Published:Updated:

பணம் கொடுத்தால்தான் பசுமை வீடா?

விழுப்புரம் பஞ்சாயத்து

பிரீமியம் ஸ்டோரி
##~##
பணம் கொடுத்தால்தான் பசுமை வீடா?

'பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீடு வழங்கு கிறார் விழுப்புரம் மாவட்டத் திட்ட இயக்குநர் முத்து மீனாள்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு சார்பில் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்படவே விழுப்புரம் எங்கும் பரபரப்பு. இதே விவகாரத்துக்காக தே.மு.தி.க. சார்பில் சாலை மறியலும் நடத்தப்பட்டு அனலை அதிகப்படுத்தியது! 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விக்கிரவாண்டி ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் பேசினோம். ''பசுமை வீடு திட்டத்தின் மூலம் இந்த ஆண்டு விழுப்புரத்தில் 450 வீடுகள் வழங்கப்பட உள்ளன. உண்மையான பயனாளிகளுக்கு வீடு வழங்குவதற்குத் திட்ட இயக்குநர்தான் முழுப் பொறுப்பு. ஆனால் அவரோ, இங்குள்ள அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வேலுவிடம் பயனா ளிகளைத் தேர்வுசெய்யும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டார். அதனால் வேலு, எல்லாக் கிராமத் தலைவர்களிடமும் சொல்லி, ஒரு வீட்டுக்கு 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை

பணம் கொடுத்தால்தான் பசுமை வீடா?

யார் கொடுக்கி றார்களோ அவங்களுக்குத்தான் வீடு என்று வசூல் செய்திருக்கிறார். கிராமத் தலைவர்கள், திட்ட இயக்குநர் மற்றும் ஒன்றியச் செயலாளர் ஆகியோர் இந்தப் பணத்தைப் பிரித்துக்கொள்கிறார்கள். ஓர் ஊருக்கு ஒரு தடவைதான் வீடு வழங்கவேண்டும் என்பது விதி. ஆனால், இந்த ஒன்றியத்தில் உள்ள அய்யூர் அகரம் என்ற ஊருக்கு கடந்த ஆண்டு 25 வீடுகள் ஒதுக்கப்பட்டன. இந்த ஆண்டும் 25 வீடுகளை ஒதுக்கி இருக்கிறார்கள். ஏனென்றால் அந்தப் பகுதியில்தான் அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் இருக்கிறார். இவற்றை எங்கள் கட்சி சார்பாக முழுமையாக விசாரித்து உண்மை என்று அறிந்துகொண்டோம். அதன் பிறகுதான் போஸ்டர் அடித்து இருக்கிறோம். இதற்குப் பிறகும் உண்மையான பயனாளிகளுக்கு வீடு கிடைக்கவில்லை என்றால், எங்கள் எம்.எல்.ஏ. தலைமையில் விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரில் போராட்டம் நடத்தப்போகிறோம்'' என்றார் ஆவேசமாக.

பணம் கொடுத்தால்தான் பசுமை வீடா?

இதே விவகாரம் குறித்துப் பேசும் ரிஷிவந்தியம் தே.மு.தி.க. ஒன்றியச் செயலாளர் டி.கே.கோவிந்தன், ''உண்மையான ஏழை களுக்கு வீடு கொடுக்கப்படவில்லை. யாரிடம் எல்லாம் பணம் வாங்கினார்களோ

பணம் கொடுத்தால்தான் பசுமை வீடா?

அவர்களை வைத்து பொய்யான ஒரு கிராம சபையை நடத்தி, அவர்களுக்கு வீடு வழங்கி இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின்படி ஒதுக்கப்படும் 25 வீடுகளில் எஸ்.சி. சமுதாயத்தினருக்குக் குறிப்பிட்ட அளவு வீடு ஒதுக்க வேண்டும். அதேபோன்று கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள், நிலம் இல்லா சிறு விவசாயிகள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்பவர்கள், குடிசை வீட்டில் வசிப்பவர்கள் என்று பலருக்கும் குறிப்பிட்டுள்ள விகிதப்படி வீடு ஒதுக்க வேண்டும். ஆனால், இவை எதுவுமே இங்கே கடைப்பிடிக்கப்படவில்லை. இதை வட்டார வளர்ச்சி அலுவலரி டம் கேட்டதற்கு, 'நாங்க என்ன செய்றது? ஆளும் கட்சிக்காரங்க சொல்றதைத்தான் நாங்க கேட்க வேண்டியிருக்கு’னு பதில் சொல்றார். இப்போது தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வீடு கொடுக்க நாங்கள் சம்மதிக்க மாட்டோம். வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் முன்னிலையில் உண்மையான கிராம சபை நடத்தி, வீடு கொடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தித்தான் சாலை மறியல் செய்தோம். இந்த ஊழலை விசாரித்து தவறு செய்த அத்தனை பேர் மீதும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்தகட்டப் போராட்டத்தில் இறங்குவோம்'' என்றார்.

கலெக்டர் அலுவலக வட்டாரத்தில் பேசினோம். ''அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு அமைச்சர் சி.வி.சண்முகத்தைப் பிடித்து மீண்டும் திட்ட இயக்குநராக விழுப்புரம் வந்துவிட்டார் முத்து மீனாள்.

பணம் கொடுத்தால்தான் பசுமை வீடா?

அதனால் யாராவது எதிர்த்துப் பேசினாலே, அமைச்சர் பெயரைப் பயன்படுத்தி மிரட்டுகிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒன்றிய முழு சுகாதாரப் பணியாளர்களுக்கு அரியர்ஸ் தொகையைக் கொடுப்பதற்கும் பணம் வாங்கினார் என்று புகார் கிளம்பியது. இப்போது பசுமை வீடு திட்டத்திலும் முறைகேடுகள் நடத்திருப்பது உண்மைதான்'' என்றனர்.

விழுப்புரம் மாவட்டத் திட்ட இயக்குநர் முத்து மீனாளிடம் பேசினோம். '' யார் யாருக்கு வீடு வழங்க வேண்டும் என்று கலெக்டருக்கு புரபோசல் வரும். அதை அவர் எங்களிடம் கொடுப்பார். நாங்கள் அதை விசாரித்து மீண்டும் கலெக்டருக்கு ஏ.எஸ். கொடுக்கிறோம். மற்றபடி நாங்கள் நேரடியாக எதிலும் தலையிட முடியாது. பயனாளிகளை கிராம சபைதான் தேர்வு செய்து கொடுக்கும். இதில் எனக்கு எந்தவிதத் தொடர்பும் கிடையாது. நான் அமைச்சர் சண்முகத்துடன் படித்தவள். மற்றபடி அமைச்சர் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவது இல்லை'' என்றார்.

''ஊரை மட்டும்தான் நான் தேர்வு செய்து கொடுத்தேன். இந்த வீடுகளுக்காக யாரிடமாவது நான் பணம் வாங்கியதாக நிரூபித்தால் என்ன தண்டனைக்கும் தயாராக இருக்கிறேன்'' என்கிறார், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் வேலு.

இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாவட்ட கலெக்டர் சம்பத், ''இது சம்பந்தமாக எனக்கும் புகார் வந்திருக்கிறது. விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். பணம் கொடுத்தால்தான் வீடு கிடைக்கும் என்ற நிலைமையை மாற்றும் வகையில் கலெக்டரின் நடவடிக்கை அமையட்டும்.

- அற்புதராஜ்

படங்கள்: ஆ.நந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு