Published:Updated:

கொங்கு யார் பக்கம்?

வெளியேற்றிய பெஸ்ட் ராமசாமி... திருப்பித் தாக்கும் ஈஸ்வரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##
கொங்கு யார் பக்கம்?

ட்சிக்குள் பிளவு ஏற்படுவது தமிழ்நாட்டுக்குப் புதிதா என்ன? அந்த வரிசையில் புதிது, கொங்குநாடு முன்னேற்றக் கழகம். கொ.மு.க-வின் தலைவர் பெஸ்ட் ராமசாமிக்கும் பொதுச்செயலாளர் ஈஸ்வரனுக்கும் நடந்த பனிப்போரின் முடிவில், ஈஸ்வரனைக் கட்சியில் இருந்து நீக்குவதாக அதிகாரபூர்வமாக கடந்த 10-ம் தேதி அறிவித்து இருக்கிறார் கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமி. 

கொங்கு மண்டலத்தில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் சில ஆண்டுகளுக்கு முன் கொ.மு.க. உதயமானது. கவுண்டர்கள் வாக்கு வங்கி அதிகம் உள்ள கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் போன்ற மாவட்டங்களில் இதற்கு முன் கொங்கு பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இயக்கங்களை எல்லாம் ஓரம்கட்டி வேகமாக வளர்ந்தது. 2009-ல் பி.ஜே.பி-யின் மூத்த தலைவர் அத்வானியைச் சந்தித்து தேர்தல் உடன்பாடு பேசக்கூடிய அளவுக்கு கொங்கு மண்டலத்தில் கட்சியின் செல்வாக்கு வளர்ந்தது. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துக் களம் கண்டது. தேர்தலில் பெறும் வாக்குகள்தான் கட்சியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால், கட் சியினர் பம்பரமாகச் சுழன்று வேலை பார்த்தனர். கட்சியின் தலைவர்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யச் செல்லும்போது டிராஃபிக் ஜாம் ஏற்படும் அளவுக்கு பிரமாண்டமாகக் கூட்டத்தைக் கூட்டினர்.

கொங்கு யார் பக்கம்?

ஜெயிக்க முடியாவிட்டாலும், கரூர், கோவை, திருப்பூர் போன்ற நாடாளுமன்றத் தொகுதிகளில் லட்சக்கணக்கான ஓட்டு களைப் பெற்றனர். அதனால், சட்டமன்றத் தேர்தலில் 70 தொகுதிகளின் வெற்றி எங்கள் கைகளில் என்று பிரசாரமும் செய்தனர். விளைவு... திராவிடக் கட்சிகளின் பார்வை இவர்கள் பக்கம் திரும்பியது. கட்சி வளர்ந்த வேகத்துக்கு ஈடாக, கட்சியில் ஈகோ பிரச்னையும் தலைதூக்கியது. கட்சியின் பொதுச்செயலாளராக ஈஸ்வரன் நியமிக்கப்பட்ட பிறகு, அவர் வளர்ச்சி அதிகமானது உண்மைதான். ஆனால், கட்சியின் தலைவர் பெஸ்ட் ராமசாமியின் பெயரை சின் னதாகப் போட்டு, ஈஸ்வரனின் பெயரைப் பெரிதாகப் போடும் அளவுக்குத் தன் பலத்தை அதிகரித்துக் கொண்டார் ஈஸ்வரன். இருவருடைய ஆதரவாளர்களும் கட்சிக்குள் இரண்டு குழுக்களாகவே பிரிந்து செயல்பட்டனர்.

2011-ல் சட்டமன்றத் தேர்தல் வந்தபோது யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட வேண்டும் என்று கட்சியினர் வற்புறுத்தியபோது, தலைவர்கள் அதை ஏற்கவில்லை. இதனால் கட்சியினர் சோர்வடைந்தனர். அ.தி.மு.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை ஒரு பக்கம் நடந்துகொண்டு இருந்த நேரத்தில் திடீரென்று ஏழு தொகுதிகளை வாங்கிக்கொண்டு தி.மு.க-வுடன் உடன்பாடு ஏற்பட்டது. தி.மு.க. எதிர்ப்பு அலையால் போட்டி யிட்ட அத்தனைத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினர். அதன்பிறகு, இலைமறைகாயாக இருந்த கோஷ்டி பூசல் வெளிப் படையாகவே வெடித்து விட்டது!

''இருவரின் ஆதரவாளர்களும் தாங்கள் நடத்தும் கூட்டங்களில் ஒருவர் மீது ஒருவர் மண்ணை வாரித் தூற்றினர். கட்சியைக் கைப்பற்ற ஈஸ்வரன் முயற்சிக்கிறார் என்று பெஸ்ட் ராமசாமி தரப்பும், வயதாகி விட்டதால் ராமசாமி ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரன் தரப்பும் மோதிக்கொண்டனர். இந்தநிலையில், தேர்தல் செலவுக்காக தி.மு.க-விடம் இருந்து ஈஸ்வரன் 30 கோடி ரூபாய் வாங்கினார் என எதிர்தரப்பும், கட்சி நிதியில் இருந்து லட்சக்கணக்கான பணத்தை ஈஸ்வரன் கையாடல் செய்து விட்டார் என பெஸ்ட் ராமசாமி அணியினரும் புகார் எழுப்ப... கட்சிக்குள் பிளவு தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது. கோவையில் கடந்த 5-ம் தேதி நடந்த பொதுக் குழுவில் ஈஸ்வரனைக் கட்சியில் இருந்து நீக்க பெஸ்ட் ராமசாமிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இப்போது, ஈஸ்வரன் நீக்கப்பட்டு விட்டார். மிகப்பெரிய சக்தியாக வளர வேண்டிய இயக்கம், இருவரின் ஈகோவால் தள்ளாடி மக்களிடம் வெறுப்பையும் சம்பாதித்து விட்டது'' என்கின்றனர் இரண்டு தரப்பிலும் இருந்து ஒதுங்கி இருப்பவர்கள்.

பெஸ்ட் ராமசாமியிடம் பேசினோம். ''2001-ல் கட்சியை ஆரம் பித்தேன். சில ஆண்டுகளுக்கு முன், ஈஸ்வரனை கட்சியின் தற்காலிகச் செயலாளராக நியமித்தேன். ஆனால், பொதுச் செயலாளர் ஆன பிறகு, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈஸ்வரன் இறங்கினார். தலைவரின் அனுமதி இல்லாமல் தன் ஆதரவாளர்களை கட்சியின் செயலாளர்களாக நியமித்து தனக்கு ஆகாதவர்களை கட்சியைவிட்டு நீக்கினார். அதனால், கொங்கு நாட்டு மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு, கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க, கட்சியை தவறாக வழிநடத்திய அவரை நீக்கியுள்ளோம். ஈஸ்வரன் அணியில் உள்ளவர்கள் உண்மையைப் புரிந்துகொண்டு திரும்பி வருவார்கள்'' என்றார்.

ஈஸ்வரனைத் தொடர்புகொண்டு பேசினோம். ''லட்சக்கணக்கான தொண்டர்களும் நிர்வாகிகளும் என்னுடன் இருக்கிறார்கள். ஒரு மாவட்டச் செயலாளர்கூட இல்லாமல் மாவட்டச் செயலாளர் கூட்டத்தை நடத்தி என்னை நீக்குவதாக அறிவித்துள்ளனர். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஊடகம் மூலமாக பதில் சொல்ல விரும்பவில்லை. நான்கு வருடங்களாக கட்சியில் என்ன நடக்கிறது என்று தொண்டர்களுக்குத் தெரியும். என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் கட்சியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்த விவகாரத்தை சட்டரீதியாக சந்திப்போம்'' என்றார் அமைதியாக.

தொண்டர்கள்தான் தீர்ப்பு கூற வேண்டும்!  

- ம.சபரி, படங்கள்: க.ரமேஷ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு