Published:Updated:

கோவை மேயர் வெற்றி செல்லாதா?

தேர்தல் கமிஷனை அதிர வைத்த ஆதாரங்கள்!

பிரீமியம் ஸ்டோரி
##~##
கோவை மேயர் வெற்றி செல்லாதா?

'கோவை மேயர் உள்ளிட்ட 33 மாமன்ற உறுப்பினர்களின் பதவிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அவர்கள், தேர்தல் கமிஷனை ஏமாற்றி இருப்பதற்கான துல்லியமான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன’ என்று அதிர்ச்சியைக் கிளப்புகிறார், கோவையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைப் போராளியான வழக்கறிஞர் லோகநாதன். 

''கோவை மாநகராட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 100. அதில் 80 பேர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள். அவர்களில் செ.ம.வேலுசாமி உட்பட பாதி பேர் தேர்தலில் போட்டியிட்டதே செல்லாது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது, 20 ரூபாய் முத்திரைத் தாளில் தன்னுடைய மற்றும் தன்னைச் சார்ந்தவர்களின் சொத்து மதிப்பு, தனது குற்றப் பின்னணி போன்ற தகவல்களை விவரமாகப் பதிவுசெய்து அதைச் சான்றுறுதி அலுவலர் (நோட்டரி பப்ளிக்) முன்னிலையில் பிரமாணம் செய்த

கோவை மேயர் வெற்றி செல்லாதா?

பிறகுதான் தாக்கல் செய்யணும். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியின் கவுன்சிலர் மற்றும் மேயர் தேர்தலுக்குப் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர்களில் பெரும்பான்மை ஆனவர்கள், எஸ்.பி.சந்திரசேகர் என்ற அ.தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞரிடம் சான்றுறுதி வாங்கி இருக்காங்க. அந்த எஸ்.பி.சந்திரசேகர் நோட்டரி செய்யும் தகுதியை இழந்தவர் என்பதுதான் விவகாரமே.

சந்திரசேகர் 1998-ல் நோட்டரி அட்வகேட் என்ற தகுதியைப் பெற்று செயல்பட ஆரம்பித்தார். 2009-ம் வருடம், கோவை பாஸ்போர்ட் ஆபீஸரான பாலமுருகன், இந்த சந்திரசேகர் மீது கடுமையான புகாரைக் கூறி மாவட்ட நீதிபதிக்கு  மனு அனுப்பினார். அதில், 'அஜய்குமார் மோகன்ராஜ் என்பவர் பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கு அஃபிடவிட் வழங்கி இருக்கும் சந்திரசேகர், ஓர் ஆவணத்தில் கையெழுத்தே போட வில்லை. இன்னோர் ஆவணத்தில் அஜய்குமாரோட பெற்றோர் கை யெழுத்துப் போடாமல் சந்திரசேகர் மட்டும் கையெழுத்து போட்டுக் கொடுத்திருக்கார். இந்த மாதிரியான செயல் நம்ம தேசத்தோட பாதுகாப்புக்கே அபாயமானது’ என்று சொல்லி, சந்திரசேகரின்

கோவை மேயர் வெற்றி செல்லாதா?

நோட்டரி அதிகாரத்தை ரத்து செய்யணும்னு தனது மனுவில் கூறி இருந்தார். இது தொடர்பான விசாரணை நடந்து, தமிழக கவர்னர் இவரை நோட்டரி அதிகாரத்தில் இருந்து நீக்கி விட்டார். இந்த விஷயம் தமிழக அரசாங்க கெசட்டிலேயே வெளியிடப்பட்டது (அதற்கான ஆவணங்களை நம்மிடம் காட்டுகிறார்).

அந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்துக்குப் போன சந்திரசேகர், இடைக்காலத் தடை கேட்டு மனுசெய்தார். தடை ஆணையும் வழங்கப்பட்டது. அந்தத் தடை ஆணை இவரோட நோட்டரி பப்ளிக் அதிகாரம் முடியக்கூடிய தேதியான 7.7.2011 வரைதான் செல்லும். தனது அதிகாரத்தைப் புதுப்பிக்காமல் அவர் நோட்டரி பப்ளிக்காகத் தொடர்ந்து செயல்பட முடியாது. அப்படித் தொடர்வது சட்டத்துக்கு எதிரான நடவடிக்கை. நிலைமை இப்படி இருக்க, இந்த சந்திரசேகர் தனது பதவிக்காலம் முடிந்து, இடைக்காலத் தடை ஆணை முடிஞ்ச பிறகும், நோட்டரி பப்ளிக்காகச் செயல்பட்டுள்ளார். அதனால், இவர் நோட்டரி செய்த அத்தனை பேரின் வேட்பு மனுக்களும் செல்லாது என்பதால், மேயர் செ.ம.வேலுசாமி உள்ளிட்ட கவுன்சிலர்களின் வெற்றி செல்லாது.

மேயரில் ஆரம்பித்து மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்கள்னு 33 அ.தி.மு.க-வினருக்கு சந்திரசேகர் சான்றுறுதி வழங்கி இருக்கும்

கோவை மேயர் வெற்றி செல்லாதா?

விவரத்தை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வாங்கி இருக்கேன். 'இது சந்திரசேகரோட தப்பு. நாங்க என்ன செய்ய முடியும்?’னு அ.தி.மு.க. புள்ளிகள் தப்பிக்க முடியாது. நோட்டரி வாங்கக் கூடிய நபர் உண்மையான நபர்தானானு அவங்கதான் செக் பண்ணி இருக்கணும். தேர்தல் கமிஷன் கடுமையான நடவடிக்கை எடுக்கும்னு நம்புகிறேன். இல்லேன்னா, சட்டரீதியான நடவடிக்கைகளில் இறங்குவேன்'' என்றார்.

சந்திரசேகரால் சான்றுறுதி வழங்கப்பட்ட கோவை மாநகராட்சி மேயர் செ.ம.வேலு சாமி, கிழக்கு மண்டலத் தலைவர் ஜெயராமன் மற்றும் சில கவுன்சிலர்களிடம் பேசினோம். ''அவருக்குப் பின்னாடி இப்படி ஒரு கதை இருப்பது தெரியாதே... நாங்க என்ன செய்யட்டும்?'' என்றனர் விபரீதம் புரியாமல்.  

இப்போது, கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்ற பொறுப்புகளில் இருக்கும் எஸ்.பி.சந்திரசேகரிடம் பேசினோம். ''ஆமா... பாஸ்போர்ட் ஆபீஸர் எனக்கு எதிரான புகார்களைச் சொல்லி, அந்த சமயத்தில் அரசு நடவடிக்கை எடுத்தது உண்மைதான். ஆனா, சென்னை உயர் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை வாங்கிட்டேன். அதன்படி நான் நோட்டரி பப்ளிக்காகச் செயல்படலாம். எக்ஸ்ஃபயர்டு ஆகிப்போன என்னோட நோட்டரி அந்தஸ்தைப் புதுப்பிக்கச் சொல்லி விண்ணப்பமும் அனுப்பிட்டேன். அதுக்கு எந்தப் பதிலும் இல்லை. ஸ்டே ஆர்டர் இருக்கிறதாலே நோட்டரி பண்ணலாம்னு நினைச்சுட்டேன். இப்போ இதை விவகாரமாக்கினா... நான் பாதிக்கப்படுவேன், என்னோட பெயர் டேமேஜ் ஆகும், அவ்வளவுதான். மாமன்ற உறுப்பினர்களுக்கு இதனால் ஒரு பாதிப்பும் வராது'' என்றார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் ஆணையர் சோ.அய்யரிடம் பேசினோம். ''வேட்புமனுவில் நோட்டரி சான்று என்பது மிக முக்கியமான அம்சம் என்பதில் இரண்டாவது கருத்தே கிடையாது. சான்றுறுதி வழங்கத் தகுதியற்ற நபரிடம் அதை வாங்கி இணைத்தல் என்பது தவறான செயல்தான். ஆனால் இந்த விஷயத்தில் தன்னைப் பற்றிய உண்மைகளை மறைத்து சான்றுறுதி வழங்கிய வழக்கறிஞரின் மேல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் கேன்டிடேட்ஸ் மீது நடவடிக்கை பாய வாய்ப்பில்லை'' என்றார்.

டெய்ல் பீஸ்: ஆகஸ்ட் 15-ம் தேதி சிறந்த மாநகராட்சிக்கான விருதைப் பெறுகிறது கோவை மாநகராட்சி. மேயர் செ.ம.வேலுசாமி பரிசை முதல்வரிடம் வாங்க இருக்கிறார்!

- எஸ்.ஷக்தி, படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு