Published:Updated:

சுடுகாட்டுல ஊர்ச்சந்தை வைக்கலாமா?

ராமநாதபுரம் ரவுசு

பிரீமியம் ஸ்டோரி
##~##
சுடுகாட்டுல ஊர்ச்சந்தை வைக்கலாமா?

'பேய், பிசாசுகள் பயன்பாட்டுக்காக  எங்கள் ஊரில் மார்க்கெட் கட்டப்பட்டு உள்ளது. நீங்களும் வந்து பாருங்களேன்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-66808002) ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஓர் அழைப்பு. இதற்கு முழு அர்த்தம் புரியாமல்தான் நாம் கிளம்பினோம். 

உச்சிப்புளி ஊராட்சி எனப்படும் 'என் மனம் கொண்டான்’ ஊராட்சி. இந்த ஊரின் பஞ்சாயத்துத் தலைவர் காளீஸ்வரி என்றாலும், அனைத்து இடங்களிலும் அவரது கணவர் விஸ்வநாதனின் ராஜாங்கம்தான் நடக்கிறதாம். அவரை எதிர்த்து சி.பி.எம். கட்சியின் சார்பில் உச்சிப்புளி பொது மக்கள் பெரும் ஆர்ப்பாட்டமே நடத்தி உள்ளார்கள்.

என்னதான் பிரச்னை என்று சி.பி.எம். மாவட்ட நிர்வாகி சிவாஜியிடம் கேட்டோம். ''தன் மனைவிக்குப் பதிலாக பஞ்சாயத்துத் தலைவராக விஸ்வநாதன்தான் முழுமையாகச் செயல்படுகிறார். அவருடைய மக்கள் விரோதப் போக்கு நாளுக்கு நாள் எல்லை மீறிப் போகிறது. 'பஞ்சாயத்தில் நிதி இல்லை’ என்று காரணம் சொல்லி பெரும்பாலான கடைக்காரர்களிடம் பணம் வசூலித்துவிட்டார். சொந்தமாக டிரஸ்ட் ஒன்றை வைத்துக்கொண்டு ஏகப்பட்ட மோசடி வேலைகளில் ஈடுபடுகிறார். அதனால் இவர் மீது போலீஸிலும் புகார்கள் உள்ளன.

சுடுகாட்டுல ஊர்ச்சந்தை வைக்கலாமா?

பஞ்சாயத்து அலுவலகத்துக்கு எந்த வேலையாகச் சென்றாலும், இவரைக் கவனிக்காமல் காரியம் ஆகாது. இதுவரை ஒழுங்காக நடந்துவந்த  ஊர்ச் சந்தையையும், இப்போது சுடுகாட்டுக்கு மாற்றிவிட்டார். இந்த ஊராட்சியைச் சுற்றி சுமார் 40-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த மக்கள் அனைவரும் இங்குதான் பொருட்கள் வாங்கவும் விற்கவும் வருவார்கள். கடலோரக் கிராம மீனவர்களும் இங்குதான் மீன் விற்க வருவார்கள். ஊர் மக்களிடமோ, வியாபாரிகளிடமோ எந்தக் கருத்தும் கேட்காமல், தன்னிச்சையாகவே மார்க்கெட்டை மாற்றிவிட்டார். ஊரில் இருந்து அரை கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற பொது மயான முகப்பில் மார்க்கெட் அமைத்தால், யார் வருவார்கள்? பேயும் பிசாசும் வாங்குவதற்காகவா அவர் அங்கே போய் கடையைக் கட்டி இருக்கிறார்?

சுடுகாட்டுல ஊர்ச்சந்தை வைக்கலாமா?

இதை எதிர்த்துப் போராட்டம் செய்யும் எங்களை போலீஸை வைத்தும் ரவுடிகளை வைத்தும் மிரட்டுகிறார். தமிழ்நாட்டிலேயே சுடுகாட்டில் மார்க்கெட் கட்டிய ஒரே பஞ்சாயத்து இதுதான். கலெக்டரிடம் முறையிட்டு இவரைப் பதவியைவிட்டு நீக்குவதற்கு முடிவெடுத்து உள்ளோம்'' என்றார்.

''கீழக்கரையைப் பூர்வீகமாகக் கொண்ட சாயபு ஒருவரின் வாரிசுகள் சென்னையில் பன்னாட்டு வணிகம் செய்து வருகிறார்கள். இவர்களின் 100 ஏக்கர் நிலம் உச்சிப்புளியில் உள்ளது. அவர்கள் நிலத்தை எப்போதாவதுதான் வந்து பார்த்துவிட்டுச் செல்வார்கள். இந்த ஊரில் மருத்துவமனை கட்டுவதற்காக அந்தக் காலத்திலேயே அவர்கள் இலவச நிலம் கொடுத்தார்கள். அந்த நிலம் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி இருந்ததால் விலை கன்னாபின்னாவென்று பிய்த்துக்கொண்டு போகிறது. அதை விஸ்வநாதன் போலி பத்திரம், பட்டா தயார் செய்து ஆத்ம ஜோதி நகர் என்று போர்டு வைத்து விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார். விஷயத்தைக் கேள்விப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் காவல் துறையில் புகார் கொடுத்துவிட்டார்கள். அதைத் தொடர்ந்து இவர் மீது நில மோசடி செய்ததாக வழக்குப் பதிவு செய்து, குண்டாஸிலும் போட்டார்கள். கடைசியில் அந்தக் கீழக்கரை பார்ட்டிகளிடம் சரண்டராகி மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அதனால் அவர்களும் இரக்கப்பட்டு சில கேஸ்களை வாபஸ் வாங்கி, விஸ்வநாதனை வெளியில் நடமாடவிட்டுள்ளார்கள். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு கொஞ்ச நாள் அமைதியாக இருந்தார் விஸ்வநாதன். இப்போது மனைவியின் பதவியை வைத்து அநியாயத்துக்குப் பந்தா செய்கிறார்.'' என்று அந்தப் பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

சுடுகாட்டுல ஊர்ச்சந்தை வைக்கலாமா?

இந்தக் குற்றச்சாட்டுகள்  குறித்து ஊராட்சித் தலைவர் காளீஸ்வரியின் கணவர் விஸ்வநாதனிடம் பேசினோம். ''நான் என் சொந்தக் காசைப்போட்டு டிரஸ்ட் அமைத்து, இந்த ஊருக்குத் தேவையான நன்மைகள் செஞ்சுட்டு இருக்கேன். அதுக்காக யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை. தேவை இல்லாமல் சிலர் பிரச்னையைக் கிளப்புகிறார்கள். ஏற்கெனவே இருக்கும் மீன் மார்கெட், ஊரணிப் புறம்போக்கில் இருக்கிறது. அதில் கடை கட்டக் கூடாது என்று சட்டம் இருக்கிறது. அந்த இடத்தில் டிராஃபிக் ஜாம் பிரச்னையும் இருப்பதால், அங்கே வியாபாரம் செய்யும் சிலர், பஞ்சாயத்துக்கு எந்த வரியும் செலுத்துவதும் இல்லை. அதனால்தான் யாருக்கும் இடைஞ்சல் இல்லாத சுடுகாட்டுப் புறம்போக்கில் கடைகளைக் கட்டினேன். இது தப்பா? பொது மக்களோ, பஞ்சாயத்து உறுப்பினர்களோ இதை எதிர்க்கவில்லை. நாலைந்து மீன் வியாபாரிகள்தான் தங்கள் சுயநலத்துக்காக கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் சேர்ந்துகொண்டு என் மேல் அவதூறு பரப்புகிறார்கள். இப்போது என் மீது எந்த வழக்கும் இல்லை. அடுத்ததாக காய்கறி மார்க்கெட்டையும் அங்கேதான் மாற்றப்போகிறேன்'' என்றார் அதிரடியாக.

ஊருக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள் அனைத்துத் தரப்பினரும் திருப்தி ஏற்படுத்தும் வண்ணம் அதனைச் செய்ய வேண்டும்!

- செ.சல்மான், படம்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு