Published:Updated:

''தினமும் மாலைமுதல் இரவுவரை...''

அடடடே செந்தில்குமார்

''தினமும் மாலைமுதல் இரவுவரை...''

அடடடே செந்தில்குமார்

Published:Updated:
##~##
''தினமும் மாலைமுதல் இரவுவரை...''

ட்டமன்றத்தில் நாக்கைத் துருத்தி கையை உயர்த்திப் பேசியதற்காக சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளான பிறகு, 'மக்களைத் தேடி’ தன் கட்சி வெற்றி பெற்ற 29 தொகுதிகளுக்கும் விசிட் அடித்து வருகிறார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். இது பழசு. திருவெறும்பூர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் தொகுதி விசிட்.. புதுசு! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அரசியல்னா என்னன்னே தெரியாத காலத்துல பல பிரச்னைகளை எப்படித் தீர்க்குறதுன்னே தெரியாம நான் கஷ்டப்பட்டு இருக்கேன். எங்க தொகுதி எம்.எல்.ஏ-வை நான் பார்த்ததே கிடை யாது. இப்போ நான் எம்.எல்.ஏ-வாகி இருக்கேன். நான் அப்போ கஷ்டப்பட்ட மாதிரி என் தொகுதி மக்கள் யாரும் கஷ்டப்படக் கூடாது. யாரும் என்னை திட்டக் கூடாது!'' என்று சென்டிமென்ட் ஃபீலிங் காட்டி தன்னுடைய திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தெருத் தெருவாக நடந்து சென்று மக்களை சந்தித்து வருகிறார் செந்தில்குமார்.

''தினமும் மாலைமுதல் இரவுவரை...''

காட்டூரில் பாரிநகர் என்ற ஏரியா. செந்தில்குமார் சென்றபோது மின் விளக்குகள் அழுது வடிந்து கொண்டு இருந்தது. அதுபற்றி விசாரிக்க, ''இந்த ஏரியாவுல ராத்திரி, பகல் எந்த நேரமும் லோ வோல்டேஜ்தானுங்க. அது சம்பந்தமாத்தான் உங்களுக்கு மனு கொடுக்கலாம்னு இருக்கோம்'' என்று ஏரியாவாசிகள் சொல்லி இருக்கிறார்கள். அது தொடர்பாக மின் வாரியத்தில் தொடர்ந்து பேசி, இப்போது புது டிரான்ஸ்ஃபார்மருக்கு நிதி ஒதுக்கப்பட்டு விட்டது.

''தினமும் மாலைமுதல் இரவுவரை...''

கல்கண்டார்கோட்டை என்ற ஊருக்குச் சென்ற போது, ''பஸ் ஸ்டாண்ட் அருகே ஒயின் ஷாப் இருக்கு. அதனால், பெண்களால் நிம்மதியாக நடமாட முடியவில்லை. அந்தக் கடையை இங்கே இருந்து எடுத்தால்தான் எங்களுக்கு நிம்மதி'' என்று பொதுமக்கள் மனு கொடுத்தார்கள். அது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் பேசியும் பலன் ஏதும் இல்லையாம். அதனால். மனுநீதி நாளன்று மக்களோடு மக்களாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க இருக்கிறார் செந்தில்குமார்.

ஒவ்வொரு நாளும் இந்தந்த வார்டு, இந்தந்தத் தெரு என்று அட்டவணை போட்டுக்கொள்பவர், குறிப் பிட்ட ஏரியாவில் தன் கட்சியினரோடு ஆஜராகி விடுகிறார். மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மனுக்கள் வாங்குகிறார்.

வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டியோடு கூட்டமாக ஆட்கள் வருவதைப் பார்க்கும் பொதுஜனம், 'திரும்பவுமா எலெக்ஷன் வருது?’ 'நம்ம எம்.எல்.ஏ-வா நம்மளைத் தேடி வர்றாரு?’ என்று ஆச்சர்யம் காட்டுகிறார்கள்.

செந்தில்குமாரைச் சந்தித்தோம். ''இதுல என்னங்க ஆச்சர்யம் இருக்கு? நான் எம்.எல்.ஏ-வா ஆனது இதுக்காகத்தானே? சாதாரண ஆளா, அரசியல்னா என்னன்னே தெரியாத எனக்கு, நம்ம கேப்டன் வாய்ப்பு கொடுத்து எம்.எல்.ஏ. ஆக்கி இருக்கார். சாதாரண குடும்பத்துல இருந்து வந்ததால அடிமட்ட மக்களோட பிரச்னைகள் என்னன்னு அனுபவ பூர்வமா எனக்கு தெரியும். அதனால நான் ஜெயிப்பதற்கு முன்னாடியே இப்படி எல்லாம் தொகுதி மக்களுக்கு செய்யணும்னு பிளான் பண்ணி வெச்சிருந்தேன். அதைத்தான் இப்போ செயல் படுத்துறேன்.

ஒன்றரை மாதங்களா மக்களைச் சந்திச்சுக்கிட்டு இருக்கேன். இதுவரைக்கும் 700 மனுக்களுக்கும் மேலே வந்து இருக்கு. எல்லா மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறைக்கு நானே நேரடியா கொண்டுபோய் கொடுத்து, பிரச்னையை தீர்க்க வலியுறுத்துறேன். மனு வாங்கிய ஏரியாவுக்கு திரும்பவும் ஒரு மாசத்துக்குப் பிறகு போய், குறிப்பிட்ட பிரச்னை தீர்ந்ததானு விசாரிக்கிறோம். தீரலைன்னா திரும்பவும் சம்பந்தப்பட்ட துறையில பேசி சீக்கிரமா முடிக்க அறிவுறுத்துறோம்.

ரேஷன் கார்டு, சாதிச் சான்றிதழ்னு அத்தியா வசிய தேவைகளைக் கூட மக்கள் பெற முடியாம கஷ்டப்படுறாங்க. அதுக்காக உதவியாளர் ஒருவரை என் அலுவலகத்தில் நியமிச்சு இருக்கேன். எந்தத் தேவையாக இருந்தாலும், அவரைத் தொடர்புகொண்டாலே போதும். தேவையானதை செஞ்சு கொடுத்துடுவார். ஆனா என்ன, இந்த அரசு அதிகாரிகள்தான் எந்த விஷயமா இருந்தாலும் லேட் பண்றாங்க'' என்றார் செந்தில்குமார்.

தொகுதி மக்களிடம் விசாரித்தோம். ''எலெக்ஷன் அப்ப மட்டும்தான் எம்.எல்.ஏ. நம்மைத் தேடி வருவார். ஆனா, இவரு எம்.எல்.ஏ. ஆனதுக்கு அப்புறம் எங்க வீட்டுக்கே வந்து மனு வாங்குறது ரொம்பவும் சந்தோஷமா இருக்குங்க. எங்க தேவையை அவரால செஞ்சு கொடுக்க முடியலைன்னாலும் பரவாயில்லை. எங்களைப் பார்க்க ஏரியாவுக்கு வர்றாரே... அது போதாதா?'' என்று உருகுகிறார்கள். ''பிரச்னை என்று போனால், அத்தியாவசியத் தேவைகளுக்கு தனது சொந்த பணத்தில் இருந்தும் செலவு செய்கிறார்'' என்றும் பெருமையோடு சொல்கிறார்கள்.

''செந்தண்ணீர்புரம் என்ற ஏரியாவில பஸ் ஸ்டாப்ல பஸ்சை நிறுத்துவது இல்லைன்னு மனு கொடுத்தாங்க. அது சம்பந்தமா போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் முறையிட்டேன். ஆனா, ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. அதனால அது சம்பந்தமா கலெக்டரைப் பார்க்கணும்'' என்றபடி கிளம்புகிறார் செந்தில்குமார்.

கலக்குங்க!

- ஆ.அலெக்ஸ் பாண்டியன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism