Published:Updated:

போலீஸ் முன்னிலையில் வெடிகுண்டு வெறியாட்டம்!

திகில் கிளப்பிய ஜெகன் கொலை

பிரீமியம் ஸ்டோரி
##~##
போலீஸ் முன்னிலையில் வெடிகுண்டு வெறியாட்டம்!

மைதிக்கு அர்த்தமாக இருந்த புதுச்சேரியில் இப்போது, கொலையும் களவும் சம்மணம் போட்டு அமர்ந்து சதுரங்கம் ஆடுகின்றன. சமீபத்திய உதாரணம், கைதி ஜெகனின் கொலை!   

''முதலியார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். அவருக்கும் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ரவுடி சுப்புவுக்கும் ஏரியாவில் 'யார் பெரியஆள்’ என்று ஈகோ மோதல். அதனால், 2004-ம் ஆண்டு சுப்புவையும் அவருடைய மகன் ஜெயக்குமாரையும், ஜெகனும் அவருடைய ஆட்களும் ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியதாகப் புகார் கிளம்பியது. காவல் நிலையத்துக்குள் அடைக்கலம் புகுந்த ஜெயக் குமாரை காவலர்கள் முன்னிலையிலேயே நாட்டு வெடிகுண்டு வீசி, கொலை செய்தனர். அந்த வழக்கில் ஜெகன் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புதுச்சேரி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட நேரத்தில் ஜெகனுக்கு 24 வயது. சிறையில் இருந்தபடியே கட்டப்பஞ்சாயத்து, வணிகர்களை மிரட்டிப் பணம் பெறுவது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார்.

போலீஸ் முன்னிலையில் வெடிகுண்டு வெறியாட்டம்!

சிறையில், மற்றொரு ரவுடி கோஷ்டியான கரு ணாவின் தொடர்பு கிடைத்தது. கருணாவுக்கு எதிரியாகக் கருதப்பட்ட சாந்தமூர்த்தியை தீர்த்துக் கட்ட 10 லட்சம் ரூபாய் பேரம் பேசினார் ஜெகன். சிறையில் இருந்தபடியே தன் நண்பர்கள் மூலம் சாந்தமூர்த்தியைத் தென்னந்தோப்பில் வைத்து வெடிகுண்டு வீசி கொலை செய்தார்.

சிறையில் இருந்து வரும் உத்தரவுகளுக்கு ஏற்ப புதுச்சேரியில் இருக்கும் வணிக நிறுவனங்களில் மாமூல் கேட்டு மிரட்டுவது ஜெகனுடைய கூட் டாளிகளின் வழக்கம். சில மாதங்களுக்கு முன், புதுச்சேரி தலைமைப் போக்குவரத்துக் காவல் நிலையம் எதிரே இருந்த துணிக்கடையில் இருந்து பல ஆயிரம் மதிப்புள்ள துணிகளைக் கத்தி முனையில் கொள்ளை அடித்துச் சென்றனர். கடந்த மாதம் ஜெகனின் கூட்டாளிகள், 100 அடி ரோட்டில் மரவாடி வைத்துள்ள தொழிலதிபர் நரேஷ் பட்டேலை மிரட்டி மாமூல் கேட்டனர். மாமூல் தர சம்மதிக்காததால் நரேஷ் பட்டேல் வீட்டின் மீது வெடிகுண்டு வீசி உள்ளனர். இப்படி நாளுக்கு நாள் ஜெகனின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்தாலும், ஜெகனைத் தீர்த்துக்கட்ட அவரைச் சுற்றியே ஒரு கும்பல் இருந்தது. அதனால், புதுச்சேரி சிறையில் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்று காரைக்கால் சிறைக்கு மாற்றலாகிச் சென்றார். இருப்பினும், தொழிலதிபர் நரேஷ் பட்டேலை மாமூல் கேட்டு மிரட்டிய வழக்கு தொடர்பாக காரைக்காலில் இருந்து புதுச்சேரி நீதிமன்றத்துக்கு வந்து சென்றபோது, மர்மநபர்கள் நாட்டுவெடிகுண்டு வீசி ஜெகனை கொலை செய்துவிட்டனர்'' என் கின்றனர் விவரமறிந்த வட்டாரத்தினர்.

போலீஸ் முன்னிலையில் வெடிகுண்டு வெறியாட்டம்!

எப்படி நடந்தது இந்தக் கொலை?

''கடந்த 10-ம் தேதி. காரைக்காலில் இருந்து புதுச்சேரி நீதிமன்றத்துக்கு ஜெகன் வரும் செய்தியை அறிந்து நோனாங்குப்பம் படகு குழாம் அருகே சுண்ணாம்பாறு பாலத்தை ஒட்டியுள்ள பகுதியில் இனோவோ கார் மற்றும் நான்கு பைக்குகள் சகிதம் மர்மக் கும்பல் காத்திருந்தது. புதுச்சேரி நீதிமன்றத்தில் இருந்து டெம்போ டிராவலரில், துணை ஆய்வாளர் செந் தில்குமார், உதவித் துணை ஆய்வாளர் திருமுருகன், கான்ஸ்டபிள் நாகராஜ், ஏட்டு ராஜேந்திரன், ஓட்டுனர் குமார் ஆகியோருடன் ஜெகன் பயணித்தார். சுண்ணாம்பாறு பாலத்தை வேன் கடந்தபோது அங்கு தயாராக இருந்த எட்டுப் பேர் கொண்ட  கும்பல், வேனுக்கு குறுக்கே டூ வீலரை நிறுத்தியது. கையில் இருந்த நாட்டு வெடிகுண்டுகளை வேன் மீது சரமாரியாக வீசியது. ஓட்டுனர் குமார்,  வாகனத்தை 60அடி வரை பின்னோக்கிச் செலுத்தினார். போலீஸ் தரப்பிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வாகனத்தை மர்மக் கும்பல் சுற்றி வளைக்கவே, வாகனத்துக்குள் இருந்த காக்கிகள் மிரண்டு வெளியேறினார்கள்.

தனி ஆளாக ஸீட்களுக்கு இடையில் மறைவில் பதுங்கி இருந்த ஜெகன் மீது மர்மக் கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு, உயிர் பிரிந்துள்ளதா என்பதை உறுதி செய்து இருக்கிறது. அதற்குப் பிறகே, அந்த இடத்தைக் காலி செய்து இருக்கிறார்கள். உதவித் துணை ஆய்வாளர் திருமுருகனுக்கு கை மற்றும் கால்களில் பலத்த அடியும், ஏட்டு ராஜேந்திரனுக்கு கண்ணில் காயமும் ஏற்பட்டது'' என்கிறார்கள் போலீஸார்.

வழக்கை விசாரிக்கும் அரியாங்குப்பம் போலீஸாரி டம் பேசினோம். ''முதலியார்பேட்டையில் நடந்த சுப்பு மற்றும் அவருடைய மகன் ஜெயக்குமார் கொலைக்கு பழிவாங்கும் வகையில் இந்தக் கொலை நடந்து இருக்குமோ என்ற சந்தேகத்தில் விசாரித்து வருகிறோம். புதுச்சேரி சிறையில் இருந்தபோது ஜெகனோடு நட்பில் இருந்தார் கருணா. ஒரு கட்டத்தில் இருவருக்கும் பிரச்னை ஏற் பட்டதாகத் தகவல். அதனால், ஏனாம் சிறைக்கு மாற்றப்பட்டார் கருணா. அவர் தூண்டுதலால் இந்தக் கொலை நடந்ததா என்றும் விசாரித்து வருகிறோம். 'பாம்’ மணிகண்டன் என்பவருக்கும் ஜெக னுக்கும் முன்விரோதம் இருந்ததாகவும் சொல்கிறார்கள். கொலையாளி யார் என்பதை விரைவில் கண்டுபிடித்து விடுவோம்'' என்றனர்.

போலீஸ் சொல்லும் கதையில் பல மர்ம முடிச்சுகள் உள்ளன. ஜெகன் மீது ரவுடிகள் குண்டுவீசித் தாக்கும்போது போலீஸார் என்ன செய்துகொண்டு இருந்தனர்? அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியை ஏன் பயன்படுத்தவில்லை? சுமார் 12 பேர் ஜெகனைத் தாக்க வந்ததாகக் கூறப்படுகிறது... அதில் ஒருவரைக்கூட போலீஸாரால் ஏன் பிடிக்க முடியவில்லை? இவ்வளவு பெரிய தாக்குதலில் போலீஸார் மீது பெரிய காயம் எதுவுமே படவில்லையே எப்படி? 'உங்களை எதுவும் செய்ய மாட்டோம்... ஓடிவிடுங்கள்’ என்று போலீஸாரை ரவுடிகள் விரட்டிவிட்ட பிறகுதான் இந்தத் தாக்குதலே நடந்ததா? - இப்படிப் பல சந்தேகங்கள் கிளம்புகின்றன.  

ஆனால், வெடிகுண்டு எடுத்தவன் வெடி குண்டாலேயே சாவான் என்பது ஜெகன் விஷயத்தில் மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது!

- நா.இள அறவாழி

படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு