Published:Updated:

விவசாய நீரைக் குடிக்கும் தொழிற்சாலைகள்

தாமிரபரணி தண்ணீர் தகராறு

பிரீமியம் ஸ்டோரி
##~##
விவசாய நீரைக் குடிக்கும் தொழிற்சாலைகள்

'ஒப்பந்தப்படி தண்ணீரை வழங்கு’ என்று அண்டை மாநிலங்களுடன் போராடி வரும் நிலையில், 'எங்கள் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு மீதம் உள்ள தண்ணீரை தொழிற்சாலைகளுக்கு வழங்கு’ என்று பொங்குகிறார்கள், தாமிரபரணி ஆற்றுப் பகுதி விவசாயிகள்! 

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் விவசாயத்துக்கும் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீருக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது தாமிரபரணி ஆறு. எட்டு அணை களையும் 11 கால்வாய்களையும் கொண்ட தாமிரபரணியால் இரு போக விவசாயம் நடந்தது எல்லாம் பழைய வரலாறு. இப்போது மழை குறைந்துபோனது. தவிர, ஸ்ரீவை குண்டம் அணையின் உட்பகுதியில் இருந்தே தண்ணீரை எடுத்துத் தொழிற்சாலைகளுக்கு வழங்குவதால் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது.

விவசாய நீரைக் குடிக்கும் தொழிற்சாலைகள்

போராட்ட ஏற்பாடுகளில் இருக்கும் தாமிரபரணி நதி நீர்ப் பாதுகாப்பு பேரவையின் அமைப்பாளரான நயினார் குலசேகரனிடம் பேசினோம், ''தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் கொடுப்பதையே முதல் கடமையாக அதிகாரிகள் நினைக்கிறாங்க. அதுக்காக தொழிற்சாலையே வேண்டாம்னு நாங்க சொல்லலை. விவசாயத்துக்கும் குடிநீருக்கும் போக மீதம் இருக்கும் தண்ணீரைத்தான் தொழிலுக்குப் பயன்படுத்தணும். ஆனா, தொழிற்சாலைகள் அதிக அளவில் தண்ணீர் எடுப்பதால் விவசாயம் மோசமான நிலைக்குப் போயிடுச்சு. குடிநீருக்கும் பஞ்ச மாயிடுச்சு. முன்பு, அணையில் இருந்து பல கி.மீ தூரமுள்ள இருவப்பபுரம் பகுதியில் இருந்துதான் தொழிற்சாலைக்குத் தண்ணீர் எடுத்தாங்க. ஆனா இப்போ ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்தே நேரடியா எடுக்கிறாங்க.

விவசாய நீரைக் குடிக்கும் தொழிற்சாலைகள்

பாபநாசம் அணையின் கொள்ளளவைவிட மூன்று மடங்கு அதிகமாக மழைக் காலங்களில் இந்த ஆறு வழியாக வெள்ள நீர் கடலுக்குப் போகிறது. அதனால் ஆற்றின் கடைசிப் பகுதியில் பெரிய 'செக் டேம்’ ஒன்றைக் கட்டி, அதில் வெள்ள நீரைத் தேக்கிவைத்து அதில் இருந்து தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் எடுக்கலாம். அப்படிச் செய்யாமல் விவசாயத்தைப் புறக்கணித்துவிட்டு ஆற்றுத் தண்ணீரை தொழிற்சாலைகளுக்குக் கொண்டுசெல்வதை இனியும் அனுமதிக்க முடியாது'' என்றார் காட்டமாக.

விவசாய நீரைக் குடிக்கும் தொழிற்சாலைகள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரான கனகராஜ், ''தொழிற்சாலைகளின் தண்ணீர்த் தேவைக்கு கடல் நீரை சுத்திகரித்து எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர, ஆற்றில் இருந்து எடுக்கக் கூடாது. அணையில் இருந்து தொழிற்சாலைக்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்யவேண்டும் அல்லது இந்தத் திட்டத்தால் யாருக்கெல்லாம் லாபம் என்பதை விவரமாக எடுத்துச் சொல்லி நாடு முழுவதும் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்'' என்றார் படுவேகமாக.

விவசாய நீரைக் குடிக்கும் தொழிற்சாலைகள்

இந்த விவகாரம் தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளரான பாண்டியராஜிடம் பேசினோம், ''தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக 20 எம்.ஜி.டி. திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. ஓப்பன் சேனல் மூலமாகத் தண்ணீர் கொடுத்தால் விவசாயிகள் எடுத்துக்கொள்கிறார்கள். தொழிற்சாலைக்கு நீர் கிடைப்பது இல்லை. அதனால்தான் அணையில் இருந்து எடுக்கப்படுகிறது. ஆனாலும் 12 எம்.ஜி.டி-க்கு மேல் தண்ணீர் எடுக்கவில்லை'' என்றார். ''தொழிற்சாலை எடுக்கும் தண்ணீருக்கு எப்படி அளவுவைக்கிறீர்கள்?'' என்று கேட்டதும், ''தனியார் கம்பெனிகள் வசம் மீட்டர் இருக்கிறது. அதுபோக மோட்டார் கெபாசிட்டியை வைத்து நாங்களும் கணக்குப் போடுவோம்'' என்றார். ''உத்தேசமாக கணக்கு வைப்பதை வைத்து '20 எம்.ஜி.டி தண்ணீர்கூட எடுக்க வில்லை’ என எப்படி முடிவு செய்ய முடியும்?'' என்றதும், ''எங்களிடம் இருக்கும் மீட்டர் இப்போது பழுதடைந்து இருக்கிறது. விரைவில் புதுசாக வாங்கிவைக்கப்படும். ஆனாலும் விவசாயிகள் வைக்கும் கோரிக்கையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்போம்'' என்று வாக்குறுதி கொடுத்தார்.

பொதுப்பணித் துறை பொறியாளரான சந்திர சேகரனிடம் பேசினோம், ''குடிநீர், விவசாயம் அதன் பிறகுதான் தொழிற்சாலை என்ற வரிசையை உறுதிப்படுத்த வேண்டும்னு விவசாயிங்க கேட்கிறாங்க. அவங்க கோரிக்கை நியாயமானதுதான். பெரும்பாலான தொழிற்சாலைகள் கடற்கரையை ஒட்டித்தான் இருக்கு. அதனால் கடல் நீரைச் சுத்திகரித்து எடுப்பதற்கான ஏற்பாடுகளைத்தான் அவர்கள் செய்யணும். விவசாயிகள் சொல்வதுபோன்று ஆற்றின் எல்லையில் செக் டேம் கட்டி அதில் இருந்து தண்ணீரை எடுக்கச் செய்வதும் நல்ல யோசனைதான். நான் இதுகுறித்து ரிப்போர்ட் தயார் செய்து வருகிறேன். விரைவில் அமைச்சரை சந்தித்துத் தேவையான நடவடிக்கை எடுக்கிறேன்'' என்றார்.

மாவட்ட கலெக்டரான ஆஷிஸ்குமார், ''தொழிற்சாலை நிர்வாகங்கள் கடலில் இருந்து தண்ணீரை சுத்திகரித்து எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறோம். அதேபோல் ஆற்றின் எல்லையான சேர்ந்தபூமங்கலம் பக்கத்தில் செக்டேம் கட்டவும் முயற்சி எடுத்து வருகிறோம்'' என்றார்.

தற்போது எட்டு தனியார் ஆலைகளும் தூத்துக்குடி அனல் மின்சார நிலையமும் இந்த அணையில் இருந்து தண்ணீர் எடுக்கின்றன. தனியார் ஆலைகளின் சார்பில் பேசியவர்கள், ''ஆரம்பத்தில் தண்ணீர் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்கிறோம்னு அரசு கொடுத்திருக்கும் உறுதியை வைத்துத்தான் தொழிற்சாலை வந்திருக்கிறது. கலெக்டரின் ஆலோசனை குறித்து எங்களின் மேல்மட்ட அதிகாரிகள் மத்தியில் யோசிக்கப்பட்டு வருகிறது. அந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்றாலும் இரண்டு மூன்று வருடங்கள் ஆகலாம். தண்ணீர் கிடைக்காத நிலைமை ஏற்பட்டால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும்'' என்றார்.

எல்லோருக்கும் சாதகமான ஒரு முடிவை அரசு விரைவில் எடுக்கவேண்டும்!

- எஸ்.சரவணப்பெருமாள்

படங்கள்: ஏ.சிதம்பரம்      

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு