Published:Updated:

செய்து முடித்த வேலைகளுக்கு டெண்டர்!

இது சிவகங்கை ஸ்டைல்

செய்து முடித்த வேலைகளுக்கு டெண்டர்!

இது சிவகங்கை ஸ்டைல்

Published:Updated:
##~##
செய்து முடித்த வேலைகளுக்கு டெண்டர்!

'ஹை கோர்ட்டில் விசாரணை வந்தால் பிரச்னை வரும் என்று கருதி, ஏற்கெனவே நடப்பட்ட 13 மின் கம்பங்களை இரவோடு இரவாக அகற்றிவிட்டனராம். சிவகங்கை நகராட்சியில் மட்டுமல்ல... அ.தி.மு.க. ஆட்சியில் மற்ற நகராட்சிகளிலும் இதுதானே நடந்து கொண்டிருக்கிறது’ முன்னாள் முதல்வர் கருணாநிதியே அறிக்கைவிடும் அளவுக்கு, சிவகங்கை நகராட்சியில் கூத்து நடந்திருக்கிறது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிவகங்கை நகராட்சியில் ரோடுகள், குடிநீர்த் தொட்டிகள், தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட 30 பணிகளுக்கு ஜூலை 27-ம் தேதி டெண்டர் திறக்கப்பட்டது. இதில் மூன்று பணிகள் முன்கூட்டியே முடிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதற்கு ஏன் டெண்டர் வைத்தார்கள் என்று குழம்பிய நகராட்சியின் முன்னாள் கான்ட்ராக்டரும் முன்னாள் கவுன்சிலருமான சோணைமுத்து உடனே ஆதாரங்களுடன் கலெக்டர் மற்றும் நகராட்சிகளின் மண்டல இயக்கு நருக்கு புகார்களைத் தட்டிவிட்டார். அதற்கு எந்த ரெஸ் பான்ஸும் இல்லை. அதனால் ஜூலை 24-ம் தேதி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். அதற்கு நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டதால் மிரண்டுபோன அதிகாரிகள் தடயங்களை அழிக்கும் முயற்சியில் பம்பரமாய் சுழன்றிருக்கிறார்கள். அந்த நடவடிக்கைதான் கருணாநிதி வரைக்கும் போய்விட்டது.

செய்து முடித்த வேலைகளுக்கு டெண்டர்!
செய்து முடித்த வேலைகளுக்கு டெண்டர்!

சோணைமுத்துவிடம் பேசினோம். ''சிவகங்கை நகராட்சியில் ஆறு மாதங்களுக்கு முன், மூணு கோடியே முப்பது லட்சத்துக்கு ரோடுகள், சாக்கடைகள் அமைக்கிறதுக்கு டெண்டர் விட்டாங்க. கமிஷன் மட்டுமே 30 லட்சத்துக்கு மேல கைமாறியதால் எந்த வேலையும் தரமா நடக்கலை. இது சம்பந்தமா விஜிலென்ஸ் வரைக்கும் ஆதாரத்தோட புகார் அனுப்பினேன். இந்த நிலையில, 27-ம் தேதி விடப்பட்ட டெண்டர்ல மூணு வேலைகளை ஏற்கெனவே செஞ்சுமுடிச்சுட்டாங்க. மஜீத் ரோட்டில் இரண்டு குறுக்குத் தெருக்களுக்கு சிமென்ட் ரோடு போடுறதுக்கு ஒரு லட்சத்துக்கு டெண்டர் விட்டு மூணு மாதங்களுக்கு முந்தியே வேலை முடிஞ்சிருச்சு. அரண்மனை வாசல்ல இருந்து தாலுக்கா ஆபீஸ் வரை உள்ள ரோட்டில் பழுதான இடங்களை பேட்ச் வொர்க் பாக்குறதுக்காக 10 லட்சத்துக்கு டெண்டர்விட்டு அந்த வேலையும் முடிஞ்சிருச்சு. ஆனா, 27-ம் தேதி டெண்டர்ல இந்த ரெண்டு வேலைகளும் மறுபடியும் இருந்துச்சு.

செய்து முடித்த வேலைகளுக்கு டெண்டர்!

மதுரை - தொண்டி ரோட்டின் நடுவில் இரண்டு பக்கமும் மின் விளக்குகள் அமைக்க ரெண்டு மாசத்துக்கு முந்தி மதுரை கம்பெனிக்கு 40 லட்சத்துக்கு டெண்டர் குடுத்து வேலையை

செய்து முடித்த வேலைகளுக்கு டெண்டர்!

முடிச்சிட்டாங்க. அதுல விடுபட்டுப்போன ஆதம்பள்ளிவாசல் - ரயில்வே கேட் வரையில் 10 லட்சத்துல மின் விளக்குகள் அமைக்கிற வேலையும் டெண்டர்ல இருந்துச்சு. இதுல என்ன வேடிக்கைன்னா, டெண்டர் தேதிக்கு முன்னாடியே இந்த மின் விளக்குகளையும் அமைச்சிட்டாங்க. இந்த மூன்று விஷயங்களையும்தான் ஆதாரத்துடன் கோர்ட்டுக்குக் கொண்டுபோனேன். 25-ம் தேதி, நோட்டீஸ் அனுப்ப கோர்ட் உத்தரவிட்ட பின்னாடியும் 27-ம் தேதி திட்டமிட்டபடி டெண்டரைவிட்டு, 30-ம் தேதி நகர் மன்றக் கூட்டத்தில் அதுக்கு அவசர அவசரமா ஒப்புதலும் வாங்கிட்டாங்க.

'அந்த மூணு வேலைகளுக்கான டெண்டரை நிறுத்திவைக்கணும்’னு மறுபடியும் 1-ம் தேதி கோர்ட்டுல மனு போட்டேன். கோர்ட்டும் நிறுத்தி வெச்சிருச்சு. அன்னைக்கே ராத்திரியோட ராத்திரியா, டெண்டருக்கு முந்தியே நடப்பட்ட 13 மின் கம்பங்களை அப்புறப்படுத்திட்டாங்க. ஆனா, ரோடு வேலைகளை அவங்களால் மறைக்க முடியலை. கருணாநிதி அறிக்கைவிடவும் சென்னையில் இருந்து அதிகாரிகள் வந்து விசாரிச்சிட்டுப் போயிருக்காங்க. இதேபோல் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்ட 23 வேலைகளின் தரத்தையும் பரிசோதித்து நடவடிக்கை எடுக்கணும்னு கோர்ட்டில் வழக்குத் தாக்கல் செய்யப்போறேன்'' என்றார்.

இந்தப் புகார்கள் தொடர்பாக நம்மிடம் பொதுப்படையாகப் பேசிய சிவகங்கை முக்கியப் பிரமுகர்கள் சிலர், ''சேர்மனாக இருக்கிற அர்ச்சுனன் சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவர். அவங்க கட்சிக்கு ஒரு கவுன்சிலர்கூட இல்லை. அதனால் அ.தி.மு.க. கவுன்சிலர்களை நம்பித்தான் அவர் வண்டி ஓட்டுறார். அதனால், அவங்க செய்யுற தப்புக்கெல்லாம் அர்ச்சுனன் ஜாமீன் போடவேண்டி இருக்கு'' என்கிறார்கள்.

இந்தப் புகார் தொடர் பாக கடந்த 4-ம் தேதி சிவகங்கை நகராட்சிக்கு வந்த நகராட்சி நிர்வாக இயக்குநர் அலுவலகக் கண்காணிப்பு பொறியாளர் பூபதி விடிய விடிய விசாரணை நடத்திவிட்டுப் போயிருக்கிறார். இதையடுத்து, அ.தி.மு.க-வைச் சேர்ந்த வைஸ் சேர்மன் சேகரின் துணையோடு சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குனரை சந்தித்து விளக்கம் அளித்துவிட்டு வந்திருக்கிறார் சேர்மன் அர்ச்சுனன். அவரிடம் பேசினோம். ''அந்த சோணைமுத்து தொடர்ந்து இப்படித்தான் ஏதாச்சும் பொல்லாப்பு கிளப்பிட்டே இருப்பார். கருணாநிதிக்கும் தவறான தகவல் போயிருக்கிறது. வாரச் சந்தை வீதியில் ஒரு பகுதி மட்டுமே பேட்ச் ஒர்க் நடந்திருக்கிறது எஞ்சிய ஏரியாவுக்குத்தான் டெண்டர் வைத்தோம். மின் விளக்குகளைப் பொறுத்தவரை ஏற்கெனவே டெண்டர் எடுத்தவருக்குத்தான் இந்த டெண்டரையும் கொடுத்தோம். அதனால் அவர், பழைய வேலையோட சேர்த்து இதையும் பாத்துட்டார் போலிருக்கு. கோர்ட்டு கேஸுன்னதும் பயந்து, நட்ட மின் கம்பங்களை திரும்பவும் எடுத்துட்டார். அதுதான் இப்ப பிரச்னையாப் போச்சு'' என்றார் அர்ச்சுனன். 'டெண்டரே திறக்காதபோது தனக்குத் தான் டெண்டர் கிடைக்கும்னு அவருக்கு எப்படித் தெரியும்?’ என்ற கேள்விக்கு அர்ச்சுனனிடம் நேரடி யான பதில் இல்லை.

நகராட்சி ஆணையர் சுப்பிரமணியனோ, ''செய்ய வேண்டிய வேலைக்குத்தான் டெண்டர் விட்டோம். கோர்ட் உத்தரவு வந்ததால், மூணு வேலைகளை மட்டும் நிறுத்திவெச்சிருக்கோம். இனி கோர்ட்தான் முடிவு சொல்லணும்'' என்கிறார்.

சிவகங்கை மக்கள் குமுறுகிறார்கள்!

- குள.சண்முகசுந்தரம்

  படங்கள்: எஸ்.சாய் தர்மராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism