ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்!''

பதற்றம் தணியாத மறுகால்குறிச்சி

##~##
கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்!''

நாங்குநேரி அருகே உள்ள மறுகால்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த வானமாமலை, என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்​பட்டு ஒரு வாரம் ஆன பிறகும் அங்கு சூடு தணி​யவில்லை. இந்தச் சம்பவத்துக்குக் காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்​பட்டார். பலியானவரின் குடும்பத்துக்கு அரசு சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நிதிஉதவி வழங்கப்பட்டது. 

பிறகும் என்ன பிரச்னை?

இந்த என்கவுன்ட்டரைக் கண்டித்த ம.தி.மு.க பொதுச்செயலாளரான வைகோ, 'போலீஸாரின் அராஜகத்தைக் கண்டித்து ஜூலை 30-ம் தேதி அனைத்துக் கட்சி சார்பில் கண்டன உண்ணாவிரதம் நடத்தப்படும்’ என்று அறிவித்தார். உடனே, தங்கள் பங்குக்கு தி.மு.க-வும் ஆர்வம் காட்டியது. நெல்லை மாவட்ட தி.மு.க. செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் கட்சியின் ஒரு கோஷ்டியினர் சென்று வானமாமலை குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் 50 ஆயிரம் ரூபாய் நிதிஉதவி அளித்தனர். இதைக் கேள்விப்பட்டதும், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் சென்ற மற்றொரு தி.மு.க. கோஷ்டியினர் தங்கள் பங்குக்கு 30 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கினர்.

கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்!''

இந்த கோஷ்டிகளில் சேராத நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயரான விஸ்வநாத பாண்டியன், தனியாகச் சென்று 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார். அதுவும், வைகோ உண்ணாவிரதம் நடத்திய மேடைக்குச் சென்று, அவர் மூலமாக வானமாமலை குடும்பத்துக்கு நிதி வழங்கியதால் தி.மு.க-வினரிடம் பரபரப்பு கிளம்பியது.

வைகோ ஏற்பாட்டில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டக் குழுவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள் இடிந்தகரையில் இருந்து நான்கைந்து வேன்களில் வந்து கலந்து கொண்டனர். உயிர் இழந்த வானமாமலையின் மனைவி மஞ்சு தனது இரண்டரை வயது மகள் வனிதா, ஒன்றரை வயது மகன் நம்பிராஜ் ஆகியோருடன் வந்து உண்ணாவிரதப் பந்தலில் சோகமாக அமர்ந்திருந்தார்.

கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்!''

உண்ணாவிரதத்தில் பங்கேற்ற இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லகண்ணு, ''ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக இந்தப் போராட் டம் நடக்கிறது. கிராமத்தில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்த இந்த மக்களுக்கு இடையே, தேன் கூட்டைக் கலைப்பதுபோல போலீஸார் பாதகச் செயலை அரங்கேற்றி விட்டனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரியைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்'' என்றார் காட்டமாக.

உணர்ச்சிமயமான நிலையில் வைகோ பேசுகையில், ''எந்தத் தவறும் செய்யாத அப்பாவி இளைஞர் வானமாமலையை ஈவு இரக்கம் இல்லாமல் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் சுட்டுக் கொன்று இருக்கிறார். அவரை பணிநீக்கம் செய்தால் மட்டும் போதாது. அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். இந்தச் சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு உத்தரவிட்டு தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் ஆக்ரோஷமாக.

கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்!''

வானமாமலை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் அரசியல் ஆகிப்போனதால் அனைத்து அரசியல் கட்சியினரும் மறுகால்குறிச்சி கிராமத்துக்கு செல்லத் தொடங்கி விட்டனர். பி.ஜே.பி. மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது ஆதரவாளர்களுடன் சென்று வானமாமலை குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பசும்பொன் தேசியக் கழகத் தலைவர் ஜோதி முத்துராமலிங்கம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார். இத்தனை நாட்களும் வெளியே எட்டிப் பார்க்காத நடிகர் கார்த்திக் கூட, மறுகால்குறிச்சி கிராமத்துக்கு வந்தார். காரில் இருந்து இறங்கி ஆறுதல் தெரிவிப்பதற்கு அவரால் வானமாமலை வீட்டுக்குள் செல்லவே முடியாத அளவுக்குக் கடுமையான கூட்டம். கதறி அழுத வானமாமலையின் மனைவி மஞ்சுவுக்கு ஆறுதல் தெரிவித்த கார்த்திக், 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.

பின்னர், மஞ்சுவின் கையில் இருந்த குழந்தையைத் தூக்கிய நேரத்தில், அந்தக் குழந்தை வானமாமலை படத்தைப் பார்த்து, 'அப்பா... அப்பா...’ என்று அரற்றியது. உடனே, கண்கள் கலங்கிய நிலையில் கார்த்திக், அந்தக் குழந்தையை மார்போடு அணைத்தபடி வெளியே வந்தார்.

பின்னர் கிராமத்தினர் ஏற்பாடு செய்திருந்த டிராக்டரில் ஏறி நின்று பேசிய அவர், 'நான் இந்த ஊருக்குள் வராமல் இருக்க பல சூழ்ச்சிகளைச் செய்தார்கள். அனைத்தையும் முறியடித்து இங்கே வந்திருக்கிறேன். நான் வருவதைத் தெரிந்துகொண்ட முதல்வர் மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி இருக்கிறார். இது போதாது. ஒரு உயிரின் மதிப்பு மூன்று லட்சம்தானா? உயிரிழந்த வானமாமலையின் குழந்தைகளுக்கு தலா 10 லட்சமும் அவரது மனைவிக்கு 25 லட்சமும் அரசு வேலையும் கொடுக்கணும். இந்த கோரிக்கை நிறைவேறாமல் இந்த மண்ணை விட்டுப் போக மாட்டேன்'' என்றவர் அடுத்த நிமிடமே, 'நான் இது பற்றி விரிவாக நாளைக்கு மதுரையில் வைத்து பிரஸ்மீட் கொடுக்கிறேன்’ என்று காரில் ஏறிப் பறந்தார்.

வெறும் சஸ்பெண்ட் நடவடிக்கையுடன் இன்ஸ்பெக்டர் மீதான நடவடிக்கை முடியக் கூடாது என்பதில் அரசியல் கட்சிகள் முடிவோடு இருக்கின்றன!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்