Published:Updated:

எங்க சிலைகள் எங்கேப்பா?

சிக்கலில் தஞ்சை போலீஸ்

பிரீமியம் ஸ்டோரி
##~##
எங்க சிலைகள் எங்கேப்பா?

'கவுண்டமணி - செந்தில் வாழைப்பழக் காமெடி போல ஆகிவிட்டது எங்கள் நிலைமை. எங்கள் ஊரில் திருடுபோன புராதனக் கோயில் சிலைகளுக்குப் பதிலாக வேறு சிலைகளைக் கொடுத்து ஏமாற்று கிறார்கள்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) தகவல் வந்தது. 

தஞ்சாவூர் மாவட்டம் பூதளூர் அருகே உள்ளது காமதேவமங்கலம் கிராமம். ஊர்ப் பெரியவர் கோவிந்தராஜிடம் பேசினோம். ''எங்கள் ஊர் எல்லையில் உள்ள ஏரிக்கரையில் ஏழு சப்தகன்னியர் கற்சிலைகளும் ஒரு முனியாண்டவர் கல் சிலையும் உண்டு. கடந்த ஜூன் 26-ம் தேதி இரவு நான்கு சப்தகன்னியர் சிலைகள் திருடு போய்விட்டன. அந்த அதிர்ச்சி குறையும் முன்பே, மீதம் இருந்த மூன்று சப்த கன்னியர் சிலைகளும் முனியாண்டவர் சிலையும் திருடப்பட்டன.

முதல் முறை திருடு நடந்ததுமே பூதளூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தோம். ஆனால்

எங்க சிலைகள் எங்கேப்பா?

புகார்கூட பதியப்படவில்லை. இரண்டாவது முறை திருட்டு நடந்த தினத்தில் அரியமங்கலத்தில் ரோந்துவந்த காவல் படையிடம் ஒரு திருட்டுக் கும்பல் சிக்கியது. அதன் பின்னர்தான் பூதளூர் காவல் நிலையத்தில் புகாரையே பதிவு செய்தனர். அப்போது மூன்று சப்த கன்னியர் மற்றும் முனியாண்டவர் சிலைகள் மீட்கப்பட்டன.

திருட்டுக் கும்பலைச் சேர்ந்த நான்கு பேரில் மீரான், ஜெயராஜ், கணேசன் ஆகியோர் மட்டும் கைது செய்யப்பட்டனர். அப்பாஸ் என்பவர் தப்பி விட்டார். போலீஸ் விசாரணையில் ஏற்கெனவே திருடுபோன சிலைகளையும் இந்தக் கும்பல்தான் கடத்தியது உறுதிசெய்யப்பட்டது.

எங்க சிலைகள் எங்கேப்பா?

'அவற்றையும் மீட்கப்போகிறோம்’ என்று கிளம்பிய பூதளூர் இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீம், சிலைகளை அடையாளம் காட்டுவதற்காக எங்கள் ஊரைச் சேர்ந்த மாரியப்பனையும் அழைத்துக்கொண்டு மகாபலிபுரத்துக்குச் சென்றார். இரண்டு நாட்கள் கழித்து உடைந்துபோன நான்கு சிலைகளைக் கொண்டு வந்தனர். அப்போதே, 'இது எங்கள் ஊரில் திருடுபோன சிலைகள் இல்லை’ என்று இன்ஸ்பெக்டரிடம் தெரிவித்தோம். ஆனால் இன்ஸ்பெக்டரோ, 'இவை தான் அந்தச் சிலைகள். பிரச்னை செய்யாமல் வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று அழுத்தம் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் சொல்வதைப் பார்த்தால் எங்களுக்குச் சந்தேகமாக இருக்கிறது. எங்கள் ஊரில் எடுக்கப்பட்ட சிலை வேறு. இன்ஸ்பெக்டர் காட்டுவது வேறு'' என்றார்.

சிலைகளை அடையாளம் காட்டுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட மாரியப்பனிடம் பேசினோம். ''நான்கு போலீஸாருடன் இன்ஸ்பெக்டர் மற்றும் சிலைத் திருட்டில் பிடிபட்ட மீரான் ஆகியோரோடு நானும் போலீஸ் ஜீப்பில் போனேன். மீரான் சொன்ன தகவலின் அடிப்படையில் அரியமங்கலத்தில் செல்வம் என்பவரைப் பிடித்தனர். அவனையும் அழைத்துக்கொண்டு மகாபலிபுரம் போனோம். அங்கு இன்ஸ்பெக்டர் யாரிடமோ போனில் பேசினார். சிலரைப் பிடித்து விசாரித்தார். என்னை மகாபலிபுரத்தில் ஒரு இடத்தில் இறக்கிவிட்டு அவர்கள் மட்டும் எங்கோ சென்று வந்தனர். கடைசியில் அந்தத் திருட்டுக் கும்பல் மயிலாடுதுறையில் இருப்பதாகக் கூறி அங்கே அழைத்துச் சென்றனர். அங்கு ஒரு டெம்போவில் சில கற்சிலைகளை எடுத்துவந்து கொடுத்தனர். அவை எங்கள் ஊர்ச் சிலைகள் இல்லை என்று சொன்னேன். ஆனால் அதை ஏற்காமல், 'அதுதான் இது’ என்று சொல்லிவிட்டார் இன்ஸ்பெக்டர். என்ன காரணத்தாலோ, காணாமல்போன சிலைகளைக் கண்டுபிடித்து விட்டதாகச் சொல்லி ஃபைலை மூடப் பார்க்கிறார்'' என்றார்.

எங்க சிலைகள் எங்கேப்பா?

இதுகுறித்து பூதளூர் இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹீமிடம் விளக்கம் கேட்டோம். ''நான் விரைவில் சிலைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த நடவடிக்கையில் இறங்கினேன். திருடிச் சென்றவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில்தான் அந்தச் சிலைகளை ஊர் மக்களிடம் ஒப்படைத்தேன். எனக்கு வேறு உள்நோக்கம் எதுவும் இல்லை'' என்றார்.

இந்த விவகாரம் குறித்துப் பேசும் தஞ்சையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜீவகுமார், ''காணாமல்போன சிலைகள் எல்லாம் பிற்காலச் சோழர்கள் காலத்தைச் சேர்ந்தவை. வெண்டையாம்பட்டி, வலம்பக்குடி, பாதிரக்குடி, கல்விராயன் பேட்டை, தொண்டராயன் படுகை ஆகிய கிராமங்களில் தொடர்ந்து சிலைகள் காணாமல்போயுள்ளன. வெளிநாட்டில் இந்தச் சிலைகள் பல லட்சங்களுக்கு விலைபோகின்றன. அதனால் ஒரு திருட்டுக் கும்பல் இந்தப் பகுதியில் தீவிரமாகத் திருடிவருகிறது. காமதேவமங்கலத்தில் காணாமல்போன சிலைகளுக்குப் பதிலாக வேறு சிலைகள் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவையும் வேறு எங்கோ திருடப்பட்டவைதான். சேதமாகி இருப்பதால் விலை போகாதவை என்று தெரிகிறது. போலீஸார் இந்த சிலை திருட்டு விவகாரத்தை மிகவும் அசட்டையாகக் கையாள்கிறார்கள். லட்சங்களும் கோடிகளும் புரளும் தொழில் என்பதால் இந்தத் திருட்டு தொடர்ந்து நடக்காமல் இருக்க போலீஸ் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்றார்.

திருவையாறு டி.எஸ்.பி. அன்புநேசனிடம் பேசினோம். ''என்னிடம் இது குறித்துப் புகார் எதுவும் வரவில்லை. நீங்கள் சொன்னதையே புகாராக எடுத்து விசாரிக்கிறேன். தகுந்த நபர்களைக்கொண்டு, சரியான சிலைகள்தானா என்று அறிந்து நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.

கலைச் செல்வங்களைக் காக்க வேண்டியது காவலர்களின் கடமை.

- சி.சுரேஷ்

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு