிறார்கள். ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று நழுவினார்.

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்