ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

ஈமு பறக்கிறது... ஜாக்கிரதை!

அதிரும் கொங்கு மண்டலம்

##~##
ஈமு பறக்கிறது... ஜாக்கிரதை!

வ்வொரு சீஸனுக்கும் யாரிடமாவது பணத்தைப் பறிகொடுப்பதும் பிறகு பரிதவிப் பதும் நம் மக்களுக்குப் புதுசா என்ன? தேக்கு மர வளர்ப்பு மற்றும் நிதி நிறுவனங்கள் ஏற்படுத்திய காயங்களே தீராத நிலையில், பல்லைக் காட்டி இருக்கிறது ஈமு கோழிகள் வளர்ப்புத் திட்டம்! 

பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்த கே.ஜி. பிரைட் லைவ் ஸ்டாக் இந்தியா (பி) நிறுவனம் பணத்தைக் கொடுக்காமல் நாமம் போட்டு விடவே, திகிலில் உறைந்து கிடக்கின்றனர் அதில் முதலீடு செய்தவர்கள். பாதிக்கப்பட்ட திருப்பூர் மாவட் டம், கே.என்.பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வையாபுரி அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தே போனார்.

ஆனாலும் ஈமு கோழி, நாட்டுக்கோழி, அகர் மரம் எனத் தினுசு தினுசாகக் கிளம்பி, விவசாயிகளை வளைக்கும் வேலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில்தான், 'ஒப்பந்தப்

ஈமு பறக்கிறது... ஜாக்கிரதை!

பண்ணையம் லாபமா... நஷ்டமா...?' என்ற தலைப்பில் ஜூலை 28-ம் தேதி ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் முத்து மகாலில் 'பசுமை விகடன்' சார்பில் விழிப்பு உணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 750 பேர் வந்து இருந்தனர். வழக்கறிஞர்கள், கால்நடை வல்லுநர்கள், ஒப்பந்தப் பண்ணையத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

''ஈமு வளர்த்தால் இரண்டு வருடங்கள் கழித்து ஒரு கோழிக்கு அதிகபட்சம் 3,000 ரூபாய்க்கு மேல் வருமானம் கிடைக்க வாய்ப்பே இல்லை'' என்பதை அறிவியல்பூர்வமாக விளக்கினார் தமிழ்நாடு கால்நடைப் பல்கலைக்கழக விஞ்ஞானியும் தேனி உழவர் பயிற்சி மையத்தின் தலைவருமான டாக்டர் பீர்முகமது.

கருத்தரங்கில் பேசிய தடப்பள்ளி - அரக்கன் கோட்டை பாசன விவசாயிகள் சங்கத் தலைவரும், வழக்கறிஞருமான சுபி.தளபதி, ''இப்படி ஒருவர் கம்பெனி ஆரம்பித்தால், 'முதலிலேயே நாம் பணத்தைப் போட்டுவிடவேண்டும். அப்போதுதான் ஒரு வருஷம் கழித்து அவன் ஓடிவிட்டாலும், மாதாமாதம் அவன் நமக்கு சம்பளமாகக் கொடுத்த பணத்திலேயே நம்முடைய முதல் கிடைத்துவிடும்' என்று பலரும் நினைக்கிறார்கள். அதனால், ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் ரகசியமாகப் பணம் செலுத்துகிறார்கள். இப்படி நீங்கள் எல்லாம் வந்து பணத்தைக் கட்டவேண்டும் என்பதற்காகவே, ஒரே கம்பெனிக்காரன், புதிது புதிதாக வெவ்வேறு பெயர்களில் கம்பெனிகளைத் திறக்கிறான். ஓடும்போது ஒரே நேரத்தில் எல்லா கம்பெனிகளையும் மூடிவிட்டு மொத்தமாக நாமம் போட்டு விடுகிறான்.

ஈமு பறக்கிறது... ஜாக்கிரதை!

ஈமு ஒப்பந்த முறை வளர்ப்புத் திட்டமே ஒரு ஏமாற்றுத் திட்டம் என்பதை மூன்று ஆண்டுகளாக விவசாயிகளிடம் நான் பிரசாரம் செய்துவருகிறேன். இதற்காகவே என் மீது மூன்று பொய் வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்கள் ஈமு கம்பெனிக்காரர்கள். இப்போது வருத்தப்பட்டு என்ன பலன்?'' என்று விரக்தியோடு சொன்னார்.

ஈமு பண்ணையில் சுமார் எட்டு லட்ச ரூபாயைக் கட்டிவிட்டு, இப்போது தவிக்கும் திருப்பூர் கே.என்.பாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் பேச்சு கண் கலங்கவைத்தது. ''எங்க கிராமத்தில் இருந்து மட்டும் சுமார் 1.5 கோடி ரூபாயை கே.ஜி. ஈமு ஃபார்ம்ல கட்டி ஏமாந்து நிக்கிறோம். ஈமுங்கிற பேர்ல விவசாயிகளை ஏமாத்திப் பிழைக்கிற அத்தனை பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் போடணும். எங்க ஊர் விவசாயி, அதிர்ச்சியில இறந்துட்டார். அதனால் கே.ஜி. ஈமு கம்பெனியைச் சேர்ந்த கார்த்திக் சங்கர், அவரோட மனைவி காயத்ரி ஆகியோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யணும். இந்த கார்த்திக் சங்கருக்கு உரிய தண்டனை வாங்கித் தராம நாங்க ஓய மாட்டோம்.

எங்களை மாதிரி இனி யாரும் ஏமாந்துடாதீங்க. இந்த விஷயத்தை உங்க சொந்தக்காரங்க... நண்பர்கள்னு எல்லாருக்கும் தெரியப்படுத்துங்க. இதுக்கு மேலேயும் விவசாயிங்க யாரும் ஏமாந்துடக் கூடாது'' என்றார் சுப்பிரமணியம்.

முதலீடுகள் குறித்துப் பேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ், ''உங்களுக்கு ஈமு கம்பெனிகள் கொடுத்திருக்கும் 20 ரூபாய் ஒப்பந்தப் பத்திரத்தை வைத்து சட்டப்படி எதையும் செய்ய முடியாது. இந்த ஒப்பந்தமே செல்லாது. இப்படி எல்லாம் பணம் கொடுப்பதற்கு இந்த நிறுவனங்களுக்கு அதிகாரமே இல்லை எனும்போது, நீதிமன்றம் இந்தப் பத்திரங்களை ஏற்காது. 'எனக்குச் சட்டம் தெரியாது... ஏமாந்து விட்டேன்' என்று சொல்வதையும் நீதிமன்றங்கள் ஒரு போதும் ஏற்காது. நீங்கள்தான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'’ என்று அறிவுறுத்தினார்.

கே.ஜி. ஈமு ஃபார்ம்ஸ் மீது கூறப்பட்ட குற்றச் சாட்டுகள் குறித்துப் பேசுவதற்காக கார்த்திக் சங்கரைத் தொடர்பு கொண்டோம். அவருக்குப் பதிலாக பேசிய நிர்வாகி ஒருவர், ''எங்கள் முதலீட்டாளர்கள் ஒட்டுமொத்தமாக வந்து பணம் கேட்டதால் கொடுக்க முடியாத சூழலில் இருக்கிறோம். இப்போது, கார்த்திக் சங்கர் முன் ஜாமீன் கேட்டு மனு செய்திருக்கிறார். அவருக்கு ஜாமீன் கிடைத்தவுடன்... அனைத்து முதலீட்டாளர்களுக்கும் பணம் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும்'' என்றார்.

பார்க்கலாம்.

- ஆர். குமரேசன்

படம்: த.சித்தார்த்