Published:Updated:

விவசாய நிலத்தில் சாக்கடை குளம்!

பரிதாபத்தில் பள்ளிகொண்டா

விவசாய நிலத்தில் சாக்கடை குளம்!

பரிதாபத்தில் பள்ளிகொண்டா

Published:Updated:
##~##
விவசாய நிலத்தில் சாக்கடை குளம்!

'எங்கள் பள்ளிகொண்டா கிராமத்தின் விவசாய நிலங்கள் கழிவு நீரால் நிரம்பி வழிகிறது. அதனால் விவசாயம் செய்யவே முடியவில்லை. எங்கள் கிராமத்துக்கு வந்து பாருங்கள். உண்மை நிலை என்னவென்று தெரியும்’ என்று, ஜூ.வி. ஆக்ஷன் செல்லில் (044-66808002) ஒரு வேதனைக்குரல். உடனே, பள்ளிகொண்டாவுக்குப் புறப்பட்டோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பள்ளிகொண்டா. அங்கிருந்த 'நியூ வேர்ல்ட் அனிமல் ரெஸ்க்யூ’ என்ற புளூ கிராஸ் அமைப்பின் தலைவர் எஸ்.சுகுமாரிடம் பேசினோம்.

''பள்ளிகொண்டாவில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 15-க்கும் மேற்பட்ட வார்டுகளில் சேரும் கழிவுநீர், கீழ்அச்சூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் கலக்கின்றன. முறையான கால்வாய் கட்டப்படாததுதான் இதற்குக் காரணம். விவசாய நிலம் அனைத்தும் முறைப்படி பட்டா செய்யப்பட்டவை. நிலத்தின் உரிமையாளர்கள் பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால், பயிர் செய்ய முடியாமல் சோர்ந்து விட்டனர். இந்தக் கிராமம் 500 ஏக்கர் கொண்ட பசுமை பூமி. நிலத்தடிநீர் அதிகம் உள்ள பகுதி இது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளாகவே கழிவு நீரால் பாதிக்கப்பட்டு வீணாகி விட்டது. கடந்த தி.மு.க. ஆட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த ராஜேந்திரனிடம் 20 முறைக்கும் மேல் மனு கொடுத்தோம். அடுத்து வந்த ஆட்சியர் நாக ராஜனிடம் 10 முறைக்கும் மேல் மனு கொடுத்தோம். ஆனாலும், எந்தப் பிரயோஜனமும் இல்லை.

விவசாய நிலத்தில் சாக்கடை குளம்!

நிலத்தில் இப்போது துர்நாற்றமும் பூச்சி, பாம்புத் தொல்லைகளும் அதிகரித்து விட்டன. கடந்த மாதம் மட்டும் இந்தச் சாக்கடையால் பாதிக்கப்பட்டு 30-க்கும் மேற்பட்டோர் வாந்தி, பேதி, குளிர் காய்ச்சலில் பாதிக்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி உள்ளனர். நிலைமை இன்னும் மோசமாவதற்குள் அரசு நடவடிக்கை எடுத்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்'' என்றார்.

விவசாய நிலத்தில் சாக்கடை குளம்!

அமைப்பின் செயலாளரான துளசிராமன், ''கடந்த மாதம் இரண்டு மாடுகள் இந்தச் சாக்கடையில் சிக்கிப்

விவசாய நிலத்தில் சாக்கடை குளம்!

பரிதாபமாக இறந்து விட்டன. இடுப்பு அளவு ஆழத்துக்குச் சாக்கடை நீர் நிலத்தில் தேங்கிக் குளம் போல் இருக்கிறது. இரண்டு கிணறுகளில் சாக்கடை நீர் கலந்து நச்சுத்தன்மையாக மாறிவிட்டது. தாகத்துக்குத் தண்ணீர் தேடிவரும் பறவைகள் இந்தக் கிணற்று நீரைக் குடித்து இறந்துபோகின்றன. இன்று, பறவைகளுக்கும் மாடுகளுக்கும் ஏற்படும் நிலை நாளை இந்தப் பகுதி மக்களுக்கு ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை சாக்கடை நீர் உள்ளதால், பாலாற்றில் போர்வெல் மூலம் எடுக்கப்படும் குடிநீரிலும் நச்சுத்தன்மை கலந்து மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது'' என்றார்.

கீழ்அச்சூர் விவசாயிகளிடம் பேசினோம். ''நிலத்தைப் பார்த்து கண்ணீர்விட்டு அழுவதைத் தவிர, வேற வழி தெரியலை. 15 வருடங்களுக்கு முன்பு நெல், கரும்புன்னு வளமா இருந்த பூமி. இப்போ முழுசும் நாசமாகிட்டு வருது. எங்க பொழைப்பே போச்சுங்க'' என்றனர் சோகத்துடன்.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த பேரூராட்சித் தலைவர் சுப்பிரமணியிடம் பேசினோம். ''நாங்களும் எல்லா முயற்சிகளும் செய்துகொண்டேதான் இருக்கிறோம். கால்வாய் கட்ட வேண்டும் என, பொதுப் பணித் துறைக்கும் கலெக்டருக்கும் பலமுறை நினைவூட்டி விட்டோம். விரைவில் முடித்துக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்'' என்றார்.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் அஜய் யாதவிடம் பேசினோம். ''இப்போதுதான் இந்தப் பிரச்னையை எனக்குத் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள். விவசாய நிலங்களைக் காப்பாற்றுவது அரசின் கடமைகளில் ஒன்று. அந்தப் பகுதிக்கு நேரடியாகச் சென்று என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறேன். கூடிய விரைவில் அங்குள்ள மக்களுக்கு நன்மை கிடைக்க வழி செய்கிறேன்'' என்று உறுதி அளித்தார்.

நீங்களாவது செய்யுங்க சார்!

- கே.ஏ.சசிகுமார்

படங்கள்:   கா.முரளி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism