Published:Updated:

கிருஷ்ணவேணி வந்தாச்சு!

பிளாஸ்டிக் பையில் வந்த தேவதை!

பிரீமியம் ஸ்டோரி
##~##
கிருஷ்ணவேணி வந்தாச்சு!

'முள்ளு மேல சேலை பட்டாலும் சேலை மேல முள்ளு பட்டாலும் பாதிப்பு சேலைக்குத்தான்’ - பழைய உதாரணமாக இருந்தாலும் சித்ராவின் வாழ்க்கையைப் பற்றிக் கேட்கும்போது, அதுதான் சட்டென ஞாபகத்துக்கு வருகிறது. 

''என் பேரு சித்ரா. எனக்கு 34 வயசு. என் சொந்த ஊரு உளுந்தூர்பேட்டை. 19 வயசிலேயே எனக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சுட்டாங்க. மூணு வருஷம் கழிச்சு பொம்பளப் புள்ள பொறந்துச்சு. அதுக்குப் பொறவு எனக்கும் என் வூட்டுக்காரருக்கும் சரியா வரலை. ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டோம். புள்ளய அவர்கிட்ட கொடுத்துட்டேன். அவருக்கு வேற கல்யாணம் ஆகிடுச்சு. எனக்கும் வீட்ல வேற மாப்பிள்ள பார்த்தாங்க. ஆனா, எதுவுமே சரியா அமையலை. 12 வருஷமா அம்மா வீட்லதான் இருந்தேன். கஷ்டப்படுற குடும்பம், என்னையும் சேர்த்து சுமக்க வேண்டியதாப் போச்சு.

கிருஷ்ணவேணி வந்தாச்சு!

இடையில எனக்கும் இன்னொருத்தருக்கும் தொடர்பு உண்டாச்சு. அதுல நான் கர்ப்பமாயிட்டேன். ஆனா, அவரு என்னை விட்டுட்டுப் போயிட்டார். வீட்டுல யாருக்கும் தெரியாம கர்ப்பத்தை மறைக்க

கிருஷ்ணவேணி வந்தாச்சு!

ஆரம்பிச்சேன். வாந்தி வந்தப்ப சாப்பாடு ஒத்துக்கலைன்னு பொய் சொன்னேன். நாளாக நாளாக வயிறு பெரிசாச்சு. கேட்டவங்ககிட்ட தொப்பை விழுந்திடுச்சுன்னு சொன்னேன். கொழந்தைக்காக எந்த டாக்டரையும் பார்க்கலை. மருந்து, மாத்திரையும் எடுத்துக்கலை. அப்படியே வளரட்டும்னு விட்டுட்டேன்.

போன 7-ம் தேதி நைட்டு திடீர்னு வலி வந்தது. புள்ளை பொறக்குறது யாருக்கும் தெரியக் கூடாதுனு மொட்டை மாடிக்குப் போயிட்டேன். வலியைப் பொறுத்துக்கிட்டேன். நைட்டு 10 மணிக்கு கொழந்தை பொறந்துச்சு. மூணாவது மாடிங்கிறதால யாருக்கும் சத்தம் கேட்கலை. ஏற்கெனவே ஒரு பிளாஸ்டிக் பையில என்னோட துணியை எடுத்து வெச்சிருந்தேன். அந்தப் பையில குழந்தையைப் படுக்கவெச்சு, மூச்சு மட்டும் விடுறாப்ல மத்த பகுதி எல்லாம் துணியால மூடிட்டேன். நைட்டு 12 மணிக்கு யாருக்கும் தெரியாம வீட்டுல இருந்து கொழந்தையைத் தூக்கிகிட்டு பஸ் ஸ்டாண்டுக்குப் போனேன். ஆனா, பஸ் எதுவும் இல்லை. அங்கேயே யாருக்கும் தெரியாம மறைவா உட்கார்ந்திருந்தேன். காலையில 4 மணிக்கு ஒரு பஸ் வந்துச்சு. அதுல ஏறி விழுப்புரம் வந்தேன்.

அங்க  இருந்து செங்கல் பட்டு வரைக்கும் எக்ஸ்பிரஸ் ட்ரெயின்ல வந்தேன். அப்படியே தாம்பரத்துக்கு லோக்கல் ட்ரெயின்ல போய்க்கிட்டு இருந்தேன். இடையில குழந்தை அழுறப்ப பால் கொடுப்பேன். அது தூங்குனதும் மறுபடியும் பிளாஸ்டிக் பைக்குள்ள வெச்சிடுவேன். அப்படி வைக்குறப்பதான் ட்ரெயின்ல இருக்கிறவங்க பார்த்துட்டு கொழந்தைய பைக்குள்ள ஏன் வைக்கிறேனு கேட்டாங்க. எனக்கு கை, காலெல்லாம் வலிக்குது. நைட்டுல இருந்து எப்படித் தூக்கிவெச்சுக்க முடியும்?னு சொன்னேன். ஆனா, அவங்களுக்கு நான் சொன்ன காரணம் சரியாத் தெரியலை. சத்தம் போட ஆரம்பிச்சிட்டாங்க. அந்த ட்ரெயின்ல வந்த மனித உரிமைகள் கழகத்தைச் சேர்ந்த ஒரு அம்மா என்னையும் குழந்தையையும் இங்க அழைச்சிக்கிட்டு வந்தாங்க'' என்று அழுதார் சித்ரா.

கிருஷ்ணவேணி வந்தாச்சு!

ரயிலில் இருந்து குழந்தையைத் தூக்கி வீச முயன்ற தாகத்தான் சித்ரா மீது குற்றச்சாட்டு பரவியது. ஆனால் அதை அவர் மறுக்கிறார். ''கையில தூக்கிகிட்டு வந்தா, மத்தவங்களுக்குத் தெரிஞ்சிடும். அதனாலதான் அப்படிக் கொண்டு வந்தேன். குழந்தையைக் கொல்ற எண்ணமெல்லாம் எனக்கு இல்லை. மெட்ராஸ்ல போய் எப்படியாச்சும் பிழைச்சுக்கலாம்னுதான் வந்தேன்'' என்கிறார்.

குழந்தையை மீட்டெடுத்து வந்த, எழும்பூரில் உள்ள மனித உரிமைகள் கழகத்தின் மருத்துவப் பொறுப்பாளர் லட்சுமி ரகுராமிடம் பேசினோம். ''ஆபீஸ் போறதுக்காக ஊரப்பாக்கம் ஸ்டேஷன்ல ட்ரெயின் ஏறினேன். அங்கே சில பேர் ஒரு பொண்ணுகிட்ட வாக்குவாதம் செய்யறதைப் பார்த்து என்ன விஷயம்னு விசாரிச்சேன். குழந்தைய பிளாஸ்டிக் பையில வெச்சு, ட்ரெயின்ல இருந்து தூக்கி வீசப்பார்க்கிறதாச் சொன்னாங்க. உடனே, தாம்பரம் ரயில்வே போலீஸுக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னேன். நாங்க தாம்பரம் போனதும் 108 ஆம்புலன்ஸ் ரெடியா இருந்துச்சு. குழந்தை, அம்மா ரெண்டு பேருக்கும் தேவையான முதல்உதவியைச் செய்து, மனித உரிமைக் கழகத்துக்கு ரெண்டு பேரையும் அழைச்சுட்டுப் போறதா எழுதிக் கொடுத்தேன். அதேபோல எழும்பூர் ரயில்வே போலீஸிலும் எழுதிக் கொடுத் திருக்கோம்'' என்றார்.

மனித உரிமைகள் கழகத்தின் மாநில மகளிர் அணி அமைப்பாளரும், ஜான்சிராணி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவியுமான கல்பனா, ''எங்களிடம் ஏற்கெனவே நான்கு பச்சிளம் குழந்தைகள் இருக்கிறார்கள். இது ஐந்தாவது குழந்தை. கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் கிடைத்ததால் இந்தக் குழந்தைக்கு 'கிருஷ்ணவேணி’ என்று பெயர் வைத்துள்ளோம். சித்ராவுக்குக் குடும்பக் கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. சித்ராவை அவருடைய குடும்பத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், எங்கள் அமைப்பு மூலமாகவே வேலை வாங்கிக்கொடுத்து காப்பகத்தில் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளோம். குழந்தையைத் தத்தெடுக்க நிறைய பேர் விருப்பம் தெரிவித்து உள்ளனர். சரியான நபரைத் தேர்வுசெய்து குழந்தையை ஒப்படைப்போம்'' என்றார்.

கிருஷ்ணவேணியைத் தத்தெடுக்க நடிகர்கள் பிரபுதேவா, லாரன்ஸ், விசாலி கண்ணதாசன் உட்பட பலபேர் போட்டி போடுகின்றனர். கிருஷ்ணவேணியின் எதிர்காலம் சிறப்பாக அமையட்டும்!

- சி.காவேரி மாணிக்கம்

படங்கள்: ஜெ.வேங்கடராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு